அடவிநயினார் கோவில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
1 min read
Release of water from the Adavinainar Koil Dam
16.11.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமம் அடவிநயினார் கோவில் நீர் தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா, இன்று (16.11.2026) தண்ணீர் திறந்துவிட்டார்.
அடவிநயினார் நீர்த்தேக்கத்திட்டம் ரூ.6089.97 இலட்சத்திற்கு உலகவங்கியின் நிதி உதவியோடு 2004 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட திட்டமாகும். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ்புறமாக சிற்றாற்றின் உபநதியான அனுமாநதியின் குறுக்கே 2004 ஆம் ஆண்டு முழுவதும் கல்லணையால் 175.40 மி.கன அடி கொள்ளளவில் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
இதன் நீளம் 670 மீ. இதில் கரிசல் கால், மேட்டுக்கால் என்ற இரு மதகுகளும் 100 மீ நீளத்தில் ஒரு வழிந்தோடியும் உள்ளது. அனுமான் நதியில் மொத்தம் 14 அணைக்கட்டுகள் உள்ளன. இதில் தலையணை முதல் ரெட்டைகுளம் அணை வரை உள்ள 11 அணைக்கட்டுகள், இதன் மூலம் 43 குளங்கள் பயன்பெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தென்காசி மாவட்டம், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களிலுள்ள அடவிநயினார்கோவில் அணை பாசனத் திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால், கரிசல் கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாகரம்கால், கிழங்காடுகால், வடகரைகால், புங்கல்கால் கால்வாய்,மேட்டுகால் மற்றும் கரிசல்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு ஒரு நாள் வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எதிர் வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையென்றால், நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும். நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதன்மூலம் வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, குத்துக்கல் வலசை, இலத்தூர், அச்சன்புதூர், நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாகரம், கிழங்காடு, ஆய்க்குடி, கம்பளி, சம்பவர் வடகரை, சுரண்டை ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.
இந்நிகழ்வில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தி.மு.இராசேந்திரன், வடகரை பேரூராட்சி தலைவர் ஏ.சேக் தாவூத், செயற்பொறியாளர் நீர்வளத்துறை சி.மணிகண்டராஜன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஜாஹிர் உசேன்,மாவட்ட திமுக பொருளாளர் ஷெரீப், ஐவேந்திரன் தினேஷ் விவசாய சங்க நிர்வாகிகள் முஹம்மது இஸ்மாயில், மற்றும்
விவசாய சங்க பிரதிநிதிகள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.