வேண்டாம்…மீண்டும் ஒரு சுனாமி/ அமுதன்
1 min readNo … another tsunami / Amuthan / Dhanasekaran
23/12/2021
(தினத்தந்தியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய திரு.தனசேகரன் அவர்கள் அமுதன் என்ற பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார்.
இவர் எழுத்துலகில் தனித்துவம் படைத்தவர். இவர் ஆயிரம் ஆண்டு அதிசயம், உலகெங்கும் தமிழர் தடம், மருதநாயகம் என்ற மர்மநாயகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய படைப்புகள் சுவையாக-எளிமையாக இருப்பதுடன் ஆராய்ச்சி பூர்வமாக இருக்கும். தற்போது இந்த கட்டுரையில் சுனாமி பற்றி இலக்கியதில் இடம்பெற்றதையும் அதோடுகூடிய வராற்றையும் எடுத்து தந்துள்ளார்.)
2004 டிசம்பர் 26-ந் தேதி.
உலக மக்கள் மறக்க முடியாத நாள்.
அன்றுதான் இந்தோனேஷியா அருகே பண்டாஏச் என்ற இடத்தில், நடுக்கடலில்
ஏற்பட்ட நில நடுக்கத்தால் வங்கக் கடலில் உருவான சுனாமி அலைகள், இந்தியா
உள்பட 14 நாடுகளை நோக்கிப் பாய்ந்து வந்து, 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களின்
வாழ்க்கைக்கு அவசர முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் சென்றது.
தீராத வடுக்களை விட்டுச் சென்ற அந்தக் கருப்பு நாளின் துயர நினைவுகள், ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதில் இருந்து அகல மறுக்கின்றன.
சுனாமி என்ற ஜப்பான் மொழிச் சொல்லுக்கு “கடற்கரை அலைகள்” என்பது பொருள் என்றாலும், சுனாமியின் வெறியாட்டம், கடற்கரையையும் தாண்டி,
நிலப்பரப்பையும் குறி வைத்து மக்களின் அகால மரணத்திற்குக் காரணமாகிவிடும் என்பதுதான் நிதர்சனம்.
சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சிசிலி என்ற நாட்டில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததால் மத்தியதரைக் கடல் பொங்கி, அங்கே பேரலைகள் உருவாகி,
கடற்கரை நெடுகிலும் வாழ்ந்த ஏராளமானவர்களை எமலோகத்துக்கு அனுப்பியது.
இதுதான் முதல் சுனாமியாக இருக்கலாம் என்று பலரால் அறியப்பட்டு இருந்தாலும்,
1755-ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டைத் தாக்கி 60 ஆயிரம் பேரை பலிகொண்ட பேரலைதான், முதல் சுனாமி என்ற
அவப்பெயருடன் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகி இருக்கிறது.
அதன் பிறகு ஆங்காங்கே சிறிய அளவிலான சுனாமிகள் ஏற்பட்டு இருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட இடங்களில் மனித வேட்டையாடிய 2004-ஆம் ஆண்டு சுனாமி
மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது.
ஆனால், இதற்கும் அதிக அளவிலான சேதத்தை உருவாக்கிய சுனாமியை, கடந்த
காலங்களில் தமிழகம் சந்தித்து இருக்கிறது என்ற தகவலைத் தமிழ் இலக்கியங்கள்
சுட்டிக்காட்டுகின்றன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்துக்கும், ஆப்பிரிக்கா கண்டத்திற்கும்
இடையே இருந்த நிலப்பரப்பு கடற்கோளால் அழிந்தது என்பது சிலப்பதிகாரத்தில்
கூறப்பட்டு இருக்கிறது.
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள..”
(சிலப்பதிகாரம் காடுகாண் 18, 19) என்ற பாடல் மூலம், ஆழிப்பேரலைகள்
தமிழகத்தின் ஒரு பகுதியை அழித்துவிட்டன என்பது புலனாகிறது.
இறையனார் களவியல் உரையில், “முதற் சங்கமிருந்து தமிழாராய்ந்து
கடல்கொள்ளப்பட்ட மதுரை” என்று கூறப்பட்டு இருப்பதால், அந்தக் காலத்திய
மதுரை, கடற்கோளால் அழிந்து, அதில் தப்பியவர்கள் வடக்கே நகர்ந்து, தற்போதைய
புதிய மதுரை நகரை அமைத்தார்கள் என்பது தெரிகிறது.
இதேபோல, கலித்தொகை, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை
ஆகிய நூல்களிலும் கடற்கோள்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கடற்கோளுக்கு முன்பு கபாடபுரம் என்ற பெயரில் மதுரை நகர் விளங்கியது
என்பதை ராமாயணம் சொல்கிறது.
வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன், சீதையைத் தேடுவதற்காக தனது படைகளை அனுப்பும்போது, “வானரர்களே! நீங்கள் செல்லும் வழியில்
பொன்மயமானதும், அலங்கரிக்கப்பட்டதுமான பாண்டிய கபாடபுரத்தைப் பார்ப்பீர்”
என்று கூறுகிறான்.
இதன் மூலம், கபாடபுரம் என்ற நகரம் ராமாயண காலத்தில் இருந்தது என்பதையும், பின்னர் அது கடற்கோளால் அழிந்தது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
கி.மு.305-ஆம் ஆண்டினரான சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரம் என்ற நூல்
இரண்டாம் பாகம் 76-வது அத்தியாயத்தில், முத்துக்களின் வகையை எடுத்துக் கூறும்போது, சிறப்பான முத்தை பாண்டிய வடாகம் என்று குறிப்பிடுகிறார். கவாடகம் என்று அவர் குறிப்பிட்ட கபாடபுரத்தைத்தான் கடல் கொண்டுவிட்டது.
இலங்கையின் பவுத்த சரிதமான ராஜாளி என்ற நூலில், கி.மு.205-க்கும் 161-க்கும்
இடையில் இலங்கையை வென்று ஆட்சி செய்த தமிழ்நாட்டு மன்னரான ஏலேலன் ஆட்சியின்போது, கடற்கோள் ஏற்பட்டு, அது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை அழித்துவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் ஆகியவை கடற்கோளால் முற்றாக அழிந்துவிட்டன என்பதையும், மாமல்லபுரத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கிவிட்டது
என்பதையும் வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று அறிஞர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர், தனது “தி ஜர்னி ஆப் மேன்” என்ற
நூலில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடற்கோளால் பாதிக்கப்பட்ட தென் இந்திய மக்கள், அட்லாண்டிக் கடல் வழியாகவும், குஜராத் வழியாகவும்
இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு நகர்ந்து, சிந்துசமவெளி நாகரிகத்தை ஏற்படுத்தினார்கள் என்றும், பின்னர் அவர்கள் அந்தப் பகுதியை கைவிட்டு, தென்னாடு திரும்பினார்கள் என்றும் கூறி இருப்பதன் மூலமும் தமிழகத்தை ஏற்கனவே
கடற்கோள் தாக்கி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
எது எப்படி என்றாலும், இனி ஒரு கடற்கோள் வேண்டாம் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்.
- அமுதன்.