June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை -தம்பதியை வீட்டுக்குள் பூட்டி விட்டு மர்மநபர்கள் கைவரிசை

1 min read
100-pound jewelery robbery at Thoothukudi port employee’s home

3.4.2020

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரிய செல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் (59). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் தூத்துக்குடியிலும், மற்றொருவர் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்றிரவு வழக்கம்போல மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு வீட்டின் உள்அறையில் அயர்ந்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் 3ம் தேதி அதிகாலை 4 மணியளவில் எழுந்த வின்சென்ட் முன் அறைக்கு செல்வதற்காக கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கதவை உடைத்து திறந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர்கள் நபர்கள் வீட்டின் முன்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வின்சென்ட் தங்கியிருந்த அறையை பூட்டிவிட்டு பக்கத்து அறைக்குள் புகுந்து அங்கு பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வின்சென்ட், தாளமுத்து நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டின் முன்பக்க கதவு வழியாக கையைவிட்டு திறந்த மர்ம நபர்கள், வின்சன்ட் தம்பதியினர் தங்கியிருந்த அறைக் கதவை வெளியே பூட்டி விட்டு தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 31 லட்சம் ஆகும்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு மாதா நகர் வரையில் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையில் தெருவின் துவக்கத்தில் கொள்ளை நடந்த வீட்டின் அருகே 2 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளனவா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் துணிகரமாக நடந்த இந்த கொள்ளை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *