சிவகாசியில் ரூ.2.60 கோடியில் புதிய கட்டிடங்கள்- அமைச்சர் கீர்த்தனா திறந்து வைத்தார்
1 min read
New buildings worth Rs2.60 crore in Sivakasi – Minister Keerthana inaugurates them
12/10/2026
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ரூ.1.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடம் மற்றும் பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.70.68 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில், இன்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், அரசு அலுவலகங்களின் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சிவகாசி சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் ரூபாய் 1.89 கோடி மதிப்பில் அலுவலக அறை, கணினி அறை, பொது கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, சாய்வு தளம், ஆவண காப்பக அறை, சேமிப்பு அறை, எழுதுபொருட்கள் வைப்பறை, உணவு மருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் இரண்டு தளங்களுடன் சுமார் 408.31 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்திற்குப் பதிலாகப் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன அலுவலகச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான சொத்து ஆவணங்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும், அலுவலகப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்கவும் புதிய கட்டடம் உதவியாக இருக்கும்.
மேலும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.70.68 இலட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 279.04 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை வசதிகளை மேம்படுத்துவதுடன், கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது. மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி கல்வி பயில்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தான் அரசின் முக்கிய நோக்கமாகும். கல்வித்துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கும், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.
எனவே, பொதுமக்களுக்கான அரசுச் சேவைகளை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், மாவட்ட பத்திர பதிவாளர் கந்தப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் அரவிந்தன், சார் பதிவாளர் இளங்கோவன், அரசு அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.