ஈக்வடார் நாட்டில் தேவாலயத்தில் சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பலி
1 min read
Priest killed after crucifix falls from church in Ecuador
20.10.2026
ஈக்வடார் நாட்டில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென சிலுவை மேலே இருந்து சரிந்து விழுந்ததில் பாதிரியார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில் பகுதியில் உள்ள தேவாலயத்தில், பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் (53) கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைமக்களுக்குத் திருப்பலி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்புறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரென மேலே இருந்து சரிந்து அவர் மீது விழுந்தது.
சிலுவை விழுந்த அதிர்ச்சியில் பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதன் வீடியோ காட்சிகளில், கீழே விழுந்த சிலுவை பீடப் பகுதியில் கிடப்பதும், பாதிரியார் பார்வையில் இருந்து மறைந்து போவதும் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து குவாயாகில் பேராயர் மறைமாவட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
பலியான பாட்ரிசியோ சான்செஸ் அந்தத் தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தார். மேலும், அவர் ‘மிகப் பரிசுத்த மீட்பரின் சபை’யின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.