November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

கார்த்திகை தீபத் திருநாளின் ஆன்மிகமும்… அறிவியலும்…-(அமுதன்)

1 min read

The Spirituality and Science of the Auspicious Day of Karthigai Deepam – (Amudhan)

(இந்த ஆன்மிக கட்டுரையை பிரபல வரலாற்று எழுத்தாளர் அமுதன் அவர்கள் எழுதியுள்ளார்கள். இவருடைய இயற்பெயர் தனசேகரன். தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர்)

பஞ்சபூதத் தலங்களில் நெருப்புக்கு உரியதாக வணங்கப்படும் சிறப்புமிக்க ஆலயம், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகைத் தீபத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு, 24-ந் தேதி திருக்கார்த்திகை விழா நடைபெற இருக்கிறது. அன்றைய தினம், 2,668 அடி உயர மலை மீது, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். 30 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலும் தெளிவாகக் காணப்படும் அந்தத் தீபத்தில், அறிவியல் ரகசியம் புதைந்து கிடக்கிறது என்பது தெரியுமா?

ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படும். திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரம் நடராஜரை தரிசித்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில், கி.பி. 750-ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும், திருக்கார்த்திகை விழா, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் காலத்தில் கடல் கடந்து வாணிபம் செய்த தமிழர்களால், மலேசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கார்த்திகை திருவிழா, அங்கே இன்றளவும் கொண்டாடப்படுவது இந்த விழாவின் சிறப்பு.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக காலையில் சாமி சந்நிதி முன்பு உள்ள கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள். அந்தத் தீபத்தில் இருந்து பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் ஆகிய 5 வகை தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் அவற்றை ஒன்றாக்கி மலை மீது கொண்டு சென்று, அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் பிரமாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள்.

ஒருவனே பல ரூபம் ஆகி, பின்னர் அந்தப் பல ரூபம் ஒருவனாக ஆகிவிடுவது (ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகன் ஆகுதல்) என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இவ்வாறு 5 வகை தீபங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு, மலை மீது ஒரே தீபமாக ஏற்றப்படும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

வழக்கமாக, வட கிழக்குப் பருவ மழை காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அந்தமான் கடல் பகுதியில் இருந்து புயல் உருவாகி, தமிழகம் நோக்கி வரும். அதேபோல, தென்மேற்குப் பருவ மழை காலமான அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் வங்காளக் கடலின் மேற்குப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் புயல் உருவாகி தமிழகம் நோக்கி வரும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தானே புயல் டிசம்பர் மாதமும், அதேபோல வார்தா புயல் டிசம்பர் மாதமும், கஜா புயல் நவம்பர் மாதமும் தமிழகத்தைத் தாக்கியது நினைவுகூரத்தக்கது.
இவ்வாறான புயலைத் தடுக்கும் வல்லமை கார்த்திகை தீபத்திற்கு உண்டு.

கார்த்திகை தீபம், திருவண்ணாமலையில் மட்டும் அல்லாமல், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் ஏற்றப்படுகிறது. இவற்றுடன் அனைத்துக் கோவில்களிலும் “சொக்கப்பனை” என்ற பெயரில், 20 அல்லது 30 அடி உயரம் அளவில் மிகப் பெரிய தீபம் ஏற்றப்படுகிறது.

இவ்வாறு ஒரே சமயம் பல இடங்களிலும் ஏற்றப்படும் பெருவாரியான தீபங்களில் இருந்து கிளம்பி, வாயு மண்டலத்தில் அதிகமாகப் பரவும் கார்பன் வாயு, மழை மேகங்களைக் கலைத்து, பேரழிவு ஏற்படுத்தும் மழையைத் தடுக்கும் தன்மை கொண்டது. அதாவது, தமிழகம் நோக்கி வீரியத்துடன் வரும் புயலை, மழையை மட்டுமே கொடுக்கும் அளவில் அது பலவீனம் அடையச் செய்துவிடும். இதனால், கார்த்திகை தீபம், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதன் காரணமாகவே, திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின்போது மீனவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது, மலை மீது வைக்கப்படும் பிரமாண்ட கொப்பரையில், 3 ஆயிரம் கிலோ நெய் ஊற்றி, அதில் ஏராளமான கற்பூரம் சேர்க்கப்பட்ட ஆயிரம் மீட்டர் நீள காடா துணியை திரியாக்கி தீபம் ஏற்றுவார்கள். இந்தக் கொப்பரையை மலை மீது கொண்டு செல்லும் பணியை, பர்வத ராஜ குலத்தினர் என்ற மீனவர்கள் மட்டுமே செய்யப் பாத்தியப்பட்டவர்கள். அதேபோல, மலை மீது தீபம் ஏற்றுவதும் அந்த மீனவர்கள்தான். இதற்காக அந்த மீனவர்களில், “உண்ணாமுலை பிரியன், பென்னாட்டு பிரியன், வதத்திப் பிரியன்” என்று மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் முறை வைத்துக் கொண்டு இந்தப் பணியைச் செய்கிறார்கள். புயலின் ஆக்ரோஷத்தைத் தடுத்து தங்களைக் காக்கும் என்பதால், தீபம் ஏற்றும் பணியை மீனவர்களே ஏற்று நடத்துகிறார்கள்.

கார்த்திகை தீபம், மீனவர்களுக்கு மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கும் உதவுகிறது. தை மாதம் அறுவடை ஆக இருக்கும் பயிர்களில், கார்த்திகை மாதம் பால் பிடிக்கும். அந்தச் சமயத்தில் சுழல் காற்று வீசினால், பால் பிடிப்பது தடுக்கப்பட்டு, அதனால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வீசும் சுழல் காற்றை சமன்படுத்தும் திறன், அக்னிக்கு உண்டு. கார்த்திகை தீப அக்னி, வானில் உருவாகும் சுழல் காற்றை சமன்படுத்தி விவசாயிகளுக்கு உதவுகிறது.

மேலும் ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் வெட்டுக்கிளிகள் பெருகும். பயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தையும் கார்த்திகை தீபம் மட்டுப்படுத்தும். அதேபோல மழைக்கால நோய்க் கிருமிகள் பரவுவதையும் கார்த்திகை தீபம் கட்டுப்படுத்தும். தீப ஜோதியால் ஏற்படும் கதிர்களின் வெப்பம், மனிதர்கள் உடலில்பட்டு அவர்களது ஆன்ம சக்தியை அதிகரிக்கும்.

இவை போன்ற அறிவியல் காரணங்களால்தான், ஐப்பசி மாதம் வீடுகளிலும், ஆலயங்களிலும் ஒரே நாளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இறைவன் ஜோதி ரூபமாகக் காட்சி அளிக்கிறான் என்றும், அவனது அடியையும் முடியையும் காண பிரம்மாவும், திருமாலும் முயன்று தோற்றதாகவும் லிங்க புராணத்தின் 17-ம் அத்தியாயத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இதேபோல பல புராணக் கதைகள், கார்த்திகை தீபம் குறித்து சொல்லப்படுகின்றன.

ஆன்மிகமோ, அறிவியலோ, எப்படிப் பார்த்தாலும் கார்த்திகை தீபம் என்பது மக்களுக்குப் பயன் உள்ள விழா என்பதால், அனைவரும் திருக்கார்த்திகை நாளில் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *