விமானத்தில் வைத்தே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது
1 min read
CJP founder Abhijit Dipke arrested on board the flight
10.10.2026
விமானத்திற்குள்ளேயே ஏறிச் சென்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவை டெல்லி காவல்துறை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற் பட அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே நீட் விவகாரத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர். இந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் இன்று (சனிக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவி்க்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்தனர். டெல்லியின் முக்கிய எல்லைகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய பகுதிகளில் 25,000 போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
போராட்டக்காரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் எல்லைப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. விதிகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயல்பவர்களை தற்காலிகமாகக் காவலில் வைப்பதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் 12 தற்காலிக தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. எல்லைகளில் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள், மற்றும் முள்வேலிகள் அமைத்து சாலைகள் முழுமையாக மூடப்பட்டன.
இந்தநிலையில், போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து இளைஞர்கள் மற்றும் சிஜேபி ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுத்து வந்தது தெரியவந்தது. .
இதனிடையே போராட்டக் களத்திற்கு வந்து போராட முயன்ற 1000த்திற்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், அபிஜித் தீப்கே. போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார்.
டெல்லியில் தரையிறங்கிய உடன், விமானத்திற்குள்ளேயே ஏறிச் சென்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
பயணிகளின் இருக்கைகளுக்கு நடுவே புகுந்து சிஜேபி-யின் அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்காவை போலீசார் பலவந்தமாக கைது செய்தனர். தடையை மீறி போராட்டம் நடத்த மும்பையில் இருந்து டெல்லி வந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டர். முறையாக விண்ணப்பிக்காத காரணத்தினால் டெல்லி சிஜேபி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
முன்னதாக, “நான் கைது செய்யப்படுவதற்காக இங்கு வந்துள்ளேன்; என்னைக் கைது செய்யுங்கள்,” என்று அபிஜீத் திப்கே டெல்லி காவல்துறையிடம் கூறுகிறார்.
“இல்லை, இது கைது நடவடிக்கை அல்ல. தயவுசெய்து ஒத்துழைக்கவும்,” என்று டெல்லி காவல்துறையினர் அவரிடம் கூறினார் இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.