ஒரு தலைவனுக்குத் தகுதி என்ன?/முத்துமணி, சிவகாசி
1 min readWhat qualifies a leader? / Muthumani, Sivakasi
ஒரு நாள் சென்னையில் முதலமைச்சர் காமராஜ் வீட்டிற்கு அவரின் குடும்ப நண்பர் ஒருவர் வருகிறார்.விருதுநகர் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்.அவர் செலவந்தர். ஒரு தொழிலதிபர். முதல்வர் காமராஜ் அவரிடம், சிறிது நேரம் ஊர் நிலவரம் குறித்துப் பேசுகிறார், பின்னர் விருதுநகரில் வாழும் தன்தாயைப் பற்றிக் கேட்கிறார். அதன்பின்பு, “என்ன விஷயமாக வந்தீர்கள்? என்று கேட்கிறார். அவரும் தான் வந்த காரணத்தை மெதுவாகச் சொல்கிறார்.
“ஒன்றுமில்லை ஐயா.ஊர்ல புதுசா ஒரு தொழில் தொடங்கலாம்ன்னு இருக்கேன்.அதாவது ஒரு காட்டன் மில் கட்டலாம்னுமுடிவு பண்ணி இருக்கேன். அதற்கு நீங்கள் பர்மிஷன் குடுக்கணும்”.
“அப்படியா? நல்ல விஷயம்தானேஎங்க கட்டப் போறீங்க?”
“ஊருல எனக்குச் சொந்தமான நிலமே டவுனுக்குப் பக்கத்துல ஒரு 80ஏக்கர் இருக்கு. அந்த இடத்தில் மில் கட்டினால் வேலை ஆளுங்களும் டவுன்லேந்து வந்து போவது ரொம்ப ஈஸியா இருக்கும். அங்க உள்ளேயே ஒரு பள்ளிக்கூடம் இருக்கு, அப்புறம் குவார்ட்டர்ஸ் அது இதுன்னு எல்லாமே சௌகரியமும் இருக்குது” என்று சொன்னார்.
“
“சரி, புராஜக்ட் திட்டம் பிளான் எல்லாம் கொண்டு வந்துருக்கியா?”
“இப்ப கொண்டு வரலைங்க.ஐயா சொன்னீங்கன்னா உடனே ரெடி பண்ணிடு கொண்டு வந்துடுவேன்.”
“சரி ரெடி பண்ணிக் கொடுங்க. நான் பாத்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்றேன்.”என்று காமராசர் சொல்ல வந்தவரும் விடைபெற்றுச் செல்கிறார்.
இது நடந்து ஒரு வாரம் கழித்து அதே ஊரில், அதே சமூகத்திலிருந்து இன்னொரு தொழிலதிபர், பெரிய தனவந்தர் காமராசரைத் தேடிவருகிறார். அவரும் அதே ஊரில் தானும் ஒரு மில் கட்டப் போவதாகத் தெரிவிக்கிறார்.
“உங்களுக்கென்ன? நீங்க நெனைச்சா ஓண்ணு என்ன?ஊருக்கு ஒரு மில்லு கட்டலாமே? ஆமா ஊர்ல எந்த இடத்தில் மில் கட்டப் போறீங்க?”என்று காமராசர் கேட்டார்.
“நமக்குப் புல்லு முளைக்காத இடம் ஒரு 38ஏக்கர் ஊருக்கு வெளியே இருக்கு. அது சும்மாதானே கிடக்கு. அந்த இடத்திலேயே கட்டடம் கட்டி, அங்கேயே இந்த மில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.”
“ஆமா..அது வறப்பட்டிக்காடுல்ல? அங்கயா? அந்த இடம் டவுன்லேருந்து எத்தனை மைல் தூரம் இருக்கும்? அங்க போகவரபஸ் வசதி இருக்கா?”
“ஊரிலிருந்து தூரம் கொஞ்சம் அதிகம்தான்.இப்ப சின்னதா ஆரம்பிக்கிறேங்க. பின்னாடி பெரிசா பாக்கலாம்னுட்டு” என்று இழுத்தார்.
“சரி, பர்மிஷன் குடுத்தா எப்ப மில்லு ஓடத் தொடங்கும்?”
“ஒரு ஆறு, ஏழு மாசம் ஆவுங்க.ஐயா’
“சரி. நீ வேலைய உடனேஆரம்பி. நான் பர்மிஷன் குடுத்ததாகவே நினைச்சுக்கோ. பார்த்துக்கலாம்.ஆனா நீ ஒரு வேலை செய்யணுமே. மில்லுக்குப் பக்கத்துல முழுசும் உன் செலவுல ஒரு பள்ளிக்கூடம் கட்டித்தரணும். செய்வியா?”
“அதுக்கென்ன கட்டிட்டா போச்சி. அப்ப நான் போயி வேலையப் பாக்குறேன். ரொம்ப சந்தோஷம் ஐயா”
மிகுந்த சந்தோஷத்துடன் கும்பிட்டுவிட்டு புறப்பட்டார்.
இந்த இரண்டு உரையாடல்களின் போதும், தலைவருடன் இருந்தவர் தொழில்துறை செகரெட்டரி, அவர் கேட்டார்
“சார், முன்னாடி வந்தவரு பெரியமில்லு கட்டினா ஒரு 50, 100 பேருக்கு வேலை கெடைக்கும். பள்ளிக்கூடமும் பெரிசா கெடைக்கும். டவுனும் விஸ்தாரமாகும்.
ஆனால்ரெண்டாவது புராஜக்ட் ஊருக்குத் தள்ளி, ரொம்ப அத்துவானமா இருக்குது. பஸ் வசதி கூட கம்மிய்யா. நீங்க அதை ஓகே பண்ணிட்டீங்க”
“செகரெட்டிரி சார், இந்த ரெண்டாவது புராஜக்ட் அதாவது அந்த மில்லுக்குப் போகிற வழியில எத்தனை கிராமம் இருக்கும், சொல்லுங்க சுமாரா?”
“ரெண்டு பக்கமும் பார்த்தா ஒரு 35 கிராமங்கள் இருக்கும்யா.”
“கேளுங்க. இந்த ரெண்டாவது புராஜக்ட் காரனுக்கு மில்லு ஓட்டுவதற்கு எப்படியும் கரண்ட்டு அவசியம். கரண்ட் கம்பம் கம்பி எல்லாம் அவனே இழுத்துக்குவான். அப்ப வழியெல்லாம் போஸ்ட் கம்பத்த அவனே போடணும். நமக்குச் செலவு மிச்சம். அவன் நட்ட கம்பத்திலிருந்து அதுலேர்ந்து இந்த 35 கிராமத்துக்கும் நம்ப கரண்ட்டு குடுக்கலாம்ல? அரசாங்கத்துக்குப் பணம் மிச்சமாவுதுல்ல. அதான் ரெண்டாவது புராஜக்ட்க்கு சரின்னு சொன்னேன்.”
வாயடைத்துப் போனார், செகரெட்ரி.