ஒசூரில் கட்டடம் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி
1 min read
3 workers killed as building collapses in Hosur
6.11.2026
ஓசூரில் தனியார் நிறுவன கட்டுமான பணியின்போது, கட்டடம் சரிந்து, 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தனியார் நிறுவனத்தின் முகப்பில், ‘ஆர்ச்’ வடிவிலான நுழைவாயில் அமைக்க கட்டுமான பணி நடந்தது. இதற்காக போடப்பட்ட பில்லர்களுக்கு மேல், இன்று (நவ.,5) கான்கிரீட் போடும் பணியில், 17 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இன்று மாலை, 3:30 மணியளவில் பணிகள் முடிந்த நிலையில், கான்கிரீட் கலவை எடுத்து செல்லும், ‘டிரே’வை கழற்றி கீழே அனுப்பினர். அப்போது, ‘டிரே’ கீழே பில்லருடன் இருந்த முட்டு கொடுக்கப்பட்ட பகுதியில் மோதியது. இதில் ஏற்பட்ட அதிர்வால், பில்லர்கள் உடைந்து, கூரையுடன் கான்கிரீட் அப்படியே சரிந்தது.
கான்கிரீட் தளத்தில், 8 பேரும், கீழே, 9 பேரும் இருந்த நிலையில், அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கதறினர். ஓசூர் தீயணைப்பு துறையினர், பொக்லைன் உதவியுடன், கம்பி, கான்கிரீட் துண்டுகளை உடைத்து அகற்றி, இடிபாடுகளுக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
இதில், குமரேசன், 39, மைக்கேல், 26, சீனிவாசன், 26, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.