புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
1 min read
Schoolgirl dies of dengue fever in Puducherry
25.11.2026
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி ஒருவர் பலியானார். தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த மகேஷ்-கவிதா தம்பதியின் மகள் நஷீதா (வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.
புதுவையில் ஏற்கனவே கடந்த 13-ந் தேதி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த முகமது இர்பான் (22) என்ற வாலிபரும், கடந்த 23-ந் தேதி மூலக்குளம் பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிணி (19) என்பவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இனியும் அலட்சியம் காட்டாமல் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எங்கெங்கு சிறப்பு முகாம்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.