May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

மலர் டீச்சர் பாசாயிட்டாங்க… (சிறுகதை) எழுதியவர் கடையம் பாலன்

1 min read

Malar teacher pass aayittakga – Story By Kadayam Balan

மலர் டீச்சர் பாசாயிட்டாங்க…(சிறு கதை) எழுதியவர்- கடையம் பாலன்

“டேய் நம்ப பள்ளிக்கூடத்துக்கு புது டீச்சர் வாராங்களாம்…”
“ஆமாடா அந்த டீச்சர் பேரு மலராம்.”
“சிதம்பரம் வாத்தியார் பிரம்போட வந்தாரு இரண்டு மாசம் கூட தாக்குபிடிக்க முடியலை. எப்படியோ வேற இடத்துக்கு மாத்தி வாங்கிக்கிட்டு போயிட்டாரு. மலரு டீச்சரு எத்தன மாசம்தானோ?”
&இப்படி மாணவர்கள் பேசிக்கொண்டிருக்க…
பிரகாஷ் அங்கே வந்தான், “டேய் நம்மக்கிட்ட நல்ல பிள்ளையாடடம் நடந்துகிட்டா அவங்க ஏண்டா மாறிப்போகணும். இங்கே வேலை பார்க்கலாமில்ல” என்றான்.
பிரகாஷ் சேட்டைக்கார மாணவன் என்பதைவிட, குட்டி ரவுடி என்றே சொல்லலாம். அவன் தலைமையில் ஒரு மாணவக் கூட்டமே சுற்றித்திரியும்.
அது அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி. தாளாளர் அவனுக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்பதால் அவனை எந்த வாத்தியாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிரகாஷ் சரியாக படிக்கவில்லை என்றாலும் அவனை அடுத்தடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற செய்துவிடுவார்கள் ஆசிரியர்கள். அவனுடன் சுற்றித்திரியும் மாணவர்கள் சேட்டை செய்தாலும் தனியாக பயிற்சி எடுத்து படித்துவிடுவார்கள். அது அந்த மாணவர்களின் பெற்றோரின் கடும் முயற்சி.
ஆனால் பிரகாஷ் பெற்றோருக்கு கட்டுப்படுபவன் இல்லை. அவன் பள்ளிக்கூடத்தில் நடத்திவரும் அராஜகத்தை வெளியே சொன்னால், சொன்னவர்கள் பாடு அவ்வளவுதான். அவனைப்பற்றி அவனது பெற்றோரிடம் சொல்ல எந்த ஆசிரியருக்கும் தைரியம் இல்லை.
இப்படி மாணவர்களை தறிகெட்டபடி அலையவிடுவதால்தான் கடந்த இருபது ஆண்டுகளாக பள்ளிக்கூடம் எந்த முன்னேற்றமும் இன்றி பெயரளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
பிரகாஷ் இதுவரை எந்த தடங்கலும் இன்றி பத்தாம் வகுப்புக்கு வந்தாகிவிட்டது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவன் கவலைப்பட வில்லை.
பிட் அடித்து எப்படியாவது பாசாகிவிடலாம். ஆனால் எந்தக் கேள்விக்கு எந்த பிட் என்றாவது தெரியவேண்டுமே… அதற்குத்தான் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் அவனுக்கு பெரிய மலைப்பாக இருந்தது. ஆனாலும் எப்படியும் அதற்கு பழகிக் கொள்ளலாம் என்ற முழு நம்பிக்கையும் அவ-னுக்கு இருந்தது.
அன்றைய தினம் வகுப்பு ஆரம்பமாகிவிட்டது. முதல் வகுப்பே மலர் டீச்சர் வகுப்புதான். அவரை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் வந்தார்.
“மாணவர்களே இந்த ஆண்டு உங்களுக்கு முக்கியமான ஆண்டு. பொதுத்தேர்வு. நீங்கள் நல்லபடியா படிக்க, உங்களை படிக்க வைக்க இந்த புது டீச்சர் வந்திருக்காங்க. இவங்க பேரு மலர். இவங்கதான் உங்க வகுப்பாசிரியர். அவங்க சொன்னபடி கேட்டு படிச்சிங்கன்னா நீங்க ஆல் பாஸ் ஆயிடுவீங்க. பெஸ்ட் ஆப் லக். மிஸ்சஸ் மலர் இவங்கள உங்கள நம்பித்தான் விடுறேன். இவங்க எதிர்காலமே உங்க கைலதான் இருக்கு” என்று பேசிவிட்டு சென்றுவிட்டார்.
மலர் டீச்சர் வகுப்பு எடுக்கும் முன் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்.
அவர் ஓர்அப்பாவிதான். எம்.ஏ. ஆங்கிலம் மற்றும் பி.எட். படித்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றியவர். திருமணம் ஆனவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னையில் வேலை. அவரது கணவர் ராணுவத்தில் பணி நிறைவு பெற்று தற்போது நெல்லை மாவட்டத்தில் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதனால் மலரும் தனது வேலையை இங்கே மாற்றி வந்துவிட்டார். உடனடியாக வேலைக்கு இந்த பள்ளிதான் கிடைத்தது.
உண்மையிலேயே அப்பாவியான மலர் எப்படித்தான் இந்த வகுப்பை சமாளிக்கக் போகிறாரோ?
“அந்த பள்ளிக்கூடம் மோசமான பள்ளிக்கூடம். பசங்க படிச்சா படிக்கிறாங்க… படிக்காட்டி எங்கேடு கெட்டும் போகட்டும். ரொம்ப கண்டிச்சி அவங்ககிட்ட பிரச்சினைய வளத்துகிடாதே.” என்று உறவினர் ஒருவர் அறிவுரை வழங்கித்தான் அனுப்பினார்.
தலைமை ஆசிரியர் போனபின் மாணவர்களின் தாண்டவம் தொடங்கியது.
“டீச்சர் நீங்க இங்க புதுசு. மாணவர்களை நானே உங்களுக்கு அறிமுகம் செய்றேன்” என்று பிரகாஷ் கூறினான்.
அவனுக்கு ஒரு புன்னகையை மட்டும் செலுத்திவிட்டு அமைதியாக இருந்தார் மலர். ஒவ்வொரு மாணவரையும் பட்டப்பெயருடன் அறிமுகம் செய்து வைத்தான். இறுதியில் டீச்சர் ஒங்களபத்தி… என்றவுடன் மலர் டீச்சர் தன்னைப்பற்றி சுருக்கமாக சொன்னார்.
“நான் எடுப்பது ஆங்கிலம்தான் என்றாலும் எந்த பாடத்தில வேணுமின்னாலும் சந்தேகம் கேட்கலாம். ஏன்னா… நீங்க எல்லாப் பாடத்திலேயேயும் பாஸ் பண்ணினாத்தான் நம்ம வகுப்புக்கு பெருமை” என்று சொல்லி முடித்தார்.
அன்றைய வகுப்பு ஒரு யுகம் கடந்ததுபோல் கழிந்தது.
அடுத்த வகுப்பு எடுக்க வந்த பழைய ஆசிரியர், மலரிடம், “மேடம் நாங்க எங்க பாடத்தை நடத்த மட்டும் செய்வோம். மத்தபடி இந்த வகுப்பு பசங்களை எங்களால கட்டி மேய்க்க முடியாது. இது உங்க வகுப்பு. நீங்க படிக்க வச்சி பாசாக்கிறது உங்க பொறுப்பு” என்றார்.
அந்த ஆசிரியர் இப்படி பொறுப்பில்லாமல் சொன்னது மலர் டீச்சரை கொஞ்சம் அதிர வைத்தது உண்மைதான்.
மறுநாள் வகுப்பில் மாணவர்களிடம், “நான் தினமும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு பாடத்திலும் டெஸ்ட் வைப்பேன். இந்த டெஸ்டை நீங்கள் ஒழுங்காக எழுதினால் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பாசாகிவிடலாம்” என்றார், மலர் டீச்சர்.
அதன்படி முதல் நாள் ஒரு பாடத்தில் டெஸ்ட் வைத்தார். அதில் ஒருசில மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதினார்கள். பல மாணவர்கள் எதுவுமே எழுதாமல் வெறும் பேப்பரை கொடுத்திருந்தார்கள்.
ஆனால் எந்த மாணவரையும் மலர் கண்டிக்கவில்லை. சிரித்த முகத்துடன் அவர்கள் எழுதிய விடைத்தாளை விமர்சிக்காமல் கொடுத்துவிட்டார்.
அடுத்த நாள் டெஸ்ட்டுக்கு வந்தபோது அவரது மேஜை டிராயர் திறந்து இருந்தது. இதனால் மலருக்கு கொஞ்சம் கோபம்தான். ஆனால் அதை வெளிக்காட்ட முடியவில்லை.
அதேநேரம் அன்று பல மாணவர்கள் நல்லமுறையில் தேர்வு எழுதினார்கள். பிரகாசும் ஒன்றிரண்டு கேள்விக்கு சரியான பதில் எழுதி இருந்தான். மேஜை டிராயரில் வைத்திருந்த வினாத்தாள் மாணவர்கள் பார்த்திருந்தது மலருக்கு புரிந்தது.
சரியாக எழுதாத கேள்வியை இம்போஸிஸன் எழுதச் சொன்னார் மலர். சிலர் எழுதி வந்தார்கள். பலர் எழுதி வரவில்லை. பிரகாஷ் ஒருமுறை எழுதி அதை போட்டோநகல் (ஜெராக்ஸ்) எடுத்து தன்னை கில்லாடியாக காட்டிக் கொண்டான். அவனின் தவறான போக்கு மலருக்கு தெரிந்திருந்தாலும் அவனை கண்டிக்கும் தைரியம் இல்லையே. அதை கண்டும் காணாதது போல் மலர் இருந்துகொண்டார்.
ஆனால் இந்த இம்போஸிஸன் தண்டனை எல்லாம் இவனுக்கு சரிபட்டு வராது என்பதை புரிந்து கொண்டார்.
தினமும் டெஸ்ட் வைப்பதை மட்டும் தொடர்ந்தார். ஆனால் அதில் சிறிது மாற்றம் நாளை எழுத வேண்டிய கேள்வியை முன்கூட்டியே சொல்லிவிடுவார். ஆனால் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு கேள்வி என்ற முறையில் கொடுப்பார். இதனால் மற்றவரை பார்த்து காப்பி அடிக்க முடியாது. மலர் டீச்சரின் இந்த அணுகுமுறை ஓரளவு மாணவர்களுக்கு பலனை கொடுத்தது.
எந்த மாணவர் காப்பி அடித்தாலும், “என்னப்பா… நான்தான் கேள்விய முன்கூட்டியே உனக்கு சொல்லிவிட்டேனே… அதையுமா உன்னால எழுதமுடியலியா?” என்று அன்பாக பேசி அவன் காப்பி அடிப்பதை தடுத்தார்.
ஆனால் பிரகாஷ் விசயத்தில் எதுவும் நடக்காது என்பது புரிந்துகொண்டார். அவன் காப்பி அடிப்பதை கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இதை தனது கவுரவம் என்றே அவன் கருதி கொண்டான். இப்படி பிரகாஷ் பிட் வைத்து தொடர்ந்து எழுதி வந்தான். அதை மற்ற மாணவர்களிடம் பெருமையாகவும் பேசிவந்தான்.
“பொதுத் தேர்வுக்கு என்னடா செய்வே?” என்று நண்பர்கள் கேட்டதற்கு, “அதற்குத்தான் இப்போதே பிட் வைத்து எழுத பழகிக் கொண்டேனே” என்பான்.
பொதுத்தேர்வு நெருங்கி வரவர மலருக்குத்தான் பயம் மேலோங்கியது. இன்னும் சொஞ்சம் பிரயாசைப்பட்டால் போதும். ஆனால் பிரகாஷ் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்தான். அவனைத் தவிர மற்றவர்களை எப்படியும் தேர்ச்சி அடைய வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்தார்.
தேர்வு நெருங்கியது. இந்த பள்ளிக்கூடம் பற்றி மேலிடத்திற்கு ஏற்கனவே பல்வேறு புகார்கள் சென்றிருந்தன. இந்தப்பள்ளியில் மாணவர்களை அதிக அளவு காப்பி அடிக்க அனுமதித்துவிடுகிறார்கள் என்பதுதான் அந்த புகார். இதனால் இந்த ஆண்டு அந்தப் பள்ளிக்கூடம் மேல் அதிகாரிகளால் தனி கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது.
தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்கும் முன் வெளியூர்களில் இருந்து வந்த மேற்பார்வையாளர்கள் நன்கு சோதனை செய்தார்கள். மிகவும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அதேபோல் மாணவர்களின் இருக்கையும் அதிக இடைவெளிவிட்டு போடப்பட்டு இருந்தது.
எல்லா மாணவர்களுக்கும் காப்பி அடிக்க முடியாத நிலை. பாவம் பிரகாஷ் அவன் கஷ்டப்பட்டு ஒளித்து வைத்திருந்த துண்டுதாள்களில் எழுதி வைத்திருந்த பதில்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டன.
தேர்வு மையத்திற்கு நுழையும்போது, அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. இவன் பிரகாசா என்று சொல்லும் அளவுக்கு அவன் முகம் வாடி இருந்தது. வினாத்தாள் வந்தவுடன் கேள்விகளை படித்தான். அவை அனைத்தும் எதிர் பார்த்த கேள்விதான். எழுதி வைத்திருந்த பதில்கள்தான் பறிக்கப்பட்டுவிட்டதே. அவனால் எப்படி தேர்வு எழுத முடியும்? தவித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது வகுப்பு ஆசிரியை மலர் அந்த வழியாக வந்தார். பிரகாஷ் திருதிருவென விழிப்பதை பார்த்தார். அந்த அறையின் மேற்பார்வையாளரிடம், “சார் இந்த பையனை நான் கொஞ்சம் செக் பண்ணணும்” என்றார்.
“மேடம் நாங்க நல்லாவே பரிசோதிட்டோம்” என்றார் அவர்.
“இல்லை சார், இவன் பெரிய எம்ட்டன். இவனைப்பற்றி எனக்குத்தான் தெரியும். நான் கொஞ்சம் பரிசோதிக்கிறேன்” என்று கூறிவிட்டு, அவன் அருகே வந்து நின்றார்.
“பிரகாஷ் எழுந்திரு” என்றார்.
பிரகாசின் முகம் கடுகடுப்பானது. இத்தனை மாணவர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்துகிறாளே என்று கோபம். தேர்வு முடியட்டும் உனக்கு… என்று மனதுக்குள் வசைபாடியபடி எழுந்தான்.
அவன் அருகே சென்று அவன் சட்டைப் பையை சோதனை செய்வது போல்.., “டேய் பிரகாஷ் எத்தனை டெஸ்ட்ல பிட் வைச்சி எழுதின… அந்த பிட் உன் முன்னால இருக்கிறதா மனசுக்குள்ள நினைத்து எழுதுடா… பதில் தானா வரும்” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.
மலர் டீச்சர் சொன்னபடி கண்ணை மூடிக்கொண்டு பிட்டை மனதால் நினைத்தான். அதிக நாட்கள் எழுதிய டெஸ்ட் கேள்விதானே அவைகள். இதனால் அவன் கண்முன்னால் விடை தெரிந்தது. எழுதினான். 50 சதவீத கேள்விகளுக்கு தடையின்றி அவனால் பதில் எழுத முடிந்தது.
தேர்வு முடிவில் அவன் 55 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று இருந்தான். மலர் டீச்சர் வகுப்பு நூறு சதவீத தேர்ச்சி. பள்ளிக்கூட தாளாளர் உள்பட அனைவருக்கும் ஆச்சரியம். பிரகாஷ் எப்படி பாசானான் என்பதுதான் அனைவருக்கும் வியப்பு.
மலர் டீச்சர் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் காலில் விழுந்தான்.
“டீச்சர் என்னை எப்படி பாஸ்பண்ண வச்சீங்க?”
“நீதானே பரீட்சை எழுதினே…”
“ஆமா டீச்சர் நான் எந்த பாடத்தையும் படிச்சதே இல்லையே… எப்படி என்னால் சரியா எழுத முடிஞ்சது?”
“பிரகாஷ், சிலரை கண்டிச்சி படிக்க வைக்கலாம். சிலரை அன்பா சொல்லி படிக்க வைக்கலாம். ஆனா நீ இந்த இரண்டு விதத்திற்கும் சரிபட்டு வர மாட்டே. ஆனாலும் உன்னை தேர்ச்சி அடையச் செய்து நான் நல்ல பெயர் வாங்கணும்ன்னு ஆசைப்பட்டேன். நீ வகுப்பில் பிட் வைத்து காப்பி அடிப்பதை கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டேன். இதற்காக நீ என்னை கிண்டல் அடிப்பதைக்கூட நான் கண்டுகொள்ளாதது போல் இருந்தேன். உனக்கு மட்டும் முக்கியமான கேள்விகளைத்தான் டெஸ்ட் எழுத கொடுப்பேன். ஒரே கேள்வியை குறைந்தது இருபது முறையாவது கொடுத்திருப்பேன். இதனால் அந்தக் கேள்வி உன்னையும் அறியாமல் உனக்கு மனப்பாடம் ஆகி இருக்கும். இப்போ நீ தேர்ச்சி பெற்றுவிட்டாய். அவ்வளவுதான்.
இப்போது இந்த தேர்வு உனக்கு மட்டும் வெற்றி அல்ல. எனக்கும்தான்.” என்றார் மலர் டீச்சர்.

ஆமாம் மலர் டீச்சர் பாசாயிட்டாங்க…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.