May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒரு டிரைவரின் ஆதங்கம்…

1 min read

Ori Drivarin Adhakgam/ Story by Kadayam Balan

நண்பன் பாபுவுக்கு பெண் பார்க்க சென்றான் சரவணன். தினமும் பகல் முழுவதும் உழைத்து உடபெல்லாம் அழுக்கேறி பழைய சட்டையோடு காட்சி தரும் பாபு இன்று புதுப்பொலிவுடன் காணப்பட்டான். அவனைப் பார்த்தால் ஏதோ அரசு அலுவலகத்தில் வேலை செய்வதாகத்தான் நம்புவர்கள். பளிச்சென்ற உடை, அதற்கேற்ற நடையுடன் பெண்வீட்டுக்கு சென்றான்.
பாபு பிளஸ்-2 வரை படித்து இருந்தான். எம்.ஏ., எம்.இ. படித்தவர்களுக்கே வேலை இல்லாதபோது பள்ளிப்படிப்போடு நிறுத்தியவர்களுக்கு வேலை எங்கே? என்ஜீயரிங் படித்தவர்களுக்கு சென்னையில் என்றால் அதிகபட்ச சம்பளம் பத்தாயிரம்தான். மதுரை போன்ற நகரங்களில் ஐந்தாயிரம் கூட தரமாட்டார்கள். இவ்வளவு- குறைவா…? என்று கேட்டால் படிப்படியாக கூட்டுகிறோம் என்று கூறி அவன் வாழ்க்கையையே பழாக்கி விடுவார்கள். இதையெல்லாம் உணராதவன் அல்ல பாபு. கிடைத்த வேலைக்கு சென்று பணத்தை சிக்கனப்படுத்த பழகிக் கொண்டான். தினமும் குறைந்தது ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வீட்டுக்கு செல்ல மாட்டான். அப்படிப்பட்ட உழைப்பாளிக்கு இன்று பெண்பார்க்க செல்கிறார்கள்.
மணப்பெண்ணின் பெற்றோர், “உங்க பையனை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கு. பையன் நல்லா அழகா இருக்கான், பிளஸ்&2 பிடிச்சிருக்கான்னு சொன்னீங்க. எங்க பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி.தான். அதுவும் பொருத்தமாத்தான் இருக்கு. உங்க வீட்டையும் பார்த்தோம். வசதியான வீடுதான். பையன் சாதாரண வேலைதான் பார்க்கிறான்னு சொன்னீங்க… கூலி வேலையா இருந்தாலும் பராவயில்லை. எங்க பொண்ண நல்லபடியா பார்த்துக்கிட்டா போதும். இப்போ ஆடி மாதம் ஆவணி புறந்தா கல்யாணத்தை வச்சிக்கிடலாம். பெண்ணுக்கு என்னென்ன சீர் செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறீங்க” என்றார்.
“நாங்க அதுகெல்லாம் ஆசைப்படல. உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு செஞ்சாப்போதும்.” இது பாவுவின் தந்தை.
பாபுவுடன் வந்த நண்பர்கள் பெரும்பாலானவர்கள் காக்கி பேண்ட்&சட்டை அணிந்திருந்தார்கள். அவர்களை பெண்ணின் தந்தை பார்த்தவுடன்,
“பையன் என்ன வேலை செய்கிறார்?” என்று கேட்டார்.
பாபுவின் தந்தை, “எம் பையன் லாரி டிரைவராக இருக்கிறான். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாம சம்பாதிப்பான். வெளியூருக்கு போனா படியே அதிகமாக கிடைக்கும்.” என்றார்.
அவ்வளவுதான் பெண்ணின் தந்தைக்கு முகம் மாறியது.
“சரி நாங்க மேற்கொண்டு விசயத்தை நாளைக்கு சொல்லி அனுப்புறோம் என்றார்” அவர்.
மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் புரிந்துவிட்டது, பெண் கொடுக்க விருப்பம் இல்லை என்று. பாபுவின் தந்தை சற்று நெளிந்தபடி எழ முயன்றார்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பாபுவின் நண்பன் சரவணன், “ஐயா, பையனை பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க, அடுத்த மாசம் கல்யாணத்தை வைச்சிக்கிடலாம்ன்னு சொன்னீங்க. இப்போ சொல்லி அனுப்புகிறோம்ன்னா என்ன அர்த்தம்? ஒளிவு மறைவு இல்லாம வெளிப்படையா சொல்லுங்க” என்றான்.
“எங்களுக்கு எல்லாம் புடிச்சிருக்கு தம்பி. பையன் லாரி டிரைவர்ன்னதால எங்களுக்கு ஒத்துவரல… அதனால… நீங்க வேற இடத்துல…”
“எதுக்காக டிரைவரை வேண்டான்னு சொல்றீங்க..” என்று கோபத்தோடு சரவணன் கேட்டதால் பெண்ணின் தந்தையும் பளிச்சென்று, “டிரைவர்களுக்கு குடி பழக்கம் இருக்கும். குடும்பத்தை கவனிக்க மாட்டாங்க.” என்று ஏதேதோ அடுக்கிக் கொண்டே போனார்.
சரவணன் கொதித்தெழுந்தான். “நிறுத்துங்க… டிரைவர்ன்னா உங்களுக்கு இளக்காரமா போச்சா… பஸ் டிரைவர்ன்னா தன்னுடைய பஸ்சில் பயணம் செய்யும் அறுபது பயணிகளுக்கும் அவன்தான் பொறுப்பு. பஸ் நிதானமா போனா என்ன மாட்டுவண்டி மாதிரி ஓட்டுறான்னு சொல்லுவீங்க. கொஞ்சம் வேகமா போனாலும் திட்டுவீங்க. பஸ் பிரேக் டவுன் ஆனாக்கூட என்னப்பா பார்த்து ஓட்டக்கூடாதுன்னு கேட்பீங்க. எங்கள எந்த பஸ்சையாவது பிடித்து அனுப்பு என்று எரிச்சலோடு சொல்லுவீங்க. அந்த டிரைவர் மெக்கானிக் வரும்வரை விடியவிடிய காத்து நிற்கணும். அதைபத்தி கவலைப்பட மாட்டீங்க.
கார் டிரைவர்ன்னா அதில் பயணம் செய்பவர்களை அவர்கள் சொல்லும் இடத்துக்கு கொண்டு செல்வதோடு, அவர்களுக்கு வேண்டிய பல சேவைகளை அவனே செய்வான். லாரி டிரைவரை சொல்லவே வேண்டாம். லட்சக்கணக்கான பொருட்களை அவனை நம்பியே கொடுத்து அனுப்புவாங்க. ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில உள்ள ஊருக்கு அந்த பொருளை பத்திரமாக கொண்டு சேர்ப்பான். வழியில மழையோ, புயலோ வந்தாக்கூட சரக்குக்கு எந்த பங்கமும் வராம பாதுகாத்துக் கொள்வான்.
ஒருத்தன் ரோட்டில மயங்கி கிடந்தா அவனுக்கு உதவ ஆட்டோ டிரைவர்தான் முதல்ல வருவான். ஆனா அவனை கட்டணம்ங்கிற பேர்ல கொள்ளையடிக்கிறான்னு சொல்லுவீங்க.
டிரைவர்களுக்கு குடிப்பழக்கம் உண்டுன்னு சொல்வீங்க. இந்த உலகத்தில் குடிக்காதவங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனா உங்க கண்ணுக்கு டிரைவர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது. டிரைவர்களில் எத்தனைபேர் குடிக்காம இருக்கிறான்னு உங்களுக்கு தெரியுமா? குடிக்கிற டிரைவர் கூட வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக குடிக்க மாட்டான்.
பயணிகளையும், உடமைகளையும் பாதுகாக்கிற ஒருத்தனால தன் குடும்பத்தையும், மனைவியையும் பாதுகாக்க தெரியாதா? டிரைவர்ன்னா ஏன் இப்படி நினைக்கிறீங்க. டிரைவர்கள் வாகனத்தை இயக்கலைன்னா இந்த உலகம் இயங்குவதே நின்றுவிடும்.
யாரையும் ஏமாற்றாமல், வயிற்று பசிக்காகவும் கும்பத்துக்காவும் உழைக்கும் டிரைவரை ஏன் இப்படி நினைக்கிறீங்க. அவங்களையும் மனுஷனா நினையுங்க.”
&இப்படி சொல்லி முடித்துவிட்டு அங்கே கொஞ்சம் கூட நிற்காமல் பாபுவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவன் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை பெண்ணின் தந்தை உணர்ந்தார். ஆனாலும் மகளுக்கு நல்ல வரன் கைவிட்டு போனதே என்ற கவலைதான் அவருக்கு.-
(கடையம் சரவணனின் ஏக்கம் கதையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.)

-கடையம் ஆ.பாலன்

About Author

1 thought on “ஒரு டிரைவரின் ஆதங்கம்…

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.