12 வயது சிறுவனை கடத்தி பாலியல் துன்புறுத்தியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
1 min read
20 years in prison for man who kidnapped and sexually abused a 12-year-old boy
13.10.2026
திருநெல்வேலி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனை, தூத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 57) என்பவர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன் பேரில் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 2.9.2022 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்சொன்ன நபரை கைது செய்தார்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார் இன்று (13.10.2026) குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய வள்ளியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி (தற்போது வள்ளியூர் AWPS), வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் இந்திராணி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும்,1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.