தென்காசி: மண் பரிசோதனை பரிந்துரைகளின் படி இரசாயன உரமிட ஆட்சியர் அறிவுரை
1 min read
Tenkasi: Collector advises applying chemical fertilizers based on soil test recommendations
3.11.2026
தென்காசி மாவட்டத்தில் மாவட்டத்தில் நெல், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
அனைத்துப் பயிர்களுக்கும் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் போரான் ஆகியவற்றின் அளவினை மண் பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு பருவத்திலும் துல்லியமாக தேவையான அளவு சத்துக்களை தெரிந்துகொண்டு பரிந்துரைக்கப்படும் அளவில், பரிந்துரைக்கப்படும் காலத்தில் இடுவதன் மூலம் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக உரங்கள் இடுவதை தடுக்கலாம். அதிக மகசூல் பெறலாம்.
மண் மாதிரி எடுக்கும் முறை:-
மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சாகுபடி செய்யப்படும் பயிரைப் பொறுத்து தேவையான ஆழத்திற்கு V வடிவத்தில் மண் வெட்டியினால் குழி வெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
வெட்டிய வி வடிவ குழியின் ஓரமாக இரண்டு புறமும் ஒரு அங்குல கனத்திற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான பொருட்களைக் கொண்டு மண்ணை சேகரித்துக்கொள்ளவும். இவ்வாறு வயலின் பல்வேறு இடங்களில் சேகரித்த மண்களை நன்கு கலந்து ஒன்றாக குவித்து அவற்றை வட்டமாக பரப்பி நான்காகப் பிரிக்க வேண்டும். நான்கு பாகங்களில் எதிர் எதிர் பகுதியில் வருவனவற்றை சேர்த்து இரண்டு குவியலாக கொண்டுவந்து ஒன்றை நிராகரிக்க வேண்டும். மற்றொன்றை மீண்டும் கலந்து வட்டமாக பரப்பி அந்த குவியலை நான்காக பிரிக்க வேண்டும். இந்த நான்கு பகுதியில் எதிர் எதிராக உள்ளவற்றை இணைத்து இரண்டு குவியலாக சேர்க்க வேண்டும். முதல்முறை நிராகரிக்கப்பட்ட திசையில் உள்ள இரண்டு குவியல்களை இந்தமுறை நிராகரிக்காமல் அடுத்த முறை வட்டமாக பரப்பி மீண்டும் நான்காக பிரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மொத்தம் சுமார் அரை கிலோ அளவுக்கு வரும் வரை செய்ய வேண்டும்.
இவ்வாறு பகுத்தல் முறையில் எடுக்கப்பட்ட மாதிரியை துணிப்பையில் இட்டு மண்பரிசோதனை நிலையத்துக்கு விவசாயியின் பெயர். முகவரி, சர்வே எண். கிராமம், உரப்பரிந்துரை தேவைப்படும் பயிர். இரகம், பாசன முறை, மண் பிரச்சனை ஏதுமிருப்பின் அதன் குறிப்பு, ஆகிய விபரங்களுடன் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்
நெல், ராகி, கம்பு, கடலை போன்ற குட்டை வேர் பயிர்களுக்கு 15 செ.மீ ஆழத்திற்கும் பருத்தி, கரும்பு, மிளகாய், மரவள்ளி போன்ற ஆழமான வேர் பயிர்களுக்கு 22 5 செ.மீ ஆழத்திற்கும் தோண்ட வேண்டும். மா, எலுமிச்சை போன்ற பழத்தோட்டப் பயிர்கள் மற்றும் தென்னை போன்ற மரப்பயிர்களுக்கு 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதில் முதல் அடியில் ஒரு மாதிரியும் 2வது அடியில் ஒரு மாதிரியும் 3வது அடியில் ஒரு மாதிரியும் ஆக 3 மண் மாதிரிகளை தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.
எரு குவித்து வைத்திருந்த இடங்கள், வரப்பு ஓரங்கள். மரங்களின் நிழல்படரும் பகுதிகள் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களில் இருந்து மண் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒருங்கிணைந்த உர நிர்வாகம் :-
சமச்சீர் உர நிர்வாகம் செய்வதற்கு இரசாயன உரங்களை மண்பரிசோதனை செய்து துல்லியமாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதோடு இயற்கை உரங்களையும், பசுந்தாள் உரங்களையும், பசுந்தழை உரங்களையும் அதிக அளவில் பயன்படுத்துவது அவசியமாகும். பயிர் கழிவுகளையும், விலங்குகளின் கழிவுகளையும் மட்க வைத்து உரமாக பயன்படுத்தி அதிக பயன் பெறலாம்.
அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ், பாக்டீரியா, துத்தநாகம் நகர்த்தும் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தி உற்பத்தித் திறனை பெருக்கலாம். மேலும் இரசாயன உரத் தேவைகளை குறைக்கலாம். இந்த உயிர் உரங்கள் தமிழ்நாடு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பயிர்களின் வளர்ச்சிக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்களோடு, பல்வேறு நுண்ணூட்டச் சத்துக்களும் அவசியமாகும். மண் பரிசோதனை செய்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் நுண்ணூட்டச்சத்து வழங்கும் உரங்களைப் பயன்படுத்தலாம். மேலும் வேளாண்மைத் துறையால் பரிந்துரைக்கப்படும் நுண்ணூட்டக் கலவை உரங்களையும் வாங்கி பயன்படுத்தலாம்.
மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.