ரஷியாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவ- ஜெலன்ஸ்கி கடும் கோபம்
1 min read
US decision to purchase diesel from Russia – Zelenskyy furious.
10.10.2026
அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் டீசல் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷியாவுக்கு வருவாய் கிடைப்பது, உக்ரைன் மீதான போரைத் தொடர உதவும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போர் நீடித்துக்கொண்டே செல்கிறது. ரஷியாவிடம் இருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் கொள்முதல் செய்து, அந்த நாட்டை வளப்படுத்துவதாகவும், அதன் காரணமாகவே ரஷியா தொடர்ந்து சண்டையிட்டு வருவதாகவும் டிரம்ப் விமர்சித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு கடுமையான வரியையும் விதித்தார். ஆனால், தற்போது திடீர் திருப்பமாக அமெரிக்காவே ரஷியாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிறகு, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு டீசல் விநியோகம் செய்ய ரஷியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது:
இதன்படி, உடனடியாக 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான டீசல் விநியோகம் செய்யப்படும் என்றும், நவம்பர் மாதத்தில் மேலும் 5 லட்சம் மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து மேலும் 10 லட்சம் மெட்ரிக் டன் டீசல் விநியோகம் செய்யப்படும் அமெரிக்காவில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையைக் குறைப்பதே தனது முக்கிய நோக்கம்”
இவ்வாறு அவர் கூறினார்.
டிரம்பின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “புதினுக்கு வழங்கப்படும் சலுகைகள் அமைதியைக் கொண்டுவராது. ரஷியா பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பது, முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய போரை நீட்டிப்பதற்கான முதலீடாகும்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்துவதற்குப் பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர அடிப்படையில் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.