மேகதாது அணை விவகாரம்: மத்திய மந்திரியிடம் தமிழக அமைச்சர்கள் மனு
1 min read
Mekedatu Dam issue: Tamil Nadu ministers petition the Union Minister
18.11.2026
மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடகாவுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி மந்திரி சி.ஆர்.பாட்டீலிடம், தமிழக அரசின் சார்பில், கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி அமைச்சர் ராஜ்மமோகன் ஆகியோர், மத்திய ஜல் சக்தித்துறை மந்திரி சி.ஆர். பாட்டீலை சந்தித்தனர்.
அப்போது ” காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது. இதுகுறித்து கர்நாடக அரசுக்கு எந்த விதமான அனுமதியும் வழங்க கூடாது. உரிய அறிவுரைகளை அம்மாநில அரசுக்கு வழங்கும்படியும்” கேட்டுக் கொண்டனர்.
பின், இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டாட்சி தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை, ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.
காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்த புதிய திட்டத்தையும், காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவும் இல்லாமல், கர்நாடக அரசு மேற் கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விரிவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின் நிருபர்களிடம், அமைச்சர் ஆதவ் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான் முக்கியமானது; இறுதியானது. உச்ச நீதிமன்றத்தை மீறி, வேறு எந்த அமைப்பும் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. தமிழகத்துக்கு மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் சேர்ந்து தான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நதிநீர் பங்கீடு குறித்தும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை மீறி, மேகதாது அணை பிரச்னையை, கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. விரிவான திட்ட அறிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அமைச்சரிடம் கூறியுள்ளோம்.
கடந்த அரசு, உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையை தரலாம் என்று அந்நீதிமன்றம் கூறியிருந்தாலும், அந்த அறிக்கையை பிரசுரிக்க கூடாது என்பதையும் கூறியுள்ளோம்.
விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், எந்தவிதமான முடிவையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினோம். இந்த சந்திப்பின்போது, ‘மேகதாது விவகாரத்தில், சட்ட ரீதியாகவே எதையும் அணுகுவோம். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது’ என்று மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதியளித்தார். இந்த சந்திப்பு நிறைவாக இருந்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.