April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

அவள் யாருக்கு(பாலன் எழுதிய தொடர் கதை… பகுதி 2)

1 min read

Aval Yarukku===2 / Story by Kadayam Balan

முன்கதை சுருக்கம்:
சென்னைக்கு செல்வதற்கு மதுரை ரெயில் நிலையத்தை நோக்கி விரைந்தாள் தெய்வா. ஒரு இருட்டு பகுதியில் ஒருவன் அவளை வழிமறித்தான். யாரோ என்று நினைத்த அவளுக்கு அவன் நெருங்கி வந்தபோதுதான் அடையாளம் தெரிந்தது. அதிர்ச்சியும் கூடவே வந்தது. “ஏய்…” என்றபடி கையை காட்டியபடி ஓடிவந்தது, பயத்தை அதிகரிக்கச்
குறுக்கே வழிமறித்த அவனது கை தடுத்து நிறுத்தியது.
“என்னை ஏன் தடுக்கிற?”
“பாப்பா.. பயப்படாதே.. உன் முகமெல்லாம் ஏன் வியர்த்து கொட்டுது… வா இந்த புறமா நம் ரூம் இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்..”
“டேய் விடுடா…”
“உன்னை விடவா, மறிச்சேன் கண்ணு..”
அதற்குள் மழை தூறல் வேகமெடுத்து கொட்டியது.
தெய்வா, அவனது கையை வெடுக்கென்று தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தாள். அவனும் பின் தொடர்ந்தான். ரெயில் நிலைய முகப்பு பகுதியில் வெளிச்சம் இருந்து. அங்கே சென்றுவிட்டால் போதும் என்ற நினைப்பில் ஓடினாள். அங்கே ஒருவன் குடையுடன் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தான். ஓடிச்சென்று தெய்வா அவன் குடைக்குள் ஐக்கியமாகிக் கொண்டாள்.
“உங்களை எங்கே வெயிட் பண்ண சொன்னேன். இங்கேயே வந்திட்டீங்க.. கண்ட கண்ட நாயெல்லாம் துரத்தி வழிமறிக்குது…”
என்று சத்தமாக சொன்னாள்.
அடுத்த நொடியில் தெய்வாவை வழிமறித்தவன் பின்வாங்கி தலைமறைவானான்.
“திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வரைச் செல்லும் பாண்டியன் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட தயராக உள்ளது.” &ரெயில்வே ஒலிபெருக்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே பஸ்சில் இருந்து இறங்கியவர்களும், ஆட்டோவில் வந்து இறங்கியவர்களும் மழையில் நனைந்தபடி ஓடி வந்து கொண்டிருந்தனர். போர்ட்டர்கள் ஆங்காங்கே வந்த ஆட்டோவை மொய்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கிய சிலர் அந்த மழையிலும் ஆட்டோ டிரைவரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
குடைக்குள் நுழைந்த தெய்வா, ரெயில் நிலைய போர்ட்டிகோவுக்குள் வந்ததும், அதிலிருந்து விடுபட்டாள்.
ஐ ஆம் சாரி… தாங்ஸ்… என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடினாள். அவளுக்காக தயாராக நின்ற ரெயிலில் படப்படப்புடன் ஏறினாள்.
பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் ரெயில் பெட்டியை ஆக்கிரமித்து இருந்ததால் வழிகூட இல்லாமல் தெய்வா தவித்தாள். இடித்துக் கொண்டு சற்று உள்ளே சென்றவள், “சார் இது எந்த கோட்ச்” என்று ஓரத்து இருக்கையில் இருந்த ஒருவரிடம் கேட்டாள்.
“எஸ்&7”
“அய்யோ… எனக்கு கோட்ச் எஸ்.3”
கீழே இறங்க முயன்றபோது வழியனுப்ப வந்தவர்களும் போட்டிப்போட்டு இறங்கியதால் தெய்வாவால் வாசலுக்கு வர தாமதமானது. எட்டிப்பார்த்தாள். பச்சை சிக்னல் பளிச்சிட்டது. இனி கீழே இறங்கி ஓடினால் கூட எஸ்&3 ஐ ஏற முடியாது.
ரெயில் பெட்டிக்குள்ளேயே நடை பயணத்தை தொடங்கினாள். கையில் இருந்த சூட்கேசை முட்டிக்கு முன்னால் தூக்கி பிடித்தபடி நடந்தாள். சூட்கேசுக்கு போட்டியாக தோளில் பின்னால் கிடந்த ஏர் பேக் அடிக்கடி முன்னால் வந்து விழுந்து கொண்டிருந்தது.
அடுத்த கோச்சுக்கு போனபோது டிக்கெட் பரிசோதகரை பலர் மொயத்துக் கொண்டிருந்தனர்.
“என்னால ஒண்ணும் செய்ய முடியாது. டிக்கெட் கன்பார்ம் ஆகாதவங்க தயவு செஞ்சு அடுத்த ஸ்டேசன்ல அன்&ரிசர்வ் கோட்சுக்கு போயிடுங்க…” என்றார் கண்டிப்புடன் டிக்கெட் பரிசோதகர்.
“சார்” என்றபடி தெய்வா நகர்ந்து கொண்டிருந்தாள்.
அவளிடம் டிக்கெட் பரிசோதகர், “என்னம்மா ஒனக்கு தனியா சொல்லணுமா…”
“சார் நான் எஸ்-&3 கோட்ச்சுக்கு போகணும். கொஞ்சம் வழிவிடுங்க சார்…”
“சரி சரி போங்க…”
தட்டுத்தடுமாறி அவள் செல்லவேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். ஓரிடத்தில் நடுத்தர வயதுக்காரர் அப்பர் பெர்த்துக்கு ஏற ஆயத்தமானான். முதலில் தனது சூட்கேசை கஷ்டப்பட்டு தூக்கி அந்த படுக்கையில் வைத்தான். அடுத்து ஒரு பெரிய ஏர்பேக்கை மேலே வைக்க தூக்கும்போது, அது தெய்வாயின் முகத்தை தட்டிவிட்டது-. லேசான வலியையும் எற்படுத்தி விட்டது.
“என்ன சார் கொஞ்சம் பொறுமையா பார்த்து வையுங்க…” என்ற தெய்வாவிடம் சாரிம்மா… கொஞ்சம் பொறுங்கம்மா நான் மேலே ஏறியப்பிறகு போங்க என்றான் அந்த நபர். அதோடு அவன் தனது இரு செருப்புகளையும் கழற்றி அப்பர் பெர்த்தின் மீது வைத்தான். அந்த செருபில் ஓட்டியிருந்த மண்துகள் கீழே இருந்தவர் வெள்ளை சட்டையில் பட, அவர் ஆத்திரம் அடைந்தார்.
“ஏய்யா செருப்பை எவனாவது மேல தூக்கி வைப்பானா? கீழே போடுய்யா” என்று கத்தினார், அந்த வெள்ளை சட்டைக்காரர்.
ஆனாலும் அந்த நபர் சாரி என்றபடி தனது செருப்புகளை எடுத்து மண்ணை தட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்தான்.
“ஏய்யா இப்பவும் செருப்பைகொண்டு மேல வைக்கிற-. கீழே போடுய்யா.” என்றார் அந்த வெள்ளைசட்டைக்காரர்.
இந்த செருப்பு முன்னூறு ரூபா தெரியுமா?
எத்தனை ரூபாயா இருந்த என்ன? செருப்பை தலைமேல தூக்கி வைச்சிக்கோ.
யோ என் செருப்பு, எனக்குன்னு ஒதுக்கிய இடத்திலத்தானே வைக்கிறேன். பேசமா உன் வேலைய பார்த்திட்டு இருய்யா.
அவர்கள் வாக்குவாதம் சிறிது நேரம் நீடிக்க, மற்ற பயணிகள் தலையில் அடித்துக் கொண்டனர்.
தெய்வாவு ‘இப்படியும் ஒரு மனுஷனா சரியான பட்டிக்காட்டான்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
“இதுவரைக்கும் நாலு சோடி செருப்பை ரெயில்ல தவற விட்டுக்கேன். செருப்பை தவறவிட்டவங்களுக்குத்தான் தெரியும் அந்த வருத்தம்.” என்றபடி அந்த நபர் அப்பர் பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டார்.
அந்த செய்த செயலிலும் அர்த்தம் உள்ளது. அவன் பட்டிக்காட்டான் அல்ல. பாதுகாக்க தெரிந்தவன் என்று தெய்வா மனதுக்குள் புகழாரம் சூட்டி தொடர்ந்து நடந்தாள்.
இன்னொரு இடத்தில் கைக்குழந்தையுடன் வந்த தம்பதிகள் இருபுற படுக்கைக்கு இடையே சேலையால் தொட்டில் கட்டினார்கள். இதனால் தெய்வாவுக்கு அங்கேயும் கொஞ்ச நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கே கீழ் பெர்த்தில் மூதாட்டி ஒருவரும், பக்கவாட்டில் உள்ள கீழ் பெர்த்தில் அவரது வயதான கணவரும் படுத்திருந்தனர். இன்னொரு கீழ் பெர்த்துக்கு உரிய நவரிடம், அந்த குழந்தையின் தந்தை, “சார் எங்களுக்கு அப்பர் பெர்த்துதான் கிடைச்சிருக்கு என் மனைவிக்கு உங்க இடத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்க முடியுமா” என்றார்.
அதற்கு அந்த நபர், “தப்பி நான் 500 ரூபாய் அதிகமா கொடுத்து இந்த சீட்டை வாங்கி இருக்கேன். என்னால மேல போக முடியாதுப்பா…” என்று கூறினார்.
“வேண்டாங்க, நானே மேல ஏறி படுத்துக்கறேன்.” என்றாள் அந்த குழந்தையின் தாய்.
தொட்டில் கட்டி முடிந்ததும், தெய்வா தொடர்ந்து நகர்ந்தாள். இப்படி எத்தனையோ காட்சிகளை கண்டு இறுதியில் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் எப்பாடா என்று உட்கார்ந்தாள். கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டு, நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே அவளுக்கு குடைக்குள் அடைக்கலம் கொடுத்த நபர்.
“சார் நீங்களா… நீங்க..” என்று இழுத்தபடி சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆம் அவளை வழியில் மறித்தவன்தான். இரண்டாவது கூபேயில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்தான்.
மீண்டும் அவள் முகத்தில் லேசாக வியர்வை துளிகள் பூக்கத் தொடங்கின.
எதிர் இருக்கையில் இருந்த அந்த நபருடன் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டாள். சார் என்று பேசியவள் உரிமையோடு பேசுவதுபோல் தொணியை மாற்றிக் கொண்டாள்.
‘பாவி இங்கே எப்படி வந்தான்.’ என்று மனதுக்குள் புலம்பினாள்.
“என்ன மேடம்… நீங்க யாரு-?” & எதிர் இருக்கையில் இருந்த நபர்.
“சார் நான் சென்னையில ஒரு கம்பெனியில வேலைக்கு சேர போகிறேன். அதற்கான இந்த ரெயில்ல ரிசர்வ் பண்ணினேன். வர்ற வழியிலே இந்த ஆசாமி என்னை மடக்கினான். அவன்கிட்ட இருந்து தப்புறதுக்காக.. நான் உங்கள தெரிஞ்சவங்க மாதிரி நடிச்சேன். அவனும் பயந்துட்டான்.”
“ஓகோ…”
“ஆனால் இப்ப அதே ஆசாமி இந்த ரெயில்ல ஏறி இருக்கான். அவன் எப்படி இங்கே வந்தான். இதே கம்பார்மெண்ட்ல எப்படி ஏறினான்? ஒரே பயமாக இருக்கு.”
“ரெயில்ல உங்கள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. கவலைப்படாதீங்க.”
“அவன் எதுவரைக்கு வாரானோ? தெரியலியே.”
“அவன் சென்னை வரைக்கும் வந்தான்னா, நான் உங்ககூட வந்து நீங்க எங்கே போகணுமோ அங்கே கொண்டு வந்து விட்டுடறேன்.”
“தேங்க்ஸ் சார்.”
“மேடம் அவனை பார்த்து இப்படி பயப்படறீங்களே… பேசமாக போலீசில் புகார் செய்துடலாமா?”
“வேண்டாம்… வேண்டாம்…” என்றாள் படப்படபுடன்.
“என்ன மேடம் அவனை கண்டு பயப்படறீங்க, போலீசிலயும் சொல்ல வேண்டாங்கறீங்க. அப்படின்னா அவன் யாரு? உங்கள ஏன் துறக்கிட்டு இருக்கான்-? ஏற்கனவே அவன உங்களுக்கு தெரியுமா?”
“அவனை எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால்…” அதற்கு மேல் சொல்ல விரும்பாதவள் போல் இழுத்தாள்.
“சரி மேடம் உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம். அதேநேரம் உங்களுக்கு என்ன உதவி வேணுமோ அதை செய்வேன்.”
“ரொம்ப நன்றிசார்.”
டிக்கெட் பரிசோதகர் வர அனைவரும் தங்கள் டிக்கெட்டை காட்டி பெற்றார்கள். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் படுக்க தொடங்கினார்கள். தெய்வாவும் தனக்கு உரிய படுக்கையில் படுத்தாள். எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள். ஆனால் இவளுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஓடும் ரெயிலில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பங்கள் நடந்துள்ளன. என்றோ படித்த அந்த செய்திகள் நினைவுக்கு வர தெய்வாவால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும். புரண்டு புரண்டு படுத்தாள்.
நாளைய தினம் வேலைக்கு போகும் நிறுவனம் எப்படி இருக்குமோ? என்ற கவலையை விட தன்னை மடக்கியவன் எப்போது என்ன செய்வானோ என்ற பயம்தான் அவளை ஆட்கொண்டிருந்தது.
அதிகாலை சுமார் நான்கு மணி அளவில்தான் கண்அயர்ந்தாள். அதன்பின் ரெயில் செங்கல்பட்டை தாண்டியபின்னர்தான் கண்விழித்தாள். நல்லவேளையாக அவன் மாயமாகி இருந்தான். மனதில் சற்று நிம்மதி.
“மேடம் நீங்க எங்க இறங்கணும்?”
“தாம்பரம்”
“நானும் அங்கத்தான், அடுத்த ஸ்டேஷன் அதுதான்.”
அசுர வேகத்தில் வந்த ரெயில் கூடுவாஞ்சேரியை அடைந்ததும், வேகத்தை கட்டுப்படுத்தியது. அருகே நான்கு வழிச் சாலையில் சென்ற பஸ்கள் ரெயிலின் வேகத்தை தாண்டி முந்திச் சென்றன. அதிக அளவில் பஸ்கள் சென்றாலும் அவை சீராக சென்றது நான்கு வழிச்சாலையின் மகிமையை காட்டியது.
தாம்பரம் வந்தடைந்ததும், ரெயிலில் மூன்றில் ஒருபகுதி காலியாகிவிட்டது.
“மேடம் நீங்க எங்க போகணும்? நான் உங்கள கொண்டுவந்து விட்டுட்டு போறேன்.”
“இல்லைசார் அவன்தான் இல்லியே, நானே போயிடுறேன்.”
“இல்லை. நீங்க எதிர்பாராத விதமா ரெயில்ல வந்து ஏறியது மாதிரி இங்கே எங்காவது உங்கள மடக்கிட்டான்னா?”
“எதுக்கு சார் உங்களுக்கு வீண் அலைச்சல்.”
“பராவியில்லை. சரி நீங்க எங்கே போகணும்ன்னு சொல்லலியே?”
“வேளச்சேரி பக்கத்துல”
“நானும் அங்கேதான்.”
“எந்த ஆபீஸ்?”
நிறுவனத்தின் பெயரைச் சொன்னாள்.
“ஓ நானும் அங்கேதான் வேலை செய்யறேன்.”
“அப்படியா சார்.”
“போன மாசம் புதுசா ஆள் எடுத்தாங்க. அதுல நீங்க செலக்ட் ஆகியிருக்கிங்களா?”
“ஆமா சார். நீங்களும் அங்கேதான் வேலை செய்றீங்களா? ரொம்ப சந்தோஷம்.”
“நல்ல கம்பெனிதானே சார்.”
“சென்னையில இருக்கிற நிறுவனங்கள்ல இது ரொம்ப நல்ல கம்பெனி. நல்ல சம்பளம். கவலை படாதீங்க.”
“நீங்க இங்க வேலைக்கு சேர்ந்து எத்தன வருஷமாச்சு?”
“நான் மூன்று வருஷத்துக்கு முன்னாடி சேர்ந்தேன்.”
“உங்க சொந்த ஊரு?”
“திருநெல்வேலி பக்கத்திலே. வேலைக்காகத்தான் இங்கே வந்தேன். நாங்க நண்பர்கள் இரண்டு பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறோம்… நீங்க எங்க தங்க போறீங்க?”
“என் பிரண்ட் லேடீஸ் ஹாஸ்டல் புக் பண்ணி அட்வான்செல்லாம் கொடுத்துட்டா. ஆனால் அவா இருக்கிறது திருவல்லிக்கேணி. தலைமைச் செயலகத்தில் வேலை.”
“ஓகே. வாங்க, கால் டாக்சி பிடிச்சி போயிடலாம்.”
“சார் சொந்த ஊருக்கு போயிட்டு வர்றீங்களா?’
‘ஆமா திருநெல்வேலிக்கு போயிட்டு ஒரு வேலை விஷயமா மதுரைக்கு வந்துட்டு வர்றேன்.”
சுமார் 15 நிமிட காத்திருப்புக்கு பின் டாக்சி வந்தது. அதனுள் அவர்கள் பயணித்தார்.
“என்ன மேடம் உங்க ஊரே மதுரைதானா?”
“ஆமா.”
“எங்க படிச்சீங்க?”
“மதுரை தியாகராஜா காலேஜுல…”
“பரவாயில்லியே, அங்க படிச்சதாலேதான் இங்கே வேலை கிடைச்சிருக்கு. நீங்க?”
“நான் நெல்லை கவர்ன்மெண்ட் என்ஜினீயரிங் காலேஜ்.”
“சார் உங்க பேரைச் சொல்லலியே?”
“நீங்க கேட்லியே”
“சாரி சார், உங்க பெயர்..?”
“சுரேஷ், உங்க பேரை சொல்ல விரும்பலைன்னா சொல்ல வேண்டாம். ஏதாவது ª-ஹல்ப் வேணும்ன்னா நீங்களே வந்து சொல்லுங்க.”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை சார். என் பேரு தெய்வா.”
“செல்வாவா?”
“இல்லை தெய்வா.”
“ஓ பழமையும், புதுமையும் கலந்த பேரு.”
“ஆமா எங்க அப்பாத்தா பேரு தெய்வானை. அதை எங்கப்பா தெய்வான்னு வைக்சிருக்காரு.”
“பாசக்கார அப்பான்னு சொல்லுங்க.”
புன்னகை மட்டுமே பதிலாக வந்தது தெய்வாவிடம். அதற்கு மேல் ஏதாவது பேச்சு கொடுத்தால் குடும்பத்தை பற்றி கேட்டு பதில் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளிவிடுவானோ என்று பயந்தாள்.
அதற்குள் போய்சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.
“மேடம் உங்க லேடீஸ் ஹாஸ்டல் இதாங்க.”
தெய்வா தனது சூட்கேஸ், பேக்குடன் கீழே இறங்கினாள்.
குளிச்சி, ரெஸ்ட் எடுத்துட்டு வேலைக்கு வாங்க. சாயங்காலம் ஆபிஸ்ல உங்கள மீட் பண்றேன்.
(தெய்வாவை பற்றி மேலும் அறிய ஒரு வாரம் காத்திருங்கள்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.