October 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறப்பு ‘டெட்’ தகுதி தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் ‘பெயில்’

1 min read

1.10 lakh teachers fail special TET qualifying exam.

13.10.2026
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு, ‘டெட்’ தேர்வில், 1.10 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், ‘டெட்’ தேர்வு எழுதுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த சூழலில், ஆசிரியர்களின் நலனுக்காக, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு மூன்று சிறப்பு ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடந்தது. இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை, 58,902 பேர் தேர்வு எழுதினர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை, 1 லட்சத்து, 58,617 பேர் எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.

தகுதி மதிப்பெண்ணாக, பொதுப் பிரிவினருக்கு, 90; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 75; எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு 60 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதில், டெட் முதல் தாள் தேர்வில் 47,594 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 60,732 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் தாள் என, மொத்தமாக தேர்வெழுதிய 2 லட்சத்து, 17,519 ஆசிரியர்களில், 1 லட்சத்து, 8,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறப்பு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், அடுத்த 5 நாட்களில், தங்களின் தகுதி சான்றிதழ்களை, https://trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்ச்சி நிலவரம்

தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி சதவீதம்

டெட் முதல் தாள் 58,902 47,564 80

டெட் இரண்டாம் தாள் 1,58,617 60,732 38

சிறப்பு டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, அடுத்து நடக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, இனி நேரடி பயிற்சிகள் வழங்கப்படும். பணி சூழல், குடும்ப சூழல் ஆகியவை ஆசியர்களின் தேர்வு முடிவுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *