October 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.7 செலவு செய்து ரூ.1 கோடி பரிசை தட்டிச்சென்ற பெண்

1 min read

Woman wins a Rs. 1 crore prize after spending Rs. 7

23.10.2026
பஞ்சாப் மாநிலத்தில் வெறும் ரூ.7-க்கு லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. கூலித்தொழிலாளியின் மனைவிக்கு அடித்த இந்த அதிர்ஷ்டம், அவரது குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றும் என எதிர்பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலம், பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா பகுதியைச் சேர்ந்தவர் பிம்லா தேவி (வயது 45). இவரது கணவர் கூலித்தொழில் செய்து வருகிறார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் சவாலாக இருந்த நிலையில், பிம்லா தேவி வாங்கிய ஒரு லாட்டரி சீட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரெயில்வே சாலையில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்றபோது பிம்லா தேவி, அங்குள்ள ஸ்டார் லாட்டரி விற்பனை நிலையத்தில் வெறும் ரூ.7 கொடுத்து சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். லாட்டரி குலுக்கல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளில் அவர் இந்தச் சீட்டை வாங்கியுள்ளார்.

மறுநாள் லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பிம்லா தேவி வாங்கிய சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது. இதைக் கேள்விப்பட்ட அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் மூழ்கி போயினர்.

லாட்டரி கடைக்காரர் நரேஷ் மோங்கா, இந்த மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து, குடும்பத்தினர் லாட்டரி கடைக்குச் சென்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற கடை உரிமையாளர், இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதுடன், உற்சாகத்தில் பாங்க்ரா நடனமும் ஆடினார்.

ரூ.1 கோடி பரிசுத் தொகை கிடைத்திருப்பது தங்களது குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளைக் தீர்க்க உதவும் என்று பிம்லா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கவும், அவர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இந்தப் பணம் உதவும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து குடும்பத்தினர் இன்னும் முடிவு செய்யவில்லை. அனைவரும் ஒன்றாக ஆலோசித்து, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஏதேனும் தொழில் தொடங்குவது குறித்துத் திட்டமிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பணத்தின் மூலம் தனது குடும்பத்தின் வறுமையை போக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லாட்டரி கடை உரிமையாளர் நரேஷ் மோங்கா கூறுகையில், கடந்த 6 மாதங்களாக லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும், சமீபத்தில்தான் ரெயில் நிலையம் அருகே கடையை மாற்றியதாகவும் தெரிவித்தார்.

தனது கடையில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மூலம் ஏற்கெனவே பலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் பரிசுகள் கிடைத்துள்ளன. இருப்பினும், தனது கடையில் விற்பனையான சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வெறும் ரூ.7 முதலீட்டில் கிடைத்த இந்த அதிர்ஷ்டம், பிம்லா தேவியின் குடும்பத்தினருக்குப் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தற்போது அவர் அந்த பகுதியில் ஒரு கோடீஸ்வரராக வலம் வருவார் என்றே கூறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *