June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐசோலேஷன் வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகள்

1 min read
Train sets that become isolation wards

28/3/2020

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஐசோலேஷன் வார்டுகள் (தனிமை வார்டு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தால், கூடுதலாக ஐசோலேஷன் வார்டுகள் தேவைப்படும் என்பதால் இதர பொதுத்துறை நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இதன்பேரில் ரயில்வே துறை மூலம் ரயில் பெட்டிகளை ஐசோலேஷன் வார்டுகளாக மாற்றி கிராமபுறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து இதற்கான பணிகளை தொடங்க உத்தரவிட்டார். இதன்பேரில், ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் ரயில் பெட்டிகளை ஐசோலேஷன் வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஐசோலேஷன் வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டியின் படங்களை, சமூக வலைதளத்தில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார். அவர், ‘‘கொரோனா வைரஸை எதிர்த்து போராட தயாராகிவிட்டேன்,’’ என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், ரயில்வே பணியாளர்கள் மூலம் ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கான தனிமைபடுத்தும் வார்டாக மாற்றியுள்ளோம். நோயாளிகள் சுகமடைய ரயில்வே சுத்தமான சுற்றுப்புறத்தை அளிக்கிறது,’’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ஹரியானா மாநிலம் ஜகத்ரி ரயில்வே ஒர்க்‌ஷாப்பில், இந்த ஐசோலேஷன் வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் நோயாளிக்கான அறை, படுக்கை, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருக்க தனி கேபின், மருந்துகள் வைக்க தனிப்பகுதி, சுகாதாரமான கழிவறை போன்றவை இருக்கிறது. இந்த ஐசோலேஷன் வார்டு தனி ரயில் பெட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ரயில்வே நிர்வாகம் தயாராகியுள்ளது. இதேபோல், மற்ற ரயில்வே மண்டலங்களிலும் ரயில் பெட்டிகளில் ஐசோலேஷன் வார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *