November 22, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தேரோட்டம்

1 min read

Thiruvannamalai Thirukarthigai Chariot Procession

21.11.2026
திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மகா ரதத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திரு விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.

5-வது நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகரும், பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும். வெள்ளி ரிஷப வாகனங்களில் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வந்தனர்.

6-ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது.

நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதிகளில் செல்ல, அவர்களை தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்தனர்.

மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து செல்லும் காட்சியை காண மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் தேர் நிலைக்கு வந்ததும் முருகர் தேரோட்டம் நடைபெற்றது.

முருகர் தேர் நிலைக்கு வந்ததும் பெரிய தேரான அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி மாட வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள்.

தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியிலும், முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் ஏற்றப்பட உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *