திருப்பரங்குன்றம் தீபம்: சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
1 min read
Thiruparankundram case: Supreme Court refuses urgent hearing today
25.11.2026
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை எதிர்த்து எதிர்மனுதாரர்கள் முறையீடு செய்தநிலையில் அதனை அவசரமாக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் நேற்று (24.11.2026) வழக்கமான தீப மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் முதலாவதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு பரிசீலித்தது. அப்போது மனுதாரரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு பகிரங்கமாக மீறியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டிருக்க வேண்டும்.
சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்குவோம் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடைசி தருணம் வரை தமிழக அரசு கூறி வந்தது. ஆனால், இறுதியில் வேண்டுமென்றே சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மனுதாரர்களும் தமிழக அரசின் மீது விரைவில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்” என தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், “அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு மனுவை முதலில் தாக்கல் செய்யட்டும். அதன் பிறகு பார்க்கலாம்” என்று தெரிவித்தனர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து 2-வது வழக்காக மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன்படி அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், ஆணையர் மீது சுப்ரீம்கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை இந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாகி கே.கே. ரமேஷ் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தார். தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் செயல்படுத்த தவறியதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை எதிர்த்து எதிர்மனுதாரர்கள், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தநிலையில் இந்த மனுவை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.