May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

அவள் யாருக்கு-…1 (தொடர்கதை)…பாலன்

1 min read

Aval Yarukku ===1 / story by Kadayam Balan

இரவு எட்டு மணி….
மதுரை பெரியார் பஸ் நிலையத்தை தாண்டி எல்லீஸ் நகர் பாலம் அருகே வரும்போது திடீரென்று ஆட்டோ பழுதாகி நின்றுவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சுற்றி வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. சிக்னலுக்காக காத்திருந்த வாகனங்கள் சிக்னல் கிடைத்தவுடன் புறப்பட தயாராக இருந்தபோது பாதசாரிகள் குறுக்காக ஓடும் சம்பவம் வாகன ஓட்டிகளை எரிச்சல் அடைய வைத்தது. அது மட்டும் அல்ல இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலர் விதிமுறைய மீறி குறுக்காக சென்று தங்கள் சாகசங்களை காட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் ஒருவழிப்பாதை என தெரிந்திருந்தும் திசைமாறி வந்து கொண்டிருந்தனர். போக்குவரத்து காவலர் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க பிளாட்பாரம் ஓரம் நடந்து கொண்டிருந்தவர்களை இடித்து தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
ஆனால் தற்செயலாக பழுதாகி நின்ற ஆட்டோ டிரைவரை மற்ற வாகனங்களில் சென்ற சிலர் திட்டிக் கொண்டே சென்றனர். அதனால் ஆட்டோ டிரைவர் தனது கோபத்தை கீயரில் காட்டினார். ஆனாலும் ஆட்டோ என்ஜின் அவருக்கு கருணை காட்டவில்லை. சண்டித்தனம் பிடித்த ஆட்டோமீது அவருக்கு கோபம்கோபமாக வந்தது.
மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பழுதான ஆட்டோவை ஓரத்திற்கு தள்ளி வந்து மீண்டும், உயிர்ப்பிக்க முயற்சி செய்தார்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து ஆட்டோவில் பயணிக்கும் பதுமை பதற்றம் ஆனாள். ரெயில் நிலையம் அருகே வந்து ரெயிலை தவறவிட்டுவிட்டால்… அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற அச்சம் அவள் மனதில் எழுந்தது. கையில் மின்னிக்கொண்டிருந்த கைக்கெடிகாரத்தை பார்த்து நெற்றில் ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும் வைத்து அய்யோ என்றாள்.
“என்ன அண்ணே பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு நேரம் ஆயிட்டு… ஆட்டோ சரியாயிடுமா?”
ஆட்டோ டிரைவரும் சுற்றும்முற்றும் பார்த்தார். பின்னர் தனது கைக்கெடிகாரத்தை பார்த்து அவரும் குழப்பம் அடைந்தார்.
“இல்லம்மா… வேற ஆட்டோ பிடிச்சிடுங்க… நான் வேணும்னா வேற ஆட்டோ பிடிச்சி விடட்டுமா?”
“வேண்டாம். நானே போயிடுறேன்.”
இனி ஆட்டோ பிடிச்சி போறதுக்குள்ள நேரமாயிடும்… இந்தவழியா குறுக்கால நடந்துபோயிடலாம் என்று எண்ணினாள், தெய்வா.
பாண்டி பஜாரின் இருபுறமும் உள்ள கடைகளில் பால்வண்ண மின் விளக்குகள் பளிச்சென்று ஜொலித்துக் கொண்டிருந்தன. மின்சாதன பொருட்கள், ‘சிடி’ கள், செல்போன்கள் என கடைகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. தெருவிளக்கு எரியாவிட்டாலும் கடை விளக்குகள் வழியை அடையாளம் காட்ட, சல்வார்கமிஸ் உடையில் தெய்வாவின் கால்கள் விரைந்து கொண்டிருந்தன. அது ஓட்டமும் அல்ல, நடையும் அல்ல. அந்த பால் வண்ண ஒளியில் தெய்வாவின் முகம் பளிச்சென்று இருந்தது. நீளமான தலை முடி என்றும் சொல்லமுடியாது, அதேநேரம் குட்டையான முடியும் அல்ல. பியூட்டி பார்லரில் செய்து கொண்ட முடியலங்காரம் அவள் முகத்துக்கு ஏற்றாற்போல இருந்தது. ஒன்றிரெண்டு முடிக்கற்றைகள் அவள் முகத்தில் விழுந்து அழகை மெருகூட்டின. அவசரமும், டென்சனும் அவள் முகத்தில் வியர்வை துளிகளாய் வெளிப்பட்டன. அதுவும் முகத்திற்கு தனி வசீகரத்தை கொடுத்தது.
சிறிது தூரம் நடந்ததும் அவளுக்கு வழிகாட்டிய ஒளி மறைந்தது. அதன்பின் கடைகள் ஏதும் அங்கு இல்லை. அந்த நேரத்தில் லேசாக மழை தூறியது. ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தின் முன்னால் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. அலுவலகத்துக்குள் ஒன்றிரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். மற்றபடி அந்த குறுகிய தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அதனை அடுத்து ஒரே இருட்டு.
மதுரை மாநகரில் வழிப்பறி வாலிபர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இருட்டுதான் தொழிற்கூடம். சட்டைக்கும் பனியனுக்கும் இடையே மெலிதான நீண்ட வாளை வைத்திருப்பார்கள். தனியாக செல்லும் நபரை மறித்து வாளை லேசாக காட்டி பணத்தை பறித்துச் சென்று விடுவார்கள். இப்படி வழிப்பறி பற்றி பத்திரிகையில் பலமுறை செய்திகள் வந்துள்ளன. இதனால்தான் இருட்டுப்பகுதியில் நடந்து செல்ல பலரும் அச்சப்படுவார்கள். அதனால்தானோ என்னவோ இந்த இடம் ஆட்கள் நடமாட்டம் குறைந்து போய் இருந்தது. இந்த வழியாக வர தெய்வாவுக்கும் விருப்பம் இல்லைதான். ஆனாலும் வேறு வழியின்றி இந்த வழியை நாடி வந்துவிட்டாள்.
ரெயிலை தவறவிட்டுவிடக்கூடாது என்ற பதற்றம் ஒருபுறம், யாரேனும் தன்னை மடக்கிவிடக்கூடாதே என்ற பயம் இன்னொருபுறம். தனது நடையை விரைவு படுத்தினாள்.
அந்த நேரத்தில் வலதுப் புறம் உள்ள ஆலமரத்தடியில் இருந்து வாட்டசாட்டமான வாலிபன் இவளை பார்த்ததும் ஓடி வந்தான். யாரோ என்று நினைத்த அவளுக்கு அவன் நெருங்கி வந்தபோதுதான் அடையாளம் தெரிந்தது. அதிர்ச்சியும் கூடவே வந்தது.“ஏய்…” என்றபடி கையை காட்டியபடி ஓடிவந்தது,பயத்தை அதிகரிக்கச் செய்தது. குறுக்கே வழிமறித்த அவனது கை தடுத்து நிறுத்தியது.
(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.