October 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தேவர் குருபூஜை விதிமுறை- விருதுநகர் ஆட்சியர் ஆலோசனை

1 min read


Thevar Guru Puja – Consultation by Virudhunagar District Collector

15.10.2026
தேவர் ஜெயந்தி மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தலைமையில் இன்று (15.10.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் BNSS பிரிவு-163(1)-ன் கீழ் தடை உத்தரவு அமலில் உள்ளதால் விழாவிற்குச் செல்பவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார். மரியாதை செலுத்த விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் 5 நபர்களுக்கு மிகாமல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும்.

மரியாதை செலுத்தச் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்குச் சென்று திரும்ப வேண்டும். சட்டம்-ஒழுங்கைக் கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்களைச் சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். சொந்த வாகனங்கள் மூலம் வருகை தருபவர்கள் வாகன எண் மற்றும் பயணம் செய்வோர் விவரங்களை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு முன்பாகக் காவல்துறை மூலமாக வாகன அனுமதிச் சீட்டு (Vehicle Pass) பெற்று வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் வேன் மற்றும் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் செல்ல அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் பயணம் செய்யக் கூடாது. ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது. அஞ்சலி செலுத்தச் செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதையும், ஒலிபெருக்கிகளைப் பொருத்திச் செல்வதையும், மேளதாளம் அடித்துச் செல்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்டோபர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் காலை 8.00 மணிக்குள் புறப்பட வேண்டும். வாகனங்களில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சிக் கொடிகள் மற்றும் ஜோதி தொடர்பான உபகரணங்களை எடுத்து வரக்கூடாது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள், கொடிகள், தோரண வளைவுகள் வைக்க அனுமதியில்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், தலைவர்களின் வேடமணிந்து செல்லுதல் மற்றும் நடைபயணமாகச் செல்லுதல் ஆகியவற்றிற்கும் அனுமதியில்லை.

விழாவினை முன்னிட்டு அன்னதானக் கூடம் அமைப்பவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும், பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறையிடமிருந்து உறுதித்தன்மை மற்றும் மின்னழுத்த நிலைத்தன்மை சான்றிதழ்களைப் பெற வேண்டும். இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் மற்றும் அரசு அலுவலர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *