விருதுநகரில்இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்
1 min read
In Virudhunagar, District Collector presents certificates of appreciation to blood donation camp organizers
15.10.2026
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், இரத்ததான முகாம் அமைப்பாளர்கள் மற்றும் இளம் இரத்தகொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி பேசியதாவது:
முதலிடத்தில் தமிழகம்:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினமாகக் கொண்டாடப்படுகிறது. “மனிதநேயத்திற்காக ஒரு துளி குருதியைக் கொடுத்து மனித உயிர்களைக் காப்பாற்றுவோம்” என்பதே இந்த ஆண்டின் மையக்கருத்தாகும். இந்திய அளவில் இரத்ததானம் வழங்குவதில் 99 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலி இடத்தில் திகழ்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகாசி தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் அரசு மருத்துவமனைகள் இரத்த சேமிப்பு மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
19,063 யூனிட் இரத்தம் சேகரிப்பு:
கடந்த 2025-2026-ஆம் நிதியாண்டில் அரசு மருத்துவமனைகள் மூலம் 4,709 யூனிட் இரத்தமும், 227 இரத்ததான முகாம்கள் வாயிலாக 14,354 யூனிட் இரத்தமும் என மொத்தம் 19,063 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட 106 முகாம் அமைப்பாளர்கள் மற்றும் 19 இளம் இரத்தகொடையாளர்கள் என மொத்தம் 125 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருவர் தானம் செய்தால் 4 உயிர்கள் வாழலாம்:
கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் இரத்தமானது பிரசவ நேர சிகிச்சைகள், விபத்து காயங்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு இரத்த தட்டணுக்கள் வழங்கி உயிர் காக்கப் பயன்படுகிறது. தற்போது ஒருவரிடமிருந்து பெறப்படும் இரத்தம் மூலம் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
மேலும், ‘இ-ரக்டோஸ்’ (e-Raktkosh) இணையதளத்தில் கொடையாளர்கள் விவரங்களை பதிவு செய்து, ‘ஒரே நாடு ஒரே தளம்’ என்ற கொள்கையின் கீழ் இரத்த இருப்பின் நிலவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திரளானோர் பங்கேற்பு:
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.அமுதாராணி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) ஆ.காளிராஜ், துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் ஆனந்தீஸ்வரி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.