காசி தமிழ் சங்கமத்தின் 5-ம் ஆண்டு விழா-இணையதள முன்பதிவு தொடக்கம்
1 min read
5th Edition of Kashi Tamil Sangamam – Online Registration Begins
23.10.2026
தமிழ்நாட்டுக்கும், காசி எனப்படும் வாரணாசிக்கும் இடையே பன்னெடுங்கால தொடர்பு உள்ளது. இதனை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வித்துறை சார்பில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்வு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதன் மூலம் கலாசார பரிமாற்றம் மட்டுமின்றி கல்வி, தொழில் போன்றவற்றிலும் பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. விட்டுப்போன உறவு மீண்டும் துளிர்த்தது போல இந்த நிகழ்வு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சங்கமத்தின் 5-ம் ஆண்டு நிகழ்வு, அதாவது 5.0, அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை மத்திய கல்வித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி இன்று தெரிவித்தார். அப்போது இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவையும் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், “மக்கள் தங்களுடைய சமய மரபுகளின் ஒரு பகுதியாக காசிக்கும். ராமேசுவரத்துக்கும் பயணிப்பது நாட்டின் வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய கலாசார தொடர்புகளை பிரதிபலிக்கிறது. தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் பொதுவான நாகரிக பாரம்பரியத்தை கொண்டாடுவதிலும் காசி தமிழ்ச்சங்கமம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று கூறினார்.
இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள். தொழில் நிபுணர்கள், விவசாயிகள், கலைஞர்கள், பெண்கள், ஆன்மிக அறிஞர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார். மேலும், இந்நிகழ்வின் நோக்கங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் உயர்க்கல்வி நிறுவனங்களில் பல்வேறு கல்விசார் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த சங்கம நிகழ்வை, சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவை மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறையுடன் இணைந்து நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலில் நடைபெறுவதன்படி இந்த ஆண்டு “திருக்குறள் பயில்வோம்” என்ற தலைப்பில் சங்கம விழா நடைபெறுகிறது.
நேற்று தொடங்கிய இதன் இணையதளப் பதிவு அடுத்த மாதம் 13-ந்தேதி நிறைவடைகிறது. சங்கம நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்த தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள் பங்கேற்கின்றன. இவர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.