செங்கோட்டை அருகே ரெயிலில் அடிபட்டு ஆண்புலி இறந்தது
1 min read
A male tiger died after being hit by a train near Sengottai.
4.11.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை – பகவதிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பூலாங்குடியிருப்பு அருகே இன்று அதிகாலையில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், இது குறித்து ரயில் இன்ஜின் டிரைவர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு காலை 3.30க்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்,
சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு , உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தார். ரயில் மோதியதில் புலியின் தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனௌத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரயில் போக்குவரத்துக்காக தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழந்து கிடந்த புலியை வேறு இடத்திற்கு மாற்றிய வனத்துறையினர், விதிமுறைகளின் படி இது தொடர்பாக மருத்துவ குழுவினர் மற்றும் புலிகள் காப்பக ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டு நடைமுறைகளின்படி, வனஉயிரினக் காப்பாளரின் பிரதிநிதியாக செல்வராஜா, நிர்வாக அறங்காவலர், தேசிய புலிகள் ஆணையத்தின் நியமனப் பிரதிநிதி மதிவாணன் மற்றும் அதிகாரிகள் மற்றும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் புலியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புலியின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும், தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாகவே புலியானது உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்தது, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மனோகரன் சாந்தகுமார், சிவகுமார் ஆகியோர் உடற்கூறு ஆய்வினை மேற்கொண்டனர்.
அப்போது வனப்பாதுகாவலர் முருகன், மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், உதவி வனப் பாதுகாவலர் நெல்லை நாயகம், வனசரக அலுவலர் யாசின், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் செந்தில் மற்றும் குழுவினர், காவல் ஆய்வாளர், செங்கோட்டை மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் ,வி. எ.ஒ உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிகாரிகள் மற்றும் புலிகள் காப்பகத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் புலியின் உடல் சம்பவ இடத்தில் எரியூட்டப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை சார்பில் வனக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலி உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.