June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரியில் இரட்டைக்கொலை -8பேர் கும்பல் வெறிச்செயல்

1 min read

நபங்குநேரியில் கொலை செய்யப்பட்டவர்கள்

2 person killed in Nanguneri – 8 people gang robbed

15.3.2020

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). நாங்குநேரி அண்ணா சாலையில் ஓட்டல் நடத்தி வந்த இவருக்கு உதவியாக மணிமுத்தாறு அடுத்த உச்சிமேட்டை சேர்ந்த உறவினர் சொரிமுத்து மகன் சுரேஷ் (20) என்பவர் உடனிருந்து ஓட்டலை கவனித்து வந்தார். 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் வழக்கம்போல் ஓட்டலில் ஆறுமுகமும், சுரேசும் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஓட்டலுக்குள் சாப்பிடுவதுபோல் நுழைந்து சுரேசை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதைப்பார்த்து ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். சுரேசின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த ஆறுமுகம் அங்கு வந்து அக்கும்பலை தடுத்த போது அவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பினர். இதில் சுரேஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆறுமுகமும் இறந்தார்.

தகவலறிந்து நெல்லை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகிரண் பிரசாத், நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோ, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன்ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இரட்டைக்கொலை சம்பவம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி, மாடன் கோயில் தெருவைச் சேர்ந்த அருணாசலம் – சண்முகத்தாய் தம்பதியின் 2வது மகன் நம்பிராஜன் (21). பால் பண்ணையில் வேலை செய்து வந்த இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, வெட்டு குத்து, தீ வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதே ஊர் கீழத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதியை (18) காதலித்த நம்பிராஜன், வான்மதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு நெல்லை டவுன் வயல் தெருவில் காதல் தம்பதி தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 25ம்தேதி இரவு நம்பிராஜன் வீட்டிற்கு சென்ற அவரது நண்பர் முத்துப்பாண்டி, மது குடிக்க நம்பிராஜனை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் குறுக்குத்துறை ரயில்வேகேட் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு, மறைவான இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே புதரில் பதுங்கியிருந்த கும்பல் பாய்ந்து வந்து நம்பிராஜனை சரமாரியாக வெட்டி தலையை துண்டித்ததோடு, ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதைப் போல் வழக்கை திசை திருப்ப அவரது உடலை குறுக்குத்துறை தண்டவாளத்தில் வீசிச் சென்றனர்.

இரவு வெகுநேரமாகியும் கணவர் நம்பிராஜன் வீடு திரும்பாததால் மாமனார் அருணாசலத்திடம் போனில் தெரிவித்த வான்மதி டவுன் போலீசிலும் புகார் செய்தார். போலீசார் நம்பிராஜனை தேடி வந்த நிலையில் அவரது உடலையும், தலையையும் குறுக்குத்துறை ரயில் தண்டவாளத்தில் மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நம்பிராஜன் – வான்மதியின் காதல் திருமணத்தை விரும்பாத வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி உள்ளிட்ட 5 பேர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வான்மதி அண்ணன் செல்லச்சாமி, உறவினர்கள் முத்துப்பாண்டி, ஆறுமுகம் மகன் செல்லத்துரை, முருகன், விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள், ஜாமீனில் வெளியே வந்து சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். நம்பிராஜன் கொலைக்கு பழிக்குப்பழியாக செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர் சுரேஷ் ஆகியோரை நம்பிராஜனின் ஆதரவாளர்கள் கூலிப்படை மூலம் கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டைக் கொலை சம்பவத்தையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மறுகால்குறிச்சி பகுதியில் டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *