November 19, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2.03 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்து சாதனை

1 min read

Chennai Port achieves a milestone by exporting 2.03 lakh tonnes of rice to African countries

19.11.2026
ஏப்ரல் முதல் நவம்பர் 18-ம் தேதி வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2.03 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்து சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 58 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளைக் கையாண்டு முந்தைய, அதற்கு முந்தைய ஆண்டைவிட 5.35 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் இச்சாதனை அளவை முறியடிக்கும் வகையில், சரக்குகளை கைகயாளும் அளவை அதிகரிக்க துறைமுக நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து அரிசி, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளைக் கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் எம்.வி. எச்.டி.பி. லக்கி, எம்.வி. இம்பீரியல் வரலட்சுமி, எம்.வி. அக்சன் சாண்ட்ரா ஆகிய 3 கப்பல்களில் அரிசி ஏற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் 18-ம் தேதி வரை 2.03 லட்சம் டன் அரிசி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது துறைமுக வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.

சென்னை துறைமுகம் அண்மையில் அறிமுகப்படுத்திய தேசிய சரக்கு ஒருங்கிணைப்புத் திட்டம் காரணமாக, அண்டைத் துறைமுகங்களுக்குச் சென்ற அரிசி ஏற்றுமதிச் சரக்குகள் சென்னைத் துறைமுகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் அரிசி ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னைத் துறைமுகத்தில் 80,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குக்கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. சரக்குகளைச் சேமிக்கும் திறனை மேலும் அதிகரிக்க ஏற்கெனவே உள்ள கிடங்குகளைப் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஏற்றுமதி நிறுவனங்களான செயிலர் எக்ஸ்போர்ட்ஸ், லூயிஸ் டிரேபஸ் மற்றும் கப்பல் முகவர் நிறுவனங்களான ஹரி அண்ட் கோ, பி.எல். ஷிப்பிங், பெஸ்ட்டிராக் ஷிப்பிங் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகாரிகள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து சென்னைத் துறைமுகத் தலைவர் சச்சின் எஸ்.குர்வே நேற்று பாராட்டுத் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும், வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமும், இந்தியாவின் கிழக்குக்கடற்கரையில் முக்கிய சரக்குப் போக்குவரத்து மையமாக சென்னைத் துறைமுகம் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *