மானசீக காதல்(தொடர்கதை-4 எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்
1 min readMaandseeka magal-4 Novel by Kannambi A.Rathinam
1-3-2020
முன்கதை- செல்வன் ஏழை தம்பதியரின் ஒரே மகன். தந்தை குடிப்பழகத்திற்கு ஆளானதால் வீட்டைவிட்டு வெளியேறி ஓர் அச்சகத்தில் வேலைக்கு அமர்கிறான். அங்கே ரோசி என்ற பெண்ணுடன் காதல் மலர்கிறது. சாதாரணமாக இருந்த செல்வக்கு கல்வி அறிவு கொடுத்து மேதையாக்குகிறாள் ரோசி. இதனால் ஒருபத்திரிகை தொடங்குகிறான்.)
செல்வன் நல்ல வீடு ஒன்று வாங்கினான். தாய் -தந்தையரை அந்த வீட்டில் குடியிருக்கும்படி அழைத்தான். மகனின் செல்வாக்கு தந்தையின் மனதை மாற்றியது. மகன் பேசும் கூட்டங்களுக்குத் தவறாமல் போய்விடுவார். செல்வனின் வாயிலிருந்து வந்த அறநெறிக் கருத்துக்கள் அவர் மனதில் பதிவானது. ‘குடி குடியை கெடுக்கும்’ என்று செல்வன் எழுதிய நூலைப் படித்தார். உணர்வு அவர் உள்ளே குடிபுகுந்தது. குடி என்பது குடியைக் கெடுக்கும் என்பது மட்டுமல்ல, மகனின் மரியாதையைக் கெடுத்துவிடும் என்று உணர்ந்தார். குடியை அடியோடு வெறுத்தார். குடிப் பழக்கத்தை விட்டுத் தொலைத்தார்.
தாயும் தந்தையும் மனத்தெளிவுடனும் முகப் பொலிவுடனும் நல்ல கணவன் – மனைவியாக வாழ்ந்தார்கள். நல்ல தாய் – தந்தையாக நடந்துகொண்டார்கள். செல்வன் வித்தியாசமாகச் சிந்திக்கின்றவன். தான் பிறப்பதற்கு அம்மா – அப்பாதான் காரணமானவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் மனப்பூர்வமாக இணைந்து தாம்பத்தியம் கொண்டிருப்பார்களா என்ற கேள்வி செல்வனின் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. தினமும் அப்பா குடித்துவிட்டு வருவார், அப்பாவின் ஆசைக்கு அம்மா வேண்டா வெறுப்பாக இணங்கித்தானே இதுவரை வாழ்நாளை ஓட்டியிருப்பாள். அவர்களின் உடல் உறவுக்கு அடையாளச் சின்னமாக நான் பிறந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் மனப்பூர்வமான தாம்பத்தியம் அனுபவிக்க வேண்டும் என்று செல்வன் ஆசைகொண்டான். தனக்கு இன்னொரு உடன்பிறப்பு வேண்டும் என்று எண்ணினான். ஒரு நாள் அம்மா தனியாக இருந்தபோது அம்மாவிடம் போய் ஏதோ ஒன்றைக் சொல்வதற்காகப் பீடிகை போட்டான்.
“அம்மா எனக்கு அண்ணனோ, தம்பியோ, அக்காளே, தங்கையோ கிடையாது. இதுவரை அனாதைபோல் வாழ்ந்துவிட்டேன். நான் தனி மரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு சகோதர சகோதரி வேண்டும்.
“போடா… போடா… மேடை மேடையாகப் பேசுறே… ஒரு அம்மாகிட்ட என்னத்ததான் பேசணும் என்கிற விவஸ்தை இல்லையா” என்று கேட்டாள்.
“விவஸ்தை, அவஸ்தை அது எல்லாம் எனக்குத் தெரியாது. நீ இதுவரை அப்பாகூட அன்பாக இல்லறம் நடத்தல்ல என்கிறது எனக்குத் தெரியும். பலதடவை அப்பார்ஸன் பண்ணினது எனக்குத் தெரியும். திருக்குறள் அன்பான இல்லறத்தைப் பெரிசா பேசுது. நீயும் அப்பாவும் அன்பான இல்லறம் நடத்தி அதன் மூலம் எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ கிடைச்சா நல்லா இருக்குமேங்குறதுதான் என் ஆசைக்கனவு.”
“கல்யாண வயசுல உன்னை வச்சிக்கிட்டு நாங்க அப்படி நடந்தா நல்லாயிருக்குமாடா, இனி குழந்தை பெத்துக்கிட்டா உலகம் என்ன பேசும்” என்றாள் செல்வனின் தாயார் தேவியம்மாள்.
“அம்மா… பெரிய பெரிய பேரன் பேத்தி இருக்கும்போது பெண்டாட்டி, வைப்பாட்டின்னு அலையுறான். உலகம் பேசுறத பேசிக்கிட்டேதான் இருக்கும். எனக்கு இப்பதான் இருபத்திரண்டு வயசாகுது. பெண்களுக்குத் திருமண வயசு இருபத்தொன்று என்று எல்லா இடமும் அறிவிப்பு இருக்கு. எனக்கு இன்னும் கல்யாண வயசு வரல்ல. அதுக்குள்ளே நீங்க அம்மா – அப்பா ஆகிறது தப்பில்ல.” என்று சொல்லிவிட்டு செல்வன் போய்விட்டான்.
காலம் ஓடிக்கொண்டிருந்தது.
இரவு செல்வனின் தாயாரும் தந்தையும் தனிமையில் இருக்கும் சூழலை உருவாக்கிவிட்டு அவன் வெளியூர் போய்விட்டான். இரவு இருவரும் ஒரே அறையில் தூங்கும் நிலை. செல்வனின் தாயார் கணவனிடம் செல்வன் சொன்னதைத் தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“எனக்கு அறிவு, ஞானம், தியாகம் எல்லாமே கற்றுத் தந்தவன் நம்ம மகன். என் உடம்புக்குள்ளே, என் உள்ளத்திலே இனி காமத்துக்கு இடமில்ல. நம்ம ரெண்டு பேரும் உடலால் இணையவேண்டியதில்ல. அன்பால இணைஞ்சிருந்தா போதும். செல்வனுக்கு ஒரு கல்யாணம் செய்துவைத்து பேரக் குழந்தையோட கொஞ்சினா போதும். அறுபது அல்லது எழுபது எண்பது வரை காமம், சபலம் கொண்டலையக்கூடிய பேய்களும் இருக்கத்தான் செய்யுது. எனக்கு நாகரிகம் கற்றுத் தந்தவனா இப்படிச் சொன்னான்” என்று மறு வார்த்தை கேட்டார்.
“நீங்க எவ்வளவு பெரிய குடிகாரனா இருந்தீங்க. அவன் கண்ணு முன்னே எங்கிட்ட அநாகரிகமாக நடந்திருக்கிறீங்க. இப்ப நம்ம ரண்டுபேரும் தனிமையா இருக்கிறோம். நல்ல வீடு கட்டில் மெத்தையெல்லாம் இருக்கு. அதைப் பார்த்து என் மனசுல ஒரு சபலம் ஏற்படத்தான் செய்யுது” என்று சொல்லி முடித்தாள்.
கட்டில் இருவரையும் இணைத்தது. தடையற்ற அந்த தாம்பத்தியம் செல்வனின் தாயாரைக் கர்ப்பிணியாக்கிவிட்டது. பலவாறு யோசித்தாள். ஊர் கேலி செய்யுமே என்று அஞ்சினாள். கணவனை அழைத்துக்கொண்டு கருகலைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.
செல்வன் எதிர்பார்த்தது ஈடேறிவிட்டது. தாய் கர்ப்பமானதும் செல்வத்துக்குத் தலைகால் புரியவில்லை. இப்படியும் ஒரு மகன் இருப்பானா என்ற கேள்வியை எழுப்பிவிட்டுவிட்டது.
தனக்கு உடன்பிறப்பு உருவாகி இருப்பது பற்றி ரோசியிடம் சொல்லும் போது ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டான்.
செல்வனின் சொல் ரோசியின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. செல்வனின் தலை கால் புரியாத ஆனந்தம் ரோசியின் அன்பைச் சிதைக்கும் ஒரு கருவியாகிவிட்டது.
‘உங்க கல்யாணத்தப் பற்றி நினைச்சிப் பார்க்காம, இந்த வயசுல கர்ப்பமா இருக்கிறது என்ன நாகரிகமுன்னு எனக்குத் தெரியல்ல,” என்று ஒரு கல்லைத் தூக்கிப் போட்டாள்.
“ரோசி… உனக்கு என் மனசின் அடி ஆழத்தில இருக்கிற உணர்வு புரியல்ல. எங்க அம்மாவும் அப்பாவும் இதுவரை மனப்பூர்வமான குடும்ப வாழ்வு வாழவே இல்ல. எங்கம்மா ஒரு நரக வாழ்வு வாழ்ந்தவங்க. அவங்க இனி இருக்கிற நாள் சந்தோசமாக வாழணும் என்கிறதுதான் என் ஆசை. எங்கம்மா கர்ப்பமா இருக்கிறது எனக்குப் பெருமையாக இருக்கு” என்று சொல்லி முடித்தான்.
“உங்க பெருமையெல்லாம் உங்களோடேயே வச்சிக்குங்க. எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்ல” என்று சொல்லி முடித்துவிட்டு நடையைக்கட்டத் தொடங்கினாள்.
செல்வனின் மனம் இடிந்துபோனது. ‘காலம்’ பத்திரிகையின் மேலாளராக இருந்த ரோசிக்கும், ஆசிரியராக இருந்த செல்வனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
-தொடரும்