சோனியா வேண்டுதலை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுப்பு
1 min read
Why support the constituency delimitation bill? – M.K. Stalin’s explanation
29.11.2026
புதிய மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்தின் பாதுகாப்பை இழப்போம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சென்னை வந்தனர். ராகுல்காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ரேவந்த் ரெட்டி, டி.கே.சிவக்குமார், சதீசன், மம்தா பானர்ஜி ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் ஸ்டாலினின் இல்லத்துக்கு வருகை தந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் அன்புடன் வரவேற்றார்.
ராகுலும் ஸ்டாலினும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது- திமுக சார்பில் ஸ்டாலின் உடன்உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர். மாலை 4:40 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பு மாலை 6:05 மணிக்கு நிறைவு பெற்றது. சந்திப்பு முடிந்து இண்டி கூட்டணி தலைவர்கள் கிளம்பி சென்றனர். அப்போது அவர்கள் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தனது வீட்டின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”3 மாநில முதல் மந்திரிகளும், அரசியல் தலைவர்களும் என்னை சந்தித்தனர். தொகுதி மறுவரையறை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். திமுகவின் கோரிக்கைகள் இந்த புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டதை எடுத்துக்கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும், வேறு சில பிரச்சினைகளை கூறினார்கள். அதையும் கேட்டுக்கொண்டோம்.
மசோதாவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மசோதா தொடர்பாக உணர்ச்சிவயப்படுவதில் எந்த பயனும் இல்லை. 1971 மக்கள் கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை வந்தால் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். 2027 மக்கள்தொகை அடிப்படையில் மசோதா நிறைவேறினால் தமிழகம் வஞ்சிக்கப்படும். புதிய மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்தின் பாதுகாப்பை இழப்போம். தென் மாநிலங்களை சேர்ந்த கட்சிகளுக்கு இது வாழ்வா? சாவா? போராட்டம். அதை தடுக்க, தற்போது கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிற நமக்கு வேறு வழி இல்லை. இந்தியா கூட்டணி தலைவர்களிடம் வேறு மாற்று திட்டமும் இல்லை.
நாடாளுமன்றத்தில் எங்களிடம் உள்ள பலத்தின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசியலின் வலிமையை காப்பாற்றியுள்ளோம். தமிழகத்துக்காக, மாநில உரிமைகளுக்காக போராடுவோம். அதில் வெற்றி பெறுவோம். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தமிழ்நாடுதான் எங்களின் முதல் நிலைப்பாடு.”
இவ்வாறு அவர் கூறினார்.