May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மந்திரச்சாவி – சிறுகதை – முத்துமணி

1 min read

Mantira chavi – Short story By Muthumani

26-5-2020

மதிய உணவு நேரம். வழக்கமான இடத்தில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினார்கள் மாதவியும் சீதாவும்.

 சாப்பிட்டுக்கொண்டே வழக்கமான மாமியார் சண்டை புராணத்தைத் தொடங்கினாள் மாதவி. அவளுடைய மாமியாருக்கு என்பது வயது. காதும் சரி இல்லை கண்ணும் சரி இல்லை .ஆனால் வாய் மட்டும் ஓயவே ஓயாது. எதற்கெடுத்தாலும் என்மகன் என்மகன் என்று உரிமை கொண்டாடிக் கொண்டு, இவளை அவனிடம் அண்ட விடுவதில்லை. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைபோடுவது வாடிக்கை.

கல்யாணமான புதிதில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள் சத்தம் போட்டு சிரித்தாள் மாதவி. “அது என்ன சிரிப்பு? “- இது மாமியார்.

காப்பியைப் போட்டு கலந்து சர்க்கரையைப் போடும்போது வந்துவிடுவா.

“என் மகனுக்கு எவ்வளவு இனிப்பு போடணும் எனக்குத்தான் தெரியும்” என்று பிடுங்கிக் கொள்வார்.
“என் மகனுக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்குத்தான் தெரியும் நான் அவன சுமந்து பெத்து வளர்த்த வா. நீ நேத்து வந்தவ உனக்கு என்ன தெரியும்!” இப்படியே பேசுவா. பிறகு எதுக்கு மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாளாம் இந்தக் கிழவி.

திருமணமான மூன்றாவது நாள் “நாம் இருவரும் சினிமாவுக்குப் போவோம் எங்க அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடு” என்று சுரேஷ் சொன்னபோது மகிழ்ச்சியோடு ஓடிச்சென்று “அத்தை அவர் என்னை சினிமாவுக்கு அழைக்கிறார் போய் வருகிறோம் ” என்று சொன்னதுதான் தாமதம், தாம்தூம் என்று எகிறிப் பாய்ந்து விட்டா அந்தக் கிழவி.

 “இரண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள பொண்டாட்டியை கூட்டிகிட்டு ஊர் சுற்ற கிளம்பிடுவியோ போடா” என்றாள்.

தினமும் சண்டை.

இத்தனைக்கும் சில பெண்களைப் போல மாமியாரை அடியோடு வெறுப்பவள்அல்ல மாதவி. மாமியார் சத்தமாகப்பேசும்போது கூட பதில் பேச மாட்டாள். அதை அசிங்கம் என்று நினைப்பவள் அவள்.

இருவரும் சிரித்துப் பேசினால் கூட அது “என்ன சிரிப்பு குடும்பத்துக்கு ஆகுமா?அவன் கூடவே என்ன பேச்சு ?அந்தக் காலத்துல எனக்கு கல்யாணம் ஆகி அவர் முகத்தை முழுசா பார்க்கவே மூணு வருஷம் ஆச்சு இந்தக் காலத்து புள்ளைக இப்படி வெட்கமில்லாமல் அலையுதுக” என்றாள் கிழவி.

பிறகு ஒரு நாள் சினிமாவுக்கு சென்றபோது கிழவியும் கூடவே வந்து சிவன் கோவில் நந்தி மாதிரி இருவருக்கும் மத்தியில் மறைத்துக்கொண்டு உட்கார்ந்தபோது கழுத்தை நெரித்து கொன்று விடுவோமா என்று கூட தோன்றியது மாதவிக்கு.

சண்டை போட மனமும் இல்லை. இவளை எப்படித் திருத்துவது என்று வழியும் தெரியவில்லை

சுரேஷ் நல்லவர்தான் ஆனால் தாயை கண்டிக்கும் விஷயத்தில் மட்டும் அவர் மோசம். ஒரே ஒரு நாள் “உங்க அம்மா இப்படி பேசுறாங்க” என்று சொன்னபோதே “அவங்க அப்படித்தான் நான் ஒன்றும் சொல்ல முடியாது நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டும் “என்று சொன்னாள்.

“ஏன் இதே வார்த்தையை உங்க அம்மாவிடம் சொல்லிப்பாருங்கள் அவர்கள் என்னை அட்ஜஸ்ட் பண்ணி போகட்டும்” என்று சொன்ன போதும் அவன் ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால்தான் இரண்டு வருடம் ஆகியும் பிள்ளைப்பேறு கூட தள்ளிப்போகிறது. மனம் மகிழ்ச்சியாக இருந்தால் தானே எல்லாம் காலா காலத்தில் நடக்கும்.

-இதையெல்லாம் கேட்ட போதிலும் ,திருமணம் ஆகாத சீதாவுக்கு பதில் ஒன்றும் சொல்ல தெரியவில்லை. ஆனால் “பொறுமையாக இரு எல்லாம் சரியாகிவிடும் “என்று மட்டும் அவள் சொல்லத் தவறியதில்லை.

  அன்று மாலை 3 மணிக்கு கம்பெனியில் பணியாற்றும் அனைவருக்கும் மீட்டிங் நடைபெற்றது.

“இந்த ஆண்டு நம் கம்பெனிக்கு இரண்டு பெருமைகள். ஒன்று சென்ற ஆண்டை விட இரண்டு மடங்கு லாபம். மற்றொன்று உலக அளவில் நம் கம்பெனி தரச்சான்று பெற்றிருக்கிறது” என்று மேனேஜர் பேசியதும் எல்லோரும் கைதட்டினார்கள்.

“இதற்கெல்லாம் காரணம் கம்பெனி முதலாளிகளும் அல்லது நானும் இல்லை. நீங்கள் தான் காரணம். ஏனென்றால் இது உங்கள் நிறுவனம். உங்கள் உழைப்பால் உயர்ந்தது “என்று சொன்னபோது கைத்தட்டு இன்னும் அதிகமானது.

 ரெஸ்ட் ரூம் போய்விட்டு இருக்கைக்கு த்திரும்பும்போது மேனேஜர் ரூமில் உதவி மேனேஜர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“நம் ஸ்டாப் எல்லோரையும் அதிகமாக புகழ்ந்து விட்டீர்கள் சார்” என்று உதவி மேனேஜர் சொல்ல “அதெல்லாம் ஒன்றுமில்லை சுப்பிரமணி வேண்டுமென்றுதான் அப்படிச் சொன்னேன். ஏற்கனவே வேலை செய்வதற்கு வலிக்கும் இவர்களுக்கு. ஏனென்றால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ சம்பளத்திற்காக வேலை செய்கிறோம் என்ற நினைப்பு. அவர்கள் மனநிலை இந்த கம்பெனி வேறு எவனுக்கோ நினைக்கிறாங்க. அதனால் அழுத்தி அழுத்தி இது உங்கள் கம்பெனி உங்கள் உழைப்பால் உயர்ந்தது என்று அந்த உரிமையை அவர்களுக்கு கொடுத்து சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அதிலேயே அவர்கள் மகிழ்ச்சி கைதட்டு. அதனால் கொஞ்சம் பொறுப்போடு வேலை செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கைதான்.” என்றார் மேனேஜர்.

   மாதவிக்குள் ஒரு பொரி தட்டியது .இது ஒரு உளவியல் ரீதியான டெக்னிக். ‘உங்கள் ராஜ் டிவி’ என்று விளம்பரம் செய்கிறார்கள் ‘உங்கள் சத்யராஜ்’ என்று ஒரு நடிகர் சொல்கிறார் ‘உங்கள் சத்யா ஏஜென்சிஸ்’ என்று ஒரு கடைக்காரர் சொல்கிறார். இதெல்லாம் கூட உளவியல் அடிப்படையிலான அணுகுமுறைதான்.

இதையே வீட்டில் நடைமுறைப்படுத்தி பார்த்தால் என்ன என்று யோசித்தாள். ஆம் அதுதான் சரி. மேனேஜர் நமக்குத் தந்தது ஒரு மந்திரச்சாவி. ஙமாலையில் வீடு திரும்பும் போது 100 கிராம் அல்வா வாங்கி கொண்டு வந்தாள். கணவனுக்குப் போன் செய்து சீக்கிரமாக வந்து விடுங்கள் இன்றைக்குச் சினிமாவுக்குப் போகணும் என்று சொல்லி வைத்தாள்.

    “இந்தாங்க அத்தை அல்வா சாப்பிடுங்க”

“ஆமாமா நான் அல்வாவை பார்த்ததே இல்லை. அதிசயமா வாங்கிட்டு வந்துட்டே அவர் வாங்கிக் கொடுக்காத அல்வாவா? என் பையன் வாங்கிக் கொடுக்காத அல்வாவா?” என்றாள் கிழவி.

ஆனால் வாங்கி பொட்டலத்தை பிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

 “இது கூட நான் வாங்கவில்லை அத்தை. வருகிற வழியில் தானே உங்க மகன் ஆபீஸ் இருக்கிறது. உங்கள் மகன் தான் கொடுத்தனுப்பினார்”.

“அப்படியா என் மகன் வாங்கிக் கொடுத்தததா?” என்று கேட்டுக் கொண்டே வேகமாக தின்னத் தொடங்கினாள்.

“நான் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் உங்க மகன் கேட்கவில்லை இன்னிக்கு ஏதோ புது படமாம் ரெடியாயிரு போகலாம்” என்று சொன்னார் அத்தை. எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது .அத்தையும் தனியாக இருப்பார்கள் வேண்டாம் என்றேன் கேட்கல”.

“ஆசைப்பட்டு கூப்பிடுறான் போயிட்டு வாம்மா” என்று கிழவி கூறவும், ஆஹா… மந்திரச்சாவி வேலை செய்கிறது என்பதை உணர்ந்தால் மாதவி. “நீங்களும் வாங்க அத்தை” என்றாள்.

“நான் எதுக்கு மா அங்கு நீங்க ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் போய் வாருங்கள்” என்று சொன்னதும் சாவி பூட்டை திறக்கிறது என்ற சந்தோசம்.

 அதற்குள் சுரேஷ் வந்து விட்டான். “மச மசன்னு நிக்காதே டா நேரமாயிடுச்சி சீக்கிரம் கிளம்பு ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்றாள் கிழவி.

ஆஹா பூட்டு கழண்டு கீழே விழுந்துவிட்டது. “படம் முடிய எப்படியும் ஒன்பது மணி ஆகிவிடும் உங்க மகனுக்கு ஹோட்டலில் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக்காது. சரி நான் வந்து இரண்டு தோசையை சுட்டு இருக்கிற மிளகாய் பொடியை வைத்து சமாளித்துக் கொள்கிறேன்” என்றாள் மாதவி.

“வேண்டாம் அம்மா ஹோட்டலில் சாப்பிட வேண்டாம் அவனுக்கு ஒத்துக்காது படம் முடிஞ்சு நேரா வீட்டுக்கு வாங்க. நான் சூடா இட்லி அவித்து அவனுக்கு பிடிச்ச தக்காளி சட்னியை அரைத்து வைக்கிறேன்” என்று அம்மா சொன்ன போது அவனை ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டு திரும்பி மாதவியை ‘என்ன இது?’ என்பது போல் ஜாடையால் கேட்டான். அவளும் தலையை ஆட்டி கண்களை அசைத்து இனிமேல் எல்லாம் இப்படித்தான் என்பதுபோல் ஒரு ஜாடை காட்டினார்

      அன்று வண்டியில் துள்ளிக்குதித்து அமர்ந்தாள் மாதவி. சினிமா தியேட்டரிலும் ஒரே ஜாலி. அன்று தான் திருமணமானது போல. மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிந்தது. பூ வாங்கி அவன் கையால் வைத்துக்கொண்டாள்.

 “அத்தை சாப்பிட்டீங்களா ? உங்க மகன் பசிக்குதுன்னு அப்பவே சொல்லிவிட்டார் “என்றார்.

 “உட்காருமா உட்காரு நீயும் உட்கார் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்கள்” என்று கிழவி சூடான இட்லி பரிமாறினா

“அது என்னமோ அத்தை நீங்க உங்க கையால சமைச்சு உங்க கையால பரிமாறினா உங்க மகன் நல்லா சாப்பிடுகிறார் என் கையால பிரியாணி சமைச்சு போட்டா கூட எங்க அம்மா சமையல் மாதிரி வருமா அப்படின்னு சொல்லுறார். என்னமோ உங்க பாடு உங்க மகன் பாடு” என்று ஓங்கி அடித்தால் மாதவி.

“சரி சரி சாப்பிட்டுவிட்டு சீக்கிரமா போய் தூங்கு காலையில் ஆபீசுக்கு போனும். இல்ல.”

 படுக்கையறை

.”என்னடி செஞ்ச எங்க அம்மாவை ஒரே நாளில் ” என்றான் சுரேஷ்.

எனக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை வருவதற்கு என்ன காரணம் .உங்களை வைத்துதான் சண்டை. அவங்க நினைக்கிறாங்க நீங்க அவர்களுக்கே சொந்தம் என்று. நான் நினைக்கிறேன் நீங்க என் புருஷன் என்று. அவங்க உங்களை மனதிற்குள் என் மகன் எனக்குத்தான் சொந்தம் என்று வைத்து ஒரு இரும்பு பூட்டைப் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். அதை திறந்தால் ஒழிய நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த நான் அதை திறக்கும் மந்திர சாவியை இன்று தான் கண்டு பிடித்தேன். திறந்து விட்டேன். அது ஒரு மந்திரச்சொல் “உங்க மகன்” என்று சொல்ல நினைத்தாள் ஆனால் சொல்லாமல் மெல்ல சிரித்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 அன்று முதல் வீட்டில் சண்டையும் இல்லை. மாதவிக்கு வீட்டு வேலையும் இல்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இனி கிழவி சாகும்வரை ‘உங்க மகன் உங்க மகன்’ என்பதைச் சொல்லியே எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்த மாதவி ‘என் புருஷன்’ என்ற வார்த்தையை மட்டும் கிழவி இருக்கும் வரை சொல்லவா போகிறாள்?

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.