அச்சன்புதூரில் புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது
1 min read
Two arrested in Achanpudur for smuggling tobacco products in a car
6.10.2026
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ94,400 மதிப்பிலான 133 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்களை அச்சன்புதூர் காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அசோக்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்பேரில் நேற்று அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சன்புதூர் – காசிதர்மம் மெயின்ரோட்டில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு காரைச் சோதனை செய்ததில் அந்தக் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அந்த காரில் வந்த இரண்டு நபர்களையும் பிடித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர்கள் அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த கனியப்பா என்பவரது மகன் சாகுல் ஹமீது (வயது 44), மேலும் அதே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரது மகன் தாஜ்தீன் (வயது 47) என்பது தெரிய வந்தது.
உடனடியாக அந்த 02 நபர்களையும் கைது செய்த, போலீசார் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 94,400 மதிப்பிலான 133 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்,
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற உத்தரவுபடி அவர்களை சிறையில் அடைத்தனர்.