நெல்சன் மண்டேலாவின் மனைவிக்கு இந்திரா காந்தி சர்வதேச அமைதி விருது
1 min read
Indira Gandhi International Peace Prize for Nelson Mandela’s wife
20.11.2026
புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும் அரசியல்வாதியுமான நெல்சன் மண்டேலாவின் மனைவி கிரேசா மச்செல், 2025-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி சர்வதேச அமைதி விருதை பெற்றார்.
டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவர் விருதை பெற்றுக்கொண்டார்.
அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டுள்ளது.
முன்னாள் துணை ஜனாதிபதி டாக்டர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிவசங்கர் மேனன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேற்று இந்திரா காந்தியின் 109வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1945ல் மொசாம்பிக்கின் கிராமப்புறத்தில் பிறந்த கிராசா மச்செல், 1973ல் தனது தாய்நாட்டிற்குத் திரும்பி, பிரெலிமோ சுதந்திர இயக்கத்தில் ஒரு விடுதலைப் போராளியாக இணைந்தார்.
1975ல் மொசாம்பிக் சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் முதல் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சரானார். அவரது தலைமையின் கீழ், பள்ளிகளில் மாணவர்களின் பங்கேற்பு 40 சதவீதத்திலிருந்து 90 சதவீதத்திற்கும் மேலாகவும், மாணவிகள் பங்கேற்பு 75 சதவீதமாகவும் உயர்ந்தது.
அதே ஆண்டு மொசாம்பிக்கின் முதல் ஜனாதிபதியான சமோரா மச்செலைத் திருமணம் செய்துகொண்டு அந்நாட்டின் முதல் பெண்மணி ஆனார்.
சமோரா மச்செல் 1986ல் ஒரு விமான விபத்தில் இறந்தார். பின்னர் அவர், 1998 ஜூலை 18 அன்று தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை திருமணம் செய்துகொண்டு, 2013ல் மண்டேலாவின் மரணம் வரை அவருடன் வாழ்ந்தார்.
மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் முதல் பெண்மையாக அவர் இருந்துள்ளார்.