ஆன்-லைன் வர்த்தகம் எனகூறி பல லட்சம் மோசடி; இருவர் கைது
1 min read31/3/2020
வெளிநாட்டில் இயங்கி வரும் ஆன்-லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம் எனக்கூறி பல லட்சம் மோசடி செய்த ஈரோட்டைச் சேர்ந்த பட்டதாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோசடி
ஒரு காலத்தில் வாய் வார்த்தைகளால் ஏமாற்றி மோசடி பேர்வழிகள் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால் இப்போது இணைய தளம் மூலமாக சிலர் தங்கள் மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.
எப்படியாவது சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என குறுக்கு வழிகளை யோசிப்போரை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறத.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த போலீஸ்காரர் சுரேஷ் மற்றும் அவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போன் மூலம் புகார் செய்தனர். அதாவத சர்வதேச கும்பல் ஒன்று மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டி வருவதாக அவர்கள் புகார் அளித்தனர்.
இணைய தளம்
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் புகார் அளித்த 2 பேருமே மோசடி கும்பலால் பணத்தை இழந்தது தெரியவந்தது.
வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரனாகி செட்டிலாக வேண்டும் என எண்ணிய சுரேசும் அருள்ராஜனும் அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என இணையத்தில் தேடி இருக்கின்றனர்.
இவர்களைப் போன்ற எலிகளுக்கு என்றே பொறிகளை வைத்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இணைய மோசடி கும்பலில் ஒன்று, இருவரது செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டுள்ளது.
ஆண்டர்சன் என்ற பெயரில் ஸ்கைப் செயலி மூலம் பேசியவன், தங்களது ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த நாளில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியுள்ளான்.
அதற்காக தங்கள் நிறுவனத்தின் கிளை முகவர்கள் என்ற பெயரில் ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை அறிமுகம் செய்திருக்கிறான் ஆண்டர்சன்.
ரூ.57 லட்சம்
அதன் பின்னர் சுரேஷையும் அருள்ராஜையும் தொடர்புகொண்ட பிரவீன்குமார், விஸ்வநாதன் ஆகியோர் இருவரிடமிருந்தும் தலா ஒரு லட்ச ரூபாயைப் முதலீடாகப் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டி என்று கூறி 15 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெற்ற சுரேசும் அருள்ராஜும், தங்களது நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் இந்த ஆன்-லைன் வர்த்தகத்தில் இழுத்துவிட்டுள்ளனர்.
சில தினங்கள் கழித்து, மோசடி கும்பல் தரவிறக்கம் செய்யச் சொன்ன அப்பிலிக்கேஷன் ஒன்றை தங்களது லேப்-டாப்பில் சுரேசும் அருள்ராஜும் தரவிறக்கம் செய்துள்ளனர்.
அடுத்த நொடி, அவர்களது வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, சுரேசின் கணக்கிலிருந்த 50 லட்ச ரூபாயும் அருள்ராஜின் கணக்கிலிருந்து ஏழரை லட்ச ரூபாயும் சுரண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தகவல்களைப் பெற்ற மாவட்ட காவல்துறை விரைவாக செயல்பட்டு, ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன்குமாரையும், விஸ்வநாதனையும் கைது செய்தது.
அவர்களிடமிருந்து 9 லட்சத்து 70,ஆயிரம் ரூபாய் பணம், 25 டெபிட் கிரிடிட் கார்டுகள், 9 லாப்டாப்கள், 7 செல்போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இதே பாணியில் இருவரும் ஏராளமானோரை ஏமாற்றி பல கோடி ரூபாயை மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.