தமிழாய் வாழ்ந்த ஆசானுக்கு இதய அஞ்சலி -கடையம் ஆ.பாலன்
1 min read
எங்கள் தமிழ் ஆசான் திரு. குமாரசாமி அவர்கள் (பேராசிரியர் அறிவரசன்) கடந்த 4.3.2020 அன்று புதிய தென்காசி மாவட்டம் கடையத்தில் இயற்கை எய்தினார். அவரிடம் அன்பு நிழலில் ஆனந்தம் கண்டவன் நான். எனக்கு புதுமுக வகுப்பில் (பி.யூ.சி.) தமிழ் பேராசிரியர். நான் பொதுவாக எந்த ஆசிரியர்களிடமும் அதிகமாக பேச மாட்டேன். நான் படிப்பில் சுமார் ரகம். அதனாலோ என்னவோ ஒரு தாழ்வு மனப்பான்மை. ஆனால் வெளியில் நண்பர்கள், மற்றும் உறவினர்களிடம் நன்றாக பழகுவேன்.
இந்த நிலையில் ஒரு நாள் கல்லூரி வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். பேராசிரியர் குமாரசாமி சார் என் தோளில் கை வைத்தார். நீ நாடகம் எல்லாம் போட்டிருக்கியோ என்றார். ஆமாம் சார்… என்றேன்.
(நானும் நண்பர் முத்துமணியும் இணைந்து 8ம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறை நாளில் மாட்டுத் தொழுவத்தில் நாடகம் போட ஆரம்பித்தோம். பின்னர் ஆண்டுதோறும் பொது இடத்தில் மேடை போட்டு நாடகம் நடத்தினோம்.)
நாம் ஊரில் நாடகம் போட்டது அவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்தேன். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.
வகுப்பில் ஒருநாள் அவர் மறக்க முடியாத சம்பவம் என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொன்னார். நான் எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதுதான்… “எனக்கு சின்ன வயதிலேயே ஒரு பெண் மீது காதல். நான் வளர வளர அந்தக் காதல் உணர்வு வளர்ந்து கொண்டே போனது. அவளை அடையும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு நாள் அவளை நான் அடைந்துவிட்டேன். அவள் வேறுயாரும் அல்ல. முத்தமிழில் ஒன்றான நாடக கலைதான்” என்று நாடகத்தின் மீதான ஆர்வத்தை கட்டுரையாக எழுதி இருந்தேன். இதை படித்தவிட்டுத்தான் அவர் என்னிடம் கேட்டிருக்கிறார்.
இப்படித்தான் அவர்பால் எனக்கு அன்பு ஏற்படத் தொடங்கியது.
கல்லூரி படிப்பு முடிந்த பின்னர், பேராசிரியர் மாமா எல்.எம்.நாராயணன் அவர்கள் மூலம் குமாரசாமி சார் மிக நெருக்கமானார். அப்போது விடுதலைப்புலி இயக்கம் வளரும் நேரம். இவர் அவர்களுக்கு அதிக உதவி செய்துள்ளார். வாடகை வீடானாலும் அவர்களை தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளார். கடையம் பெரிய தேர் திடலில் பழ.நெடுமாறன் தலைமையில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் என்னையும் பேச வைத்து எனக்கு பெருமை சேர்ந்தார், குமாரசாமி சார்…
அதன்பின் எங்களது முத்தமிழ் கலா மன்றம் சார்பில் கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். முதல் இதழை அவரிடம் நானும் தம்பி ரவியும் நேரில் சென்று காட்டினோம். அதில் எழுத்துப்பிழை இருப்பதை சுட்டிக்காட்டி புத்தகம் முடிந்ததும் என்னிடம் காட்டுங்கள் முக்கியமான பிழையை நான் திருத்தி தருகிறேன் என்றார். ஒரு பேராசிரியர், சாதாரண பையன்களிடம் இப்படி சொல்வது எவ்வளவு பெருந்தன்மை தெரியுமா? பத்திரிகை அலுவலங்களில் வேலை பார்க்கும் யாரிடமாவது இதை சொன்னால்தான் குமாரசாமி சாரின் பெருந்தன்மையின் உச்சம் புரியும்.
அவரது அறிவுரையின் படி சில மாற்றங்களை செய்தோம். இங்கே நான் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் நாத்திக கொள்கை கொண்டவர். பகுத்தறிவாளரான அவர் சின்ன பையன்களான எங்களிடம் அவரது சொந்த கொள்கை கருத்தை எழுதச் சொல்வும் இல்லை. அவர் அப்படி ஒரு கட்டுரையை தந்து அதில் பிரசுரிக்க சொல்லவும் இல்லை. அதில் கூட ஒரு நகைச்சுவை, பகுத்தறிவுக்கு எதிராக இருந்தது. அதை படித்து ரசித்தாரே தவிர அதுபற்றி தன்னுடைய கருத்தை சொல்லவில்லை.. எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள்.
இந்நிலையில் நான் மாலைமலர் பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னை வந்தேன். அவரும் ஓய்வு பெற்று திராவிடக்கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி அழைப்பின்பேரில் சென்னை பெரியார் திடல் வந்தார். அப்போது அவரை நேரில் சந்தித்து பேசினேன். ஆனால் அவரது உண்மையான பகுத்தறிவு கொள்கை அவரை மீண்டும் சொந்த ஊருக்கே வரவழைத்தது. அதன்பின் அவர் இலங்கை சென்று தலைவர் பிரபாகரன் மனைவி உள்பட தமிழர்களுக்கு பாடம் நடத்தியது, வெளிநாடுகளுக்கு சென்று ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியது போன்ற தமிழ்பணியை நான் அறியும் அறிவை பெறவில்லை. காரணம் பணிச்சுமை என்றுகூட சொல்லலாம்.
நான் தினத்தந்தியில் ஓய்வு பெற்று சொந்த ஊரான கடையம் சென்றபின், ஓய்வு பெற்ற கல்யாணி சிவகாமி நாதன் சார் அறிமுகம் கிடைத்தது. அவர் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் கழக கூட்டத்திற்கு செல்வேன். அப்போது குமாரசாமி சாரும் அங்கு வருவார். மீண்டும் அவரது நிழலில் தங்கி தமிழை ரசித்தேன். இசை ஞானம் இல்லாவிட்டாலும் பாடல்களை ரசிப்பதுபோல் தமிழறிவு இல்லாவிட்டாலும் அவரது தமிழை ரசிப்பேன்.
இந்த நிலையில் திருவள்ளுவர் கழகம் சார்பில் பேராசிரியர் குமாரசாமி சார் அவர்கள் திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள். இதில் பெரும்பாலான வகுப்புகளில் நான் கலந்து கொள்வேன். ஓய்வு பெற்ற பின்னரும் நான் மாணவன் ஆனேன். என்னிடம் கல்லூரியில் கேட்பதுபோல் கேள்வி கேட்பார். எனக்கு பதில் சொல்ல தெரியாவிட்டாலும் அதை பெருமையாக கருதினேன்.
திருக்குறள் வகுப்பில் தன்னுடைய நாத்திக கருத்தை ஒரு நாளும் திணித்தது கிடையாது. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த திருக்குறளுக்கு இப்படி பொருள் கொள்வார்கள் என்று விளக்கம் சொல்வார். கல்லூரியில் ஆனாலும் சரி, இப்படி மற்ற கூட்டங்கள் ஆனாலும் சரி அவர் பேசினால் அவர் ஓர் பகுத்தறிவு கொள்கை உடையவர் என்பதே தெரியாது.
அவர் நடத்திய எத்தனையோ புராண சம்பவங்களை அறிந்திருக்கிறேன். இதை மனதில் வைத்து ஒரு திருக்குறள் வகுப்பில் அவரிடம் சார் எனக்கு ஆன்மிக குரு நீங்கள் தான் என்றேன். சிரித்தார். ஒரு குழந்தையின் மழலை பெற்றோரை ரசிக்க வைக்கும். அதேபோல் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நான் சொல்வதை ரசித்தார். மேலும் நான் சொன்னேன். நீங்கள் கடவுளை நம்பாவிட்டாலும் நல்ல மனிதர். உண்மையான ஆன்மிகத்தின் கருத்துபடி உங்களுக்கும் சொர்க்கம்தான் கிடைக்கும் என்றேன்.
உண்மைதான்… கடவுளை கும்பிட்டுக்கொண்டே ஆட்டூழியம் செய்பவர்களை கடவுள் எப்படி விரும்புவார். தன்னை வணங்கு என்று கடவுள் எங்கே சொன்னார்? இப்படி.. இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுதானே ஆன்மிகம் சொல்கிறது. அந்த வகையில் பார்த்தால் திரு. குமாராசாமி சார் அவர்கள்தான் (என்னை பொறுத்தவரை) உண்மையான ஆன்மிகவாதி. அவர்கள் கடவுளின் பிள்ளை. அவருக்கு எப்படி கடவுள் சொர்க்கத்தை கொடுக்க மறுப்பார்.
பகுத்தறிவுவாதிகள் சொர்க்கத்தை நம்பாவிட்டாலும் எங்களை பொறுத்தவரை அவர் தற்போது சொர்க்கத்தில் மகிழ்ந்து கொண்டிப்பார்.
எத்தனையோ பகுத்தறிவாளர்கள் பேச்சு அளவில் மட்டும்தான் இருப்பார்கள். எத்தனை பகுத்தறிவாளர்கள் தன் உடலை தானம் செய்துள்ளார்கள். எத்தனை பகுத்தறிவாளர்கள் பிரதிபலன் பாராமல் உதவி செய்திருக்கிறார்கள்.
திருக்குறள் வகுப்பு முடிந்தவுடன் அவர் தேவாரப்பாடல்களை இசையுடன் படித்தார். இதை இசைத்தமிழாக படித்தார். ராகத்திற்கு தமிழில் உள்ள பெயரை சொல்லி மெய்சிலிர்க்க வைத்தார். அவர் இசையை தமிழாக பார்த்தார். நாம் இசையை இறைவனாக காண்கிறோம்.
தமிழாய் வாழ்ந்த ஆசானுக்கு இதய அஞ்சலி.
-அன்பு மாணவன் கடையம் ஆ.பாலன்.