November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியரை தாக்கிய அரசு மருத்துவர் – பரபரப்பு

1 min read

Government doctor assaults nurse at Puliyangudi Government Hospital – Sensation ensues

5.11.2026

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லாவண்யா சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். புளியங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால் மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மாதத்தின் 15 நாட்கள் மாற்றுப் பணியாக புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்ற லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கட ந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் எலும்பு பிரிவு மருத்துவர் விஜய் பிரதாப் சிங் என்பவர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் லாவண்யாவிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறிது நேரத்தில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து புளியங்குடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் போதிராஜிடம் கேட்டபோது மருத்துவர் விஜய் பிரதாப் சிங் விளையாட்டாகவே செவிலியர் லாவண்யாவை தாக்கியதாகவும் இதனால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் செவிலியர் லாவண்யா தனது குடும்பத்தினருடன் வந்து இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் செவிலியரை மற்றொரு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தாக்கியதாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிடத்தில் பெண் செவிலியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மருத்துவத்துறை நிர்வாகத்தின் கடமை என்பதால் இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *