தென்காசி மாவட்டத்தில் “மண்ணின் மக்கள் திட்டம்”- ஆட்சியர் தகவல்
1 min read
“People of the Soil” (Mannin Makkal) scheme in Tenkasi district – Collector’s announcement
20.11.2026
தென்காசி மாவட்டத்தில் மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் நில உடைமையாளராக உயர்த்தும் பொருட்டு வாங்கும் விவசாய நிலத்தின் அரசு வழிகாட்டுதலின் மதிப்பீட்டைக் கணக்கிட்டு அதில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மகளிராகவும், மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது ஆண் வாரிசு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும். வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும், வாங்க உத்தேசித்துள்ள விவசாய நிலத்தின் விற்பனையாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். நிலத்தினை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தோர் பெயரில் பதிவு செய்திருக்கக் கூடாது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சையோ அல்லது 5 ஏக்கர் புஞ்சையோ வாங்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரைத்தாள் மற்றும் பதிவு விலக்கு அளிக்கப்படுகிறது. வாங்கப்படும் நிலத்தின் பயனாளி 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. மேலும், விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் பயன் அடைந்திருத்தல் கூடாது.
மேற்கண்ட தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் https://newschemetahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா, தெரிவித்துள்ளனர்.