November 29, 2026

Seithi Saral

Tamil News Channel

தொகுதி மறுவரையறை மசோதா தென் மாநிலங்களை பாதிக்கும்: ராகுல் காந்தி பேட்டி

1 min read

Delimitation Bill will affect southern states: Rahul Gandhi in an interview

29/11/2026
மத்திய அரசு நாளை மக்களவையில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். தற்போது திமுகவுக்கு 22 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே, மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவு என்பது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.

இதனால், திமுக நிலைப்பாட்டை மாற்றும் இறுதி முயற்சியாக திமுக தலைவர் ஸ்டாலினை, இந்தியா கூட்டணியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நீடித்த நிலையில், நிலைப்பாட்டில் இருந்து மாற திமுக மறுத்துவிட்டது.

இந்த நிலையில், டெல்லி புறப்படும் முன் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

815 தொகுதிகளையும் மறுவரையறை செய்ய பாஜகவை அனுமதித்தால் இந்திய தேசத்திற்கு மட்டும் பாதிப்பு இல்லை. தென் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும்.தொகுதிகளின் தன்மையையே பாஜக மாற்றிவிடும் என்று ஸ்டாலினிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். ஏற்கனவே அசாம், ஜம்மு காஷ்மீரில் இந்தத் திட்டத்தை அவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டார்கள்.

தற்போது இந்தத் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் சகோதரர் ஸ்டாலினிடம் இது பற்றி பேசினோம். தமிழ்நாட்டின் பாதுகாவலராக உள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உள்ளது. பாஜகவின் மோசமான திட்டம் நடைபெறாமல் இருப்பதைத் தடுப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தமிழர்களுக்கு எதிரானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். தொகுதியை மறுவடிவமைப்பு செய்தால் ஜனநாயகம் இந்தியாவில் முடிவுக்கு வந்துவிடும். தமிழ் கலாசாரம் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தப்படும்.திமுக என்ன முடிவு செய்துள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. தமிழ் கலாசாரம், தமிழ் மக்களுக்கு பாதிப்பு என்பது மட்டுமே நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *