கோபிசெட்டிபாளையம்: அணை சேற்றில் சிக்கிய பெண் யானை உயிரிழப்பு
1 min read
Gobichettipalayam: Female elephant trapped in dam silt dies.
12/10/2026
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் டி.என். பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் குறைந்து ஆங்காங்கே தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது. தண்ணீர் வற்றியதால் அணையின் எல்லைப் பகுதிகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று, அங்கிருந்த சேற்றில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் அவதிப்படுவது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில், வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினரும், வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் அங்கு வந்தனர். மற்றும் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களின் உதவியுடன், கயிறு மற்றும் பெல்ட்களைக் கட்டி சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், அந்த யானைக்கு வயது அதிகம் என்பதால், தானாக எழுந்து நிற்க முடியாமல் உடல் சோர்ந்து காணப்பட்டது. இதனால், வன கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக்கு ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தி தீவிர சிகிச்சை அளித்தனர். அதே நேரத்தில், ஹிட்டாச்சி இயந்திரத்தின் உதவியுடன் யானையை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது.வனத்துறையினர் முகாம் அமைத்து அணை பகுதியில் இருந்தபடியே அந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இன்று காலை மீண்டும் மீட்புப் பணியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதை தொடர்ந்து, உயிரிழந்த யானையின் உடல் அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்த பிறகு, குழி தோண்டி உடல் அடக்கம் செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.