November 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவில் த.வெ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

1 min read

Case registered against TVK MLA under a non-bailable section

24/11/2026
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமினில் வர முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட கலெக்டர் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது மாவட்ட எஸ்பியிடம் கலெக்டர் புகார் அளித்தது உறுதி செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் இந்த வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கலெக்டர் வழக்கில் யாரையும் பாதுகாக்க முயற்சிக்க கூடாது. அவ்வாறு செய்தால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். கலெக்டர் புகார் விசாரணையை ஐஜி பிரவீன் குமார் அபிநபு கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் புகாரை விசாரிக்கும் பணியிட குழுவை (ICC) வெள்ளிக்கிழமைக்குள் அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், கலெக்டர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ. விக்னேஷின் வீட்டில் வைத்து உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு எஸ்.ஐ. யோகேஸ்வரன், கள்ளக்குறிச்சி உளவு பிரிவு போலீசார் ஒருவரும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமினில் வர முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 75, 78, 79 மூன்று பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BNS 75 – ஜாமினில் வெளி வர முடியாத பிரிவு, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியில் அணுகுதல் பிரிவில் வழக்கு, BNS 78 – பெண்களின் விருப்பம் இல்லாமல் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்யும் பிரிவிலும், BNS 79 -ஆபாச செய்கை செய்தல் எனும் பிரிவிலும் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *