அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
1 min read
வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2.4.2020
சென்னை மக்களுக்கு அரிசி தேவையை பூர்த்தி செய்து வந்த ஆலைகள் மூடப்பட்டிருப்பதால், வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ந் தேதியோடு இந்த ஊரடங்கு முடியுமா? அல்லது நீடிக்குமா? என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
குறிப்பாக அரிசி போன்ற பொருட்கள் 2 மடங்கு விற்பனையாவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். சென்னையின் அரிசி தேவையை காஞ்சிபுரம், செங்குன்றம், பொன்னேரி பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகள் பூர்த்தி செய்து வருகின்றன.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த இது போன்ற அரிசி ஆலைகள் ஊரடங்கால் இயங்கவில்லை. ஏற்கெனவே இருப்பில் இருந்த அரிசி மூட்டைகளை மட்டுமே மொத்த வியாபாரிகள் வாங்கி வைத்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஒரு கிலோ 30 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 100 ரூபாய் வரை விற்பனையாகும் அரிசி ரகங்கள் உள்ளன. இவற்றை மொத்த வியாபாரிகள் வழக்கமான விலையில் கடைகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.
வழக்கமாக ஒரு மூட்டை அரிசி, ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்படும் சில்லறை வர்த்தக கடைகளில், நூறு ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்பதாக புகார் கூறப்படுகிறது.
தற்போது அரிசி ஆலைகள் செயல்படாத நிலையில் மொத்த வியாபாரிகள் கையில் இருக்கும் அரிசி விற்று தீர்ந்துவிட்டால் வரும் நாட்களில் தட்டுபாடு ஏற்படும் சூழலும் உள்ளதாக கூறப்படுகிறது.