November 4, 2026

Seithi Saral

Tamil News Channel

குலசை: பெண் காவலருக்கு வாட்ஸ்அப்பில் தொந்தரவு கொடுத்த இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

1 min read


Kulasei: Inspector who harassed a female police officer via WhatsApp moved to the waiting list

4.11.2026
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்த குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) இன்னோஸ்குமார் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி (DIG) ஆர். திருநாவுக்கரசு மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்திருவிழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவ்வகையில், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இன்னோஸ்குமாரும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் காவலரும் அங்கு இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்புப் பணியின் போது, ஆய்வாளர் இன்னோஸ்குமார் அந்த பெண் காவலரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தேவையற்ற குறுந்தகவல்களை (Messages) அனுப்பி, அவருக்கு மனரீதியாக தொந்தரவு கொடுத்து அதிர்ச்சி அடையச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த பெண் காவலர், இந்த விவகாரம் குறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு அவர்களிடம் நேரடியாகச் சென்று தைரியமாகப் புகார் அளித்தார்.

பெண் காவலரின் புகாரைப் பெற்றுக் கொண்ட டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, இச்சம்பவம் குறித்து உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் முதற்கட்டமாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புகாருக்குள்ளான ஆய்வாளர் இன்னோஸ்குமாரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய பொறுப்பிலிருந்து விடுவித்து, உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர் கொடுத்த புகாரின் மீது எவ்விதத் தாமதமும் இன்றி, புயல் வேகத்தில் விசாரித்து மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசுவின் இந்த அதிரடி அதிரடி நடவடிக்கை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சக பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *