June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் மரணம்

1 min read

DMK General Secretary Anbazhagan Passes away

7/3/2020

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியா் க. அன்பழகன் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மரணம் அடைந்தார்.

பேராசிரியர் அன்பழகன்

தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அன்பழகன். இவர் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர். தி.மு.க.தொண்டர்கள்மற்றும் தலைவர்களால் பேராசிரியர் என்று போற்றப்படுபவர். தி.மு.க.ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர்.
இவர் வயது முதிா்வு காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டு மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்டாா்.இதனால் ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிா் பிரிந்தது. அவருக்கு வயது 97

அவர் மறைவு செய்தி கேட்டு தி.மு.க.வின் முக்கிய தலைவா்கள், தொண்டா்கள் நள்ளிரவிலும் அப்பல்லோ மருத்துமனையில் குவிந்தனா்.தொடர்ந்து இரவு 2.20 மணியளவில் அன்பழகனின் உடல் திமுகவின் கொடி போர்த்தப்பட்டு வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. அவங்கு அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

உடல் அடக்கம்

அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, கனிமொழி எம்.பி., ராஜாத்தியம்மாள் ஆகியோர் அன்பழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் சத்யராஜ், ரஜினிகாந்த் ஆகியோர் கீழ்ப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன்

காலமானதையொட்டி, தி.மு.க.வின்

நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரகாலம்

ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பரான அன்பழகன் பிறந்ததும் கருணாநிதி பிறந்ததும் ஒரே மாவட்டம்தான். திருவாரூர் திருக்குவளையில் கருணாநிதியும், காட்டூரில் அன்பழகனும் பிறந்தனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவர் அன்பழகன்.

1922-ம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார் அன்பழகன்.அவரது இயற்பெயர் ராமையா . பின்னாளில் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். படிக்கும்போதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கக் கூட்டங்களை நடத்துவது, கூட்டங்களில் பங்கேற்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.

பேராசிரியர்

படிப்பை முடித்தபின் 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றும்போதே 1957-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எழும்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1957-ல் எழும்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1962-ல் மீண்டும் எழும்பூரில் போட்டியிட்டவர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாச்சலத்திடம் தோல்வி அடைந்தார்.

1962-ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கல்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார் .

1971 – சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் வென்று திமுக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
1977-ல் புரசை சட்டப்பேரவை உறுப்பினர்.
1980-ல் புரசை சட்டப்பேரவை உறுப்பினர். 1983-ல் இலங்கை தமிழ் மக்களின் ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

1984-ம் ஆண்டு பூங்கா நகர் தொகுதியில் வென்றார்.
1989-ல் அண்ணா நகரில் நின்று வென்றார். அப்போது கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1991- ல் சேப்பாக்கத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
1996-ல் துறைமுகத்தில் போட்டியிட்டு வென்று கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
2001-ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

நிதி அமைச்சர்

2006- ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் வென்றார். இம்முறை திமுக அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2016- சட்டப்பேரவைத் தேர்தலில் வயோதிகம் காரணமாகப் போட்டியிடவில்லை.

1977-ம் ஆண்டு முதல் 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச்செயலாளராக மிக நீண்டகாலமாக கட்சிப் பணியாற்றி வந்தார்.

திமுகவின் சோதனையான காலக்கட்டம் என்றால் 1975-ம் ஆண்டு காலகட்டம் எனலாம். அப்போது திமுக தலைவர் கருணாநிதியை ஒதுக்கிவிட்டுப் பலரும் விலகிச் சென்ற நேரத்திலும் விலகாது உடனிருந்தவர் அன்பழகன். அதனால்தான் அவர் இறுதி வரை திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் மதிப்புடன் வைக்கப்பட்டார்.

அன்பழகனுக்கு மொத்தம் 2 மனைவிகள். அதில், முதலாவது மனைவி வெற்றிச்செல்வி கடந்த 1950களிலேயே உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு, சாந்தகுமாரி என்பவரை 2வது மனைவியாக, அன்பழகன் மணந்துகொண்டார். இதில், சாந்தகுமாரி கடந்த 2012ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இரண்டு மனைவியருக்கும் பிள்ளைகள் உண்டு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *