பெண் குரலில் பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த நெல்லை வாலிபர் கைது
1 min read
25.2.2020
சென்னையில் மயிலாப்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலர் மீது பெண் ஒருவர் இ.மெயில் புகார் அளித்து வந்தார். பிரியா மற்றும் பிரியதர்ஷினி போன்ற பெயர்களில் இந்த புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. அதில் இளைஞர்களின் பெயரை குறிப்பிட்டு ஆன்லைனில் செக்சுக்கு அழைப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு வந்தது.
இதையடுத்து போலீசார் இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினர். போலீஸ் விசாரணையில் செக்ஸ் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்தது பெண் அல்ல என்றும், பெண் வேடத்தில் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆண் என்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் வள்ளல் ராஜ்குமார் என்பதும் நெல்லை மாவட்டம் பண குடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், வள்ளல் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது பணம் பறிக்கும் நோக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட இளைஞர்களை இதுபோன்று பெண் குரலில் பேசி அவர் ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வள்ளல் ராஜ்குமார் போனில் பெண் குரலில் பேசும்போது செக்ஸ் ஆசையை தூண்டும் வகையில் நிஜ பெண்ணை போலவே பேசியுள்ளார். இந்த பேச்சின் நடுவிலேயே பேடிஎம் மூலமாக பணம் பரிமாற்றத்தை செய்ய சொல்லியும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதனை நம்பி பலர் தங்களது பணத்தை செலுத்தி ஏமாந்து உள்ளனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் போலீசில் கூறும் போது, பெண் குரலில் வள்ளல் ராஜ்குமார் பேசியது தெரியாமல் முதலில் 100 ரூபாய் பணத்தை செலுத்தியதாகவும் அதன் பிறகே சந்தேகப்பட்டு அவர் மீண்டும் 500 ரூபாயை செலுத்தாமல் உஷாரானதாகவும் கூறி உள்ளார். மோசடி ஆசாமியான வள்ளல் ராஜ்குமார் மேலும் பலரிடம் பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக வள்ளல் ராஜ்குமார் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெண் குரலில் பேசுவதற்கு மிமிக்ரி திறமை கை கொடுத்ததாக வள்ளல் ராஜ்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.