தமிழகத்தில் எந்த சிறுபான்மையின மக்களும் அச்சப்பட தேவையில்லை- முதல்வர் பேட்டி
1 min read
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 24ம் தேதி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரம் கோவை, சென்னை என தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், இரவு நேரத்தில் கூட பெண்கள் பாதுகாப்பாக செல்லக்கூடிய நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். குற்றங்களை கண்காணிக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த சிறுபான்மையின மக்களும் அச்சப்பட தேவையில்லை. திட்டமிட்டு, இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த, அரசியல் லாபத்திற்காக, தவறான, பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திட்டம் கொண்டு வருகிறோம். அடுத்தும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிறோம். மனமிருந்தால் ஏற்கலாம். சிறுபான்மையினர் போராட்டத்தை கட்டுப்படுத்தும் அரசு எங்களுடையது அல்ல. எந்த போராட்டம் நடத்தினாலும் எங்கள் அரசு அனுமதி தருகிறது. நாங்கள் யாரையும் தடை செய்யவில்லை.
தமிழக சட்டமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. கவர்னர்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.