செண்பகவல்லி அணையை சீரமைக்க அனுமதி கோரிகேரள முதல்வரிடம் மனு
1 min read
Petition submitted to Kerala Chief Minister seeking permission to renovate the Shenbagavalli Dam
5.11.2026
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கேரள முதல்வர் வி.டி. சதீசனிடம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு உறுப்பினருமான தி.மு. இராசேந்திரன் கோரிக்கை மனு அளித்தார்.
1873-ம் ஆண்டு சிவகிரி ஜமீன்தாருக்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செண்பகவல்லி அணை கட்டப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து, தமிழகப் பகுதிகளுக்குத் திருப்பி விடுவதே இந்த அணையின் முக்கிய நோக்கமாகும்.இந்த அணையிலிருந்து வரும் தண்ணீர் வாசுதேவநல்லூர் தலையணை யைச் சென்றடைந்து, அங்கிருந்து இராசிங்கப்பேரி மற்றும் குலசேகர ஆழ்வார் ஆகிய இரண்டு கால்வாய்கள் வழியாகப் பிரிந்து செல்கிறது.
இந்நிலையில், 1965-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைச் சீற்றம் மற்றும் பெருவெள்ளத்தால் அணையின் கால்வாய்ப் பகுதியில் சில மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. சுமார் 50 ஆண்டுகளைக் கடந்தும் இந்த உடைப்பு இதுவரை சீரமைக்கப்படாமல் இருப்பதால், தமிழகப் பகுதிகளுக்கான தண்ணீர் வரத்து குறைந்து விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
செண்பகவல்லி அணையின் உடைப்பைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் சுமார் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், மூன்று மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பெரிதும் உதவுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த அணையைச் சீரமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இதனால் அணையை நம்பியுள்ள மூன்று மாவட்ட மக்களும் விவசாயிகளும் சுமார் 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், திருவனந்தபுரத்தில் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அகில இந்திய பொது கணக்குக் குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்ற கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு பொதுக்கணக்குக் குழு உறுப்பினருமான தி.மு. இராஜேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஈ. ராஜா சார்பிலும், கேரள முதல்வர் வி.டி. சதீசனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
அப்போது, செண்பகவல்லி அணையின் உடைப்பைச் சீரமைக்க கேரள அரசு உரிய அனுமதி வழங்கி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும், இதன் மூலம் மூன்று மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.