May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-5 தொடர்கதை எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்

1 min read

Maanaseega Magal-5 Novel by kannambi Rathinam

8-3-2020

(செல்வனின் தந்தை மது பழக்க்திற்கு அடிமையானதால் செல்வன்வீட்டைவிட்டு வெளியேறினான். ஒர் அச்சகத்தில் வேலை பார்த்த அவனுக்கு ரோசி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.அவளால் தமிழறிவு பெற்ற அவன் பத்திரிகை நடத்தும் அளவுக்கு உயர்ந்தான். தந்தை திருந்தியபின் அவ்களை அழைத்து வந்தான். தனக்கு ஓர் சகோதரனோ சகோதரியோ பிறக்க இருப்பதை தன் காதலியிடம் சொன்னான். அங்கே….)

அடுத்த நாள் பத்திரிகை அலுவலகம் கலகலப்பை இழந்தது. செல்வனும் ரோசியும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாகப் பணியில் ஈடுபட்டு இருவரும் சொல்லிக்கொள்ளாமல் வீடுகளுக்குச் சென்றனர். செல்வனுக்கு ஏதோ ஒரு பேய் தனது மனதைப் பிய்த்துத் தின்றதுபோல் இருந்தது. தூக்கம் வராமல் புரண்டான். ரோசியும் தூக்கம் வராமல் தத்தளித்தாள்.
மறுநாள் செல்வன் அலுவலகத்துக்குப் புறப்பட்டான். அந்த நேரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தி செல்வனின் மனதை இடிபோல் தாக்கியது. “சுனாமி அலைகளின் ஆக்கிரமிப்பு கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது. பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்” என்ற செய்தி அவனது செவிப்பறைகளை அறுத்துப் போட்டதுபோல் இருந்தது. ஸெல் எடுத்து ரோசியின் எண்களை அழுத்தினான். தொடர்பு கிடைக்கவில்லை. அவனது உள்ளத்தில் சுனாமிக் கொந்தளிப்பு. மோட்டார் சைக்கிளை எடுத்தான். ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள அவளது வீட்டுக்கு விரைந்தான். கடற்கரை மயானம் போல் காட்சியளித்தது. அலைகள் அடங்கி அமைதி அடைந்தன. ரோசி வீட்டுப் பின்புறம் வரை அலைகள் வந்து தாக்கியிருந்தது. செல்வனைக் கண்டதும் ரோசியின் முகம் மலர்ந்தது. ரோசியின் அம்மாவும் சகோதரர்களும் செல்வனைக் கண்டு ஆறுதல் தெளிவு அடைந்தார்கள்.
“ரோசிக்கு போன் போட்டேன். கிடைக்கல்ல என்னவோ… ஏதோன்று வண்டியை எடுத்துட்டு வந்திட்டேன்” என்று சொன்னான் செல்வன்.
“அப்படியா… போன் ரிங் கேக்கல்ல… இங்கே அலைகள் எழும்பி வந்ததைக் கண்டு மக்கள் கூக்குரல் போட்டாங்க. நாங்களும் பதறிப்போயிட்டோம். அம்மாவுக்கு இதயம் பலவீனமாகியிருக்குன்னு டாக்டர் சொன்னதுனால… அம்மாவை ஆறுதல்படுத்துறதிலேயே எங்க கவனம் இருந்தது. அலைகள் அடங்கின பிறகுதான் எங்க படபடப்பும் அடங்கியிருக்கு” என்று சொல்லி முடித்தாள் ரோசி.
சுனாமியால் ஏற்பட்ட உயிர்ச்சேத நிலவரங்கள், பொருள் சேத நிலவரங்கள் எல்லாம் தொலைக்காட்சி மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சி ஏதோ ஒரு கோர தாண்டவம் ஆடும் பூதம் போல் பயமுறுத்தியது. ஆழிப் பேரலைகள் 9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தைப் பெயர்த்துப் போட்டது என்ற செய்தி உலுக்கியது. 133 அடி உயரத்திலுள்ள திருவள்ளுவர் சிலையின் பின்புறம் மோதிய அலைகள் வள்ளுவரின் தோளை அருவியாக்கி வழிந்தது.
“சரி இங்கேயிருந்து கடலைப் பார்த்துக்கிட்டேயிருந்தா இன்னும் அலை எழும்பி வந்திடுமோ என்கிற பயம் வந்துகிட்டுத்தான் இருக்கும். எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்திடுங்க. எங்களுக்கும் ஆறுதலா இருக்கும்” என்றான் செல்வன்.
அம்மா அச்சத்திலிருந்து விடுபட பரந்து விரிந்து கிடக்கும் கடலைப் பார்க்காமல் இருந்தால் நல்லதென்று ரோசி நினைத்தாள். கடல் இப்போது அமைதியாக இருந்தாலும், அதன் ஆவேச அலைகள் கண்ணெதிரே தோன்றி பயமுறுத்திக் கொண்டுதான் இருந்தன.
“என்னம்மா செல்வன் வீட்டுக்குப் போகலாமா…” என்று கேட்டாள் ரோசி. செல்வன் உன் மேல் உயிரையே வச்சிருக்கான். இன்னைக்கு பத்திரிகையில் சுனாமி பற்றிய செய்திகள்தான் பரபரப்பாகயிருக்கும். நீ போகல்லன்னா செல்வனுக்கு வேலையே ஓடாது. நாங்க செல்வன் வீட்டில இருக்கிறோம். நீங்க ரெண்டுபேரும் பத்திரிகை வேலையைப் பாருங்க” என்றார் ரோசியின் தாயார்.
சுனாமியால் பல ஆயிரம்பேர் உயிரிழந்தனர். வீடுகளை இழந்தனர்.
பத்திரிகை அலுவலகம் பரபரப்பாக இருந்தது. சுனாமி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிருபர்களும் போட்டோ கிராபரும் விரைந்தார்கள். அந்த பரிதாபக்காட்சி செல்வன் மனதையும் ரோசி மனதையும் கரைத்தது. இருந்தாலும் மனம் சோர்ந்து ஓய்ந்து இருந்துவிடாமல் வேலையில் கவனம் செலுத்தினார்கள். பத்திரிகையில் பரபரப்பான செய்திகள் அடங்கியிருந்தன. விற்பனை வேகமாக இருந்தது. பத்திரிகையில் இடம்பெற்ற செய்திகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பத்திரிகை உரிமையாளர் செல்வனையும் ரோசியையும் பாராட்டினார். அழிவையும் சுனாமியின் அலங்கோலத்தையும் பற்றி எழுதிவிட்டுப் பாராட்டு வாங்குவதில் இருவருக்கும் மனம் இசையவில்லை. செய்திகளை வியாபாரமாக்கிப் பணம் சம்பாதிக்கும் மனநிலையில் பத்திரிகை உரிமையாளரும் இல்லை. வேலை முடிந்து மூவரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடக்கும் நிவாரண வேலைகளைப் பார்வையிட்டார்கள். அரசு உதவிகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் கவிந்துகிடந்தது. இருந்தாலும் உயிர் பிழைத்தது பெரிய விஷயம் என்று கருதி மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு அவஸ்தைப்பட்டார்கள். பல இடங்களில் உதவி முகாம்கள் அமைக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களும், பீதியால் கலங்கியவர்களும் பள்ளிக்கூடங்களிலும் ஊரில் உள்ள கோயில் சர்ச்களிலும் தங்கவைக்கப்பட்டார்கள்.
சில ஊர்களில் குடிப்பவர்களை இந்துக் கோவில்களில் தங்க வைத்தால் கோவில் புனிதம் கெட்டுவிடும் என்பதுபோல் பேசினார்கள். ஆனால் அவர்கள் குரல்கள் ஓங்கவிடாமல் அடங்கிவிட்டது. அதே நேரத்தில் இந்துக்கள் பலர் கிறிஸ்தவ ஆலயங்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சாதி வேற்றுமை, மதவேற்றுமைகளை எல்லாம் சுனாமி அலைகள் அடக்கிவிட்டன. ஒவ்வொரு மனதிலும் எழுச்சி அலைகள் எழும்பினால் சாதி மதங்களெல்லாம் அடங்கிவிடும்.
செல்வனும் ரோசியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர். ஏற்கெனவே பத்திரிகை மேல் மக்களுக்கு நல்ல அபிமானம் இருந்ததால், பத்திரிகை ஆசிரியரான செல்வன் மேல் மக்களுக்குப் பற்றுதல் ஏற்பட்டிருந்ததால் பத்திரிகை முகவரிக்கு ஏராளமான நிதிகள் குவிந்தன. நிதி அனுப்பியவர்களின் பெயர், முகவரிகள், தொகை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. கணக்கு கொடுக்கல் வாங்கல் அப்பழுக்கற்ற தன்மையாக இருந்தது. நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து உதவிகள் செய்யப்பட்டன. நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் சுனாமி அழிவால் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அவர்களின் திருமணத்துக்குக் காலம் பத்திரிகை உரிமையாளரின் ஒத்துழைப்பு பெரிய அளவில் இருந்தது. அரசாங்கம் செல்வனைப் பாராட்டிக் கௌரவித்தது.
இரவு பகல் பார்க்காமல் செல்வன் செய்த சமூகப் பணி அவனை நாடறியச் செய்தது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும் செல்வனின் பணியைப் பாராட்டியது. பாராட்டு குவியக்குவிய செல்வனின் மனம் விரிந்துகொண்டே போனது. அறக்கட்டளை ஒன்று நிறுவி படிப்புக்கு உதவி, திருமண உதவி, முதியோர் உதவி இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டால் என்ன என்ற சிந்தனை மேலோங்கியது. ரோசியிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டான்.
“தாராளமாகச் செய்யுங்கள்” என்றாள் ரோசி.
“செய்யுங்கள் என்று என்னை சொல்லிவிட்டு நீ விலகிக்கொள்ளப் பார்க்கிறாயா?” என்று கேட்டான் செல்வன்.
“நாம் இருவரும் காதலித்தோம் என்பது உண்மையான விஷயம். காதலில் மட்டும்தான் நாம் கருத்தொருமித்தவர்களாக இருந்தோம். ஆனால் வேறு விஷயங்களில் எல்லாம் கருத்தொருமித் தவர்களாக இருக்கிறோமா… என்றால் அது சாத்தியப்படாது. உங்கள் அடிமன உணர்வு ஆரோக்கியமானதுதான். ஆனால் எல்லாம் எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் கேள்விக் குறிதான்.
நம்ம காதலைப் பற்றி அம்மாவிடம் சொன்னேன். உங்களை அம்மாவுக்கு நல்லா புடிச்சிருக்கு. ஆனா இந்த சமுதாhயத்தில இருக்கிற சாதிமதப் பேயும் அம்மாவைப் புடிச்சிருக்கு. அதனால கல்யாணம் நடக்கிறது சாத்தியமா என்கிறது எனக்குத் தெரியல்ல. வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்க” என்றாள் ரோசி.
“கல்யாணம் நடக்கிறதுக்கு நம்ம ரெண்டு பேர் முயற்சியும் சமபங்கு இருந்தாதான் சாத்தியப்படும்” என்றான் செல்வன்.
“நான் என்னால முடிஞ்சதையெல்லாம் சொல்லியாச்சு. இனி நீங்கதான் வந்து கேக்கணும்” என்றாள் ரோசி.
“சரி நான் மட்டும் வந்து கேட்கவா, அம்மா அப்பாவோட வந்து கேட்கவா”
“அம்மா அப்பாவுடன் செல்வன் ரோசி வீட்டுக்குப் போனான். ரோசியின் அம்மா செல்வத்தின் அம்மாவைப் பார்த்தார். “என்ன இந்த அம்மா இந்த வயசுல கர்ப்பமா இருந்துகிட்டு மகனுக்குப் பெண் கேட்டு வந்திருக்காங்க, என் பொண்ணு அங்கே பிரசவம் பார்க்கத்தான் போகணுமா” என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழுந்தது.
“இந்த நிலைமையில் பெண் கேட்க வந்திருக்கிறீங்க… எல்லாம் பிரசவம் முடிஞ்சி பார்க்கலாமே” என்றார் ரோசியின் அம்மா.
“அதுக்கு இன்னும் அஞ்சு மாசம் ஆகும். அதுக்கு முன்னால எல்லாம் பேசி நிச்சயம் பண்ணிடலாம்னு நினைக்கிறோம்.” என்றார் செல்வனின் தாயார்.
“நல்லா இருக்கம்மா நீங்க சொல்றது… அப்படின்னா என் பொண்ணு வந்து உங்களுக்கு பிரசவம் பார்க்கணுமா” என்று பளிச்சென்று கேட்டுவிட்டார்.
செல்வனின் முகத்தில் ரோசம் கோடுகளைக் கீறியது.
“அம்மா… இனியும் இங்கே இருந்தா… மரியாதை இல்ல…” ரோசியின் அம்மாவைப் பார்த்து “அம்மா வார்த்தையை அளந்து பேசுங்க… நீங்க உங்க கணவர்கூட சந்தோசமா வாழ்ந்தவங்க. எங்க அம்மா கணவன் கிட்ட அடி – உதை வாங்கி கஷ்டப்பட்டவங்க. பிரிஞ்சி இருந்தவங்க. இப்போதுதான் ஒரு வருசமா சேர்ந்திருக்கிறாங்க. உலகத்துல என்னவெல்லாமோ தப்பு தண்டா நடக்குது. அவங்க காலாகாலத்துல சந்தோசமா இருந்திருந்தாங்கன்னா, எனக்கு ஒரு தங்கச்சி பொறந்திருக்கும். அவங்களுக்கும் பொம்பிளபுள்ளன்னா உயிரு. இப்போ எங்கம்மாவுக்கு என்ன வயசாகிப்போச்சு. ஆண் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோருக்குக் கடைசி காலத்துல உதவுறதில்ல. பெண் பிள்ளைகள் பாசமா இருக்கிறாங்க. மருமகள் உதவுறதவிட மகள் உதவுறதுல ஒரு நெருக்கம் இருக்கும். அம்மா அப்பா சந்தோசமா இருக்கட்டும்னு நான்தான் ஆசைப்பட்டேன். இதெல்லாம் அநாகரிகம்னு நினைச்சீங்கன்னா அதுதான் அவமானம். மருமகளை ஆசை நாயகியாகவும் மருமகனை ஆசை நாயகனாகவும் வச்சிருக்கிற இந்த அநாகரிக சமுதாயத்தில் எங்கம்மாவை அநாகரிகம்னு நினைச்சீங்கன்னா அப்புறம் உங்க இஷ்டம். ரோசிக்கு வேறு மாப்பிள்ளை பேசுறதா கேள்விப்பட்டதாலத்தான் அவசரமா வந்து பெண் கேட்டோம். நாங்கள் வர்றோம்” என்று வார்த்தைகளை வேகமாக அடுக்கிவிட்டு செல்வன் வெளியேறினான். அம்மாவும் அப்பாவும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
செல்வனின் அம்மா அவமானத்தின் உச்சக்கட்டத்தில் நின்றுகொண்டிருந்தாள். செல்வனின் தந்தையின் முகம் தொங்கிப்போனது. மகன் விரும்பிய இடத்தில் திருமணம் செய்துவைக்க முடியவில்லையே என்று மனம் நொந்தார்.
“அப்பா… யாரோ எதையோ சொன்னாங்கன்னு மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க. இந்த உலகத்தில் மனித உணர்வுகளைப் புரிஞ்சிக்கிட்டவங்க ரொம்ப குறைவு. எனக்குத் தெரிஞ்சு நான் பிறந்த பிறகு அம்மாவும் நீங்களும் மனப்பூர்வமான சந்தோசமாக வாழ்ந்ததாக தெரியல்ல. இதுவரை நீங்க வாழ்க்கையைப் பாழாக்கிட்டீங்க. இனி இருக்கிற நாளிலாவது சந்தோசமாக வாழணுமுன்னுதான் நீங்க ரெண்டுபேரும் தாம்பத்தியத்துல ஈடுபடணும்னு நினைச்சேன். பத்தியமான வாழ்க்கை பயனற்றது” என்று சொல்லி முடித்தான் செல்வன்.
“எந்த மகனுக்கும் ஏற்படாத ஆசை உனக்கு வந்திருக்கு. நாங்களும் புத்திகெட்டு நடந்துக்கிட்டோம். இப்போ மத்தவங்க குத்திக்காட்டும் அளவில் ஆகிச்போச்சு” என்று மனம் நொந்து பேசினாள் அம்மா.
“அம்மா… சும்மா புலம்பிக்கிட்டே இருக்காதீங்க. நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளை அறந்துபோகச் செய்து ஒற்றை மரமாக்கிவிடும். நான் ஒற்றை மரமாக வாழ விரும்பல்ல. சகோதர பாசமாக வாழத்தான் ஆசைப்படுறேன். அது வெறும் ஆசை என்று மட்டும் சொல்ல விரும்பல்ல, வெறி என்றுகூட சொல்லலாம்.
“எத்தனையோ இடங்கள்ல அம்மாவுக்கு இருபது, இருபத்தஞ்சு வயசு மகள்கள் பிரசவம் பார்க்கிறாங்க. நான் ஆம்பிளயா இருக்கிறதுனால நீங்க சங்கோஜப்படுறீங்க. எந்த சங்கோஜமும் தேவையில்லை. நான் காதலிச்சவளே மனைவியாக வந்தால் அவள் உங்களுக்கு மகளாக இருந்து பிரசவம் பார்ப்பாள்ன்னு நினைச்சேன். அது நடக்காது போலிருக்கு. ஒரு மாசம் பார்ப்போம். நல்ல பதில் வந்தா நல்லது. இல்லேன்னா என் பாணியை நான் மாத்திக்குவேன்” என்றான். மேலும் தொடர்ந்தான்.
எத்தனையோ பேர் மனைவிக்கு பிள்ளைப்பேறு இல்லேன்னு தாய்வீட்டுக்கு அனுப்பி வச்சிக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிறான். அந்த புதுப்பெண் மூலம் அவனுக்குக் குழந்தை பிறக்கலாம், பிறக்காமலும் இருக்கலாம். அதையெல்லாம் யோசிக்காம கல்யாணம் பண்ணிக்கிறாங்க. முதல் மனைவிக்கு வாழாவெட்டி என்கிற பட்டம் கொடுத்து ஊர் வாழவைக்குது. அந்த மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வாழ்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன். குழந்தை பெற முடியாத நிலைக்கு கணவன் காரணமா மனைவி காரணமான்னு நினைக்காம மலடி மலடின்னு சொல்கிற மன மலட்டு ஜென்மங்கள் உணராம இருக்கிறவரை மலடி, வாழாவெட்டி என்கிற பட்டங்கள் இருந்துகிட்டுதான் இருக்கும். இதையெல்லாம் மாற்றிக் காட்டணும் என்கிற ஒரு வெறி என் மனசுல ஊறிப்போச்சு. அந்த வெறிக்குக் காரணமே ரோசிதான். அவதான் என் மனசில பல புரட்சிச் சிந்தனைகள் வளர்வதற்குக் காரணமாக இருந்தாள். பல புத்தகங்கள் படிக்க வைத்தாள். இப்போது என் சிந்தனைப் போக்குக்குத் தடங்கலாக இருக்கிறாள். பரவாயில்லை எல்லாம் நன்மைக்கே. அனுபவங்கள்தான் ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது” என்று சொல்லி முடித்தான்.
ஒரு மாதம் ஓடிப்போனது. ரோசி வேலைக்கு வரவில்லை. செல்வன் மனம் தவித்துத் தவித்து அடங்கியது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்ற செய்தி அவன் காதுகளில் விழுந்தது. நிலையறிந்து தடுமாறினான். வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியாமல் குழப்பம் அடைந்தான். இருப்பினும் இதயத்தை வலுவாகப் பிடித்துக்கொண்டு வேலையில் ஈடுபட்டான். நெஞ்சுக்குள் பழைய நினைவுகள்
வந்து முட்டின. அதற்கு வடிகால் தேட வேண்டுமென்றால் டாஸ்மாக்குக்குத்தான் போகவேண்டும். அந்த நரக வாசலுக்குப் போனால் வாழ்க்கை நாறிப்போகும். தந்தையின் குடிப்பழக்கம் தன் குடும்பத்தை உருக்குலைத்ததை நினைத்து அந்தக் கேடுகெட்ட வாசலுக்குப் போகாமல் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.