May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மனிதன் வாழ இறைவன் வழங்கியது எதை?

1 min read
What did God give man to live?

மனிதன் வாழ இறைவன் வழங்கியது எதை?

‘மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும்’ என்று எண்ணாத மனிதர்களே உலகில் எங்கும் கிடையாது. ‘என் வாழ்வில் எப்போது இன்பம் வரும்?’ என்று கேட்பவர்களும், சிந்திப்பவர்களுமாகவே பலபேர் காணப்படுகிறார்கள். இன்பம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு காலக்கட்டத்தில் வருவது அல்ல. அவரவர் இந்தப் பூவுலகில் வாழும் ஒவ்வொரு நொடியையும் பூரணமாக அனுபவிப்பதே இன்பம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘கனி தந்தால் கனி உண்ணவும் வல்லீரோ?’ என்று மனிதர்களைப் பார்த்துக் கேட்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, பழம் ஒன்றை உங்கள் கையில் தந்து விட்டால் அதைப் பக்குவமாக சாப்பிடத் தெரியுமா என்பதே அந்த வினா. ஆறறிவு கொண்ட உயர்திணையாக நமக்கெல்லாம் பிறப்பு வாய்த்து விட்டது. ஆனால் எத்தனை பேருக்கு மனித வாழ்வின் மகத்துவம் புரிகிறது?

கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் சிந்துபவர்களும், எதிர்காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களும், நிகழ்காலத்தில் எங்கே வாழ்கிறார்கள்? அனைவருக்கும் வாழ்க்கை ஒருமுறைதான், கடந்து போகும் நிமிடங்கள் கரைந்து போனவைதான் என்பதைக் கூட இன்னும் பல பேர் முழுமையாக உணரவில்லையே!

அறிஞர் ஒருவரிடம் அவர் நண்பர் கேட்டார்: ‘‘ஞானிகள் எல்லோருமே ‘வாழ்வாவது மாயம்! இது மண்ணாவது திண்ணம்!’, ‘காயமே இது பொய்யடா’, ‘இன்றைக்கிருப்பார் நாளைக்கு இல்லை’ என்று அபசகுனமாகவே பாடியிருக்கிறார்களே? இதற்கு என்ன காரணம்? திருவள்ளுவரும், நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் நிலையாமையை ‘நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்றுதானே பாடுகிறார்?’’

நண்பரிடம் ஞானி பதிலளித்தார்: ‘தூங்கையிலே வாங்குகிற மூச்சு, கொஞ்சம் சுழிமாறிப் போனாலும் போச்சு!’ என்ற பாடலையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்படியெல்லாம் நம் பெரியவர்கள் பாடியதின் சூட்சுமத்தை விரிவாகவே உங்களுக்கு உணர்த்துகிறேன்.

உங்கள் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வருகிறார். நீங்கள் சாப்பிடுவதற்காகத் தன் வீட்டில் செய்த பொங்கல், அவியல் மற்றும் மாம்பழம் கொண்டு வருகிறார். இருவரும் கலந்துரையாடுகிறீர்கள். வருபவர் அடிக்கடி ‘பொங்கல், அவியலை உடனே சாப்பிடுங்கள். மாம்பழத்தையும் இரவுக்குள் சாப்பிட்டு விடுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் என்றால், என்ன பொருள்? பொங்கலும், அவியலும் அதே சுவைுயுடன் நெடுநேரம் இருக்காது. மாம்பழமும் நாளை கெட்டு விடும். எனவே இரண்டையும் இப்பொழுதே உண்டால் மகிழ்ச்சி என்பதுதானே அர்த்தம்? பண்டம் கெட்டு விடும், பழம் அழுகி விடும்.

சுவையை இப்பொழுதே இக்கணமே அனுபவியுங்கள் என்பதுபோல உடல் நிலையில்லை, வாழ்க்கை நிரந்தரமில்லை ஒன்று. பலமுறை நம் அருளாளர்கள் சொன்னதற்கு காரணம் வினாடியையும் வீணாக்காதீர்கள். அந்தந்தப் போதை(பொழுதை) ஆனந்தமாக அக்கணமே அனுபவியுங்கள். நிகழ்காலமே மகிழ்காலம் என்பதை நினைவுறுத்தத்தான்!

அபசகுனமாக அவர்கள் பாடவில்லை. சுப சகுனமாக மணித்துளி ஒவ்வொன்றையும் உயிர்ப்போடு அனுபவியுங்கள் என்பதையே அவர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.’’ ஞானியின் விரிவான பதில் அவர் நண்பரை மட்டுமா, நம் உள்ளத்தையும் விரிவுபடுத்தி விசாலமாக்கிவிட்டதல்லவா! வாழ்வின் உண்மையினை அறிந்து அந்தந்த நேரத்தை அவ்வப்பொழுதிலேயே ரசிக்கத் தெரியாதவர்கள் ஆசைகளை பல்லாயிரக்கணக்காக வளர்த்துக் கொள்வதில் என்ன பயன் இருக்கிறது என்று கேட்கிறார் திருவள்ளுவர்.

‘ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல’

புத்தர்பெருமான் ஒருமுறை தன் சீடர்களைப் பார்த்துக் கேட்டார்: ‘ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்?’ சீடர்கள் ஒவ்வொருவரும் அறுபது, எழுபது, ஐம்பது என்று வெவ்வேறு பதில்களைக் கூறினர். அத்தனை பதில்களையுமே அமைதியாக மறுத்த புத்தர்பிரான் புன்னகை பூத்தபடியே சீடர்களை நோக்கினார். சீடர்கள் ஒரு சேர ‘தாங்களே விடை தாருங்கள்’ என்றனர். ‘ஒரு மனிதனின் வாழ்நாள் ஒரே ஒரு மூச்சு’ என்றார் கௌதமர். பதிலில் தெளிவு பெறாமல் திகைத்த சீடர்களிடம் புத்தரே மேலும் விளக்கினார்.

‘ஒவ்வொரு மூச்சிலும் முழுமையாக, அதாவது, கணம் தோறும் உயிர்ப்புடன் வாழ்வதுதான் உண்மையான வாழ்வு!’ சுற்றுப்பயணமாக ரயிலிலோ, பஸ்ஸிலோ போகும்போது பலபேர் அரட்டை அடிக்கிறார்கள். சிலபேர் தூங்கி வழிகிறார்கள். சிலர் செல்போனில் பாட்டு கேட்கிறார்கள். பயணம் சென்ற ஊர்களின் காட்சிகளை முழுமையாக ரசிக்காதவர்கள், அவரவர் வீட்டிலேயே மேற்படி காரியங்களில் ஈடுபடலாமே! அந்த நாள் பயண அனுபவம் மீண்டும் எந்த நாள் வாய்க்கும்?

இப்படித்தான் பலர் மனைவியுடனும், மழலைகளுடனும், நண்பர்களுடனும், உறவினர்களுடனும் அப்போதைய கணங்களின் களிப்பை இழந்து விட்டு மகிழ்ச்சி எப்போது வரும் என்று ஏங்குகிறார்கள். மாரடைப்பால் ஒருவன் இறந்து விட்டான். ‘தான் மரணமடைந்து விட்டோம்’ என்பதை அவனே உணர்ந்த அந்தப் பொழுதில் தன் எதிரே கடவுள் ஒரு கைப்பையுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். கடவுள் அவனிடம் சொன்னார்: ‘உன் பூலோக வாழ்க்கை பூர்த்தி அடைந்துவிட்டது.

உன் உடைமைப் பொருட்களை இந்த கைப்பையில் நான் பத்திரப்படுத்தி விட்டேன். நேரம் ஆகிவிட்டது, வா, போகலாம்,’ என்றார். மனிதன் சொன்னான்: ‘இவ்வளவு சீக்கிரமாகவா? நான் முடிக்க வேண்டிய திட்டங்கள், அடைய வேண்டிய ஆசைகள் பல உள்ளனவே.’ ‘உனக்கான நேரம் அவ்வளவுதான் புறப்படு!’

‘சரி, வருகிறேன். கைப்பையில் வைத்திருக்கும் என் உடைமைகள் என்னென்ன என்று நான் அறியலாமா? நான் சேர்த்து வைத்த என் பணமா? இல்லை என்னுடைய துணிமணிகளா?’ ‘பணமும், துணிமணிகளும் இனி இந்த பூமிக்குச் சொந்தமானவை. அவை கைப்பையில் இல்லை.’ ‘

அப்படியானால் என் நினைவுகளா, இல்லை திறமைகளா?’ ‘நினைவுகளும் திறமைகளும் சூழ்நிலையோடு சம்பந்தப்பட்டவை. அவையும் கைப்பையில் இல்லை.’ ‘அப்படியானால் கைப்பையில் இருப்பது என் ஆத்மாவா?’ ‘ஆத்மா எனக்குச் சொந்தமானது. புரிந்து கொள்.’ கண்களில் நீர் ததும்ப, ‘அப்படியென்றால் என் உடைமை எது என்று நான் தெரிந்து கொள்ள முடியாதா?’ என்று கேட்ட மனிதனிடம், ‘இதோ! கைப்பை! நீயே திறந்து பார்’ என்றார் ஆண்டவன்.

கைப்பையை வாங்கி ஆவலுடன் திறந்த மனிதன் அதிர்ச்சி உற்றான். ஏனென்றால் அது காலியாக இருந்தது.

கடவுள் சொன்னார்:

‘நீ வாழ்ந்த காலம்தான் உன்னுடையது. உனக்கு வழங்கப்பட்ட நொடிகள் ஒவ்வொன்றும் உனக்கு உடைமையாக இருந்தது. அவ்வளவுதான் உன் உடைமை. அந்த காலத்தை மீண்டும் உருவாக்கவோ, சேமிக்கவோ என்னாலும் முடியாது. எனவேதான் கைப்பை காலியாக உள்ளது.’

மனிதனுக்கு வாழ்வதற்காக இறைவன் வழங்கியுள்ளது நேரம் மட்டுமே என்று தெரிந்து கொண்டால் மணித்துளிகள் ஒவ்வொன்றுமே நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.