May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

குப்பை மனம் – சிறுகதை – முத்துமணி

1 min read

Kuppai manam- short story By Muthumani

27-5-2020

சனிக்கிழமை. விடுமுறை. இருவரும் டீவி பார்த்துக்கொண்டிருந்தோம். வெளியில் நான்கைந்து பெயர் பேசிக்கொண்டே நடமாடும் சத்தம் கேட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். நகராட்சி ஜீப் நின்று கொண்டிருந்தது நான்கைந்து அலுவலர்கள் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவருக்கு என்னை தெரிந்திருக்கிறது.

 “சார் உங்க வீடா?” என்று கேட்டார்.

“ஆமா சார் என்ன விசேஷம்” என்றேன்.

“தெரு விளக்கு ஒன்று உங்கள் தெருவில் போட வேண்டும். ஒரு தெருவிற்கு ஒன்றுதான் சாங்ஷன் ஆகியிருக்கிறது. அதனால்தான் எந்த கம்பத்தில் போடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். சார் தான் இன்ஜினியர்” என்று ஒருவரை காட்டினார்.

நான் வணக்கம் சொன்னேன். என்னையும் அவருக்கு அறிமுகம் செய்த அந்த நபர்.

“சார் இந்தத் தெருவில் தெற்கு நோக்கி 15 வீடுகள் வடக்கு நோக்கி 15 வீடுகள் மொத்தம் உள்ளன. மொத்தமாக மூன்று எலக்ட்ரிக் போல்கள் உள்ளன. அதில் எங்கள் வீட்டின் முன் இருப்பதுதான் தெருவுக்கு மத்தியில் உள்ளது. இடது பக்கம் 15 வீடுகள் வலது பக்கம் 15 வீடுகள் எனவே இந்த கம்பத்தில் லைட் போட்டால் வெளிச்சம் எல்லோருக்கும் வருவதற்கு வசதியாக இருக்கும்” என்று சொன்னேன்.

அதற்குள் என் மனைவியும் வெளியே வந்து அதை ஆமோதித்தாள். வந்தவர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு சென்றார்கள். அன்று மாலையே எங்கள் வீட்டு முன்பு இருந்த மின்கம்பத்தில் சோடியம் லைட் பிரகாசித்தது. தெருவில் உள்ள அனைவரும் ஆர்வத்தோடு வேடிக்கையும் பார்த்தார்கள்.

 நான் என் மனைவியைப் பார்த்து கண்ணடித்தேன்.

“நம் வீட்டு டாப் லைட்டை அணைத்து விடு இனிமேல் நமக்கு மின்சார செலவு குறைவுதான். விடியவிடிய அந்த லைட் எரியும் அல்லவா” என்றேன்.

 இரண்டு மூன்று மரங்கள் போயின.

என் பெயரைச் சொல்லி, “சார்” என்று அழைக்கும் சத்தம் வழியில் போய் பார்த்தேன்.  அதே நகராட்சி அதிகாரிகள்.

“என்ன சார் இப்போ இன்னொரு லைட் போடப் போகிறீர்களா?” என்று கேட்டேன்.
“இல்ல சார் இப்போது உங்கள் தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டி வைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதை வைப்பதற்காக தான் வந்திருக்கிறோம்” என்று லாரி மீது இருந்த பிரமாண்டமான குப்பைத்தொட்டியையும் காட்டினார்கள்.

“ஓ அப்படியா நல்லது. இந்த குப்பை தொட்டியை தெருவின் கிழக்கு மூலையில் அல்லது மேற்கு மூலையில் வையுங்கள்” என்று சொன்னேன்.

“சார் தெற்குப் புறம் முப்பது வீடுகளுக்கும் மத்தியில் வைத்தால் தானே குப்பை கொட்டுவதற்கு வசதியாக இருக்கும் அதனால் உங்கள் வீட்டு முன்னால் தான் வைக்க வேண்டும்” என்று சொன்னார் ஒருவர்.

 “ஐயோ நாற்றமடிக்கும் சார். ஓரமாக வையுங்கள்” என்றேன்.
என்ன சொல்லியும் தடுக்கமுடியவில்லை குப்பைத் தொட்டியை இறக்கி வீட்டு முன்பு வைத்து விட்டு போய் விட்டார்கள்.

 பார்த்தவுடன் எல்லோரும் வந்து அவரவர் வீட்டு குப்பைகளை இங்கு கொட்டத் தொடங்கி விடுவார்கள். நம் வீடல்லவா நாறிப் போகும் என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். என்ன செய்யலாம் என்று யோசித்தோம்…

 இரவு 11 மணி எல்லோரும் தூங்கிவிட்டார்கள். மனைவியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். இருவரும் சேர்ந்து நின்றிருந்த அந்த குப்பைத் தொட்டியை கஷ்டப்பட்டு படுக்கவைத்து மெதுவாக உருட்ட தொடங்கினோம். சத்தம் போடாதே மெதுவா என்று சொல்லிக்கொண்டே வியர்க்க விருவிருக்க கொண்டுபோய் கிழக்கு நோக்கி கடைசி வீட்டு வாசலில் வைத்துவிட்டு வந்து படுத்துக் கொண்டோம்.

 அப்பா பிரச்சனை முடிந்தது என்று. காலையில் வாசல் பெருக்க போனவள் “என்னங்க… என்னங்க…” என்று கத்தினாள்.

 எழுந்து ஓடிச்சென்று பார்த்தேன். அதே குப்பைத்தொட்டி எங்கள் வீட்டு வாசலில் அதே இடத்தில் இருந்தது. என்னடா இது இரவில் தானே கொண்டு போய் அங்கே வைத்தோம் எப்படி வந்தது.

 பகலில் நிறையபேர் குப்பையை போட ஆரம்பித்தார்கள். ஒரே நாற்றம் அன்று இரவும் அதே யோசனை. இப்போது தள்ளிக்கொண்டு போய் தெருவின் மேற்கு எல்லையிலுள்ள வீட்டின் வாசலில் வைத்து விட்டு வந்து விட்டோம்.

மறுநாள் காலையில் அதே குப்பைத்தொட்டி எங்கள் வீட்டு வாசலில் இருக்கிறது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது .

“எப்படியாவது இங்க வந்து விடுகிறது. இதை யார் செய்கிறார்கள்”  என்று இன்றைக்கு கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்து இரவு 11 மணிக்கு உருட்டிக்கொண்டு கிழக்கு மூலையில் வைத்து விட்டோம்.

  “அடியே இரண்டு போர்வையை எடு போர்வையை மூடிக்கொண்டு ஒளிந்திருந்து பார்ப்போம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று.” காம்பவுண்ட் சுவருக்குள் ஒளிந்துகொண்டு எட்டி பார்க்கும்போது,,,

கடைசி வீட்டு கருப்பையாவின் வீட்டுக்குள்ளிருந்து கறுப்பு கலர் துணியைப் போர்த்திக் கொண்டு இரண்டு உருவங்கள் வெளியே வந்தன. இரண்டும் சேர்ந்து குப்பைத்தொட்டியை சாய்த்து உருட்டிக் கொண்டே மேற்கு நோக்கி  வந்தன. கஷ்டப்பட்டு உருட்டிக்கொண்டு வந்த குப்பைத்தொட்டியை எங்கள் வீட்டு வாசலில் வைத்து நிமிர்த்தி வைத்தனர்.

“யாரடா” அது என்று கத்தினேன்ங கறுப்பு துணியை விலக்க கருப்பையாவும் கருப்பையாவின் மனைவியும் நின்று கொண்டிருந்தார்கள். நான் என்ன சொல்ல முடியும்.

====

[4:46 pm, 26/05/2020] Muthumani: மானம் காப்பது

      “வீரம் சேர்ப்பது தாய் நகில் பாலடா. மானம் காப்பது மனைவியின் வார்த்தையடா ” என்பதுபாரதியின் கவிதை வரி.

 என் மனைவி  என்னிடம் எப்படிப் பேசினாலும்  பிறரிடம் என்னைப் பற்றி எவ்வாறு பேசுகிறாள் என்பதை வைத்துத்தான் என் மானம் காக்கப்படும். “தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்று வள்ளுவன் சொல்லும்போது தகைசான்ற சொல் காப்பவள்.

 ஆத்திரத்தில் நாம் எதையாவது பேசி விட்டாலும் அவள் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் தகுதியான வார்த்தைகளை மட்டுமே பேசுவாள். அப்படிப் பேசினால் தான் ஆண் மானத்தோடு வெளியில் தலைகாட்டலாம்.

 ஒரு நாள் நான் வீட்டில் இல்லாத நேரம் எங்கள் வீட்டில் நடைபெற்ற சம்பவத்தை சுவைபட அப்படியே சொல்லுகிறேன்.

    அலைபேசி இல்லாத காலம். மாலை ஐந்து மணி வீட்டில் தொலைபேசி அழைத்தது. இவள் போனை எடுத்து “ஹலோ” என்று சொல்ல, எதிர்முனையில் ஒருவர்” வணக்கம் அம்மா… பட்டிமன்ற நடுவர் தமிழ் ஐயா நகைச்சுவைத் திலகம் சிரிப்பு வெடி கலைமாமணி முத்தமிழ் வித்தகர் முனுசாமி வீடு தானே” என்றது.

“ஆமா ஆமா” என்றாள் அலுப்போடு.

“ஐயா இருக்கிறார்களா அம்மா?”.

“இல்லை, அது இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்றாள்”.

“அப்படியா அம்மா?” -இது அவன்.

“வெளியில் போய் இருக்கு” என்றாள்.

“ஐயா எங்கே போயிருக்கிறார் என்ன விஷயமாக போயிருக்கிறார் என்று தெரியுமா அம்மா?” -இது அவன் கேட்டது.

 “அது எங்கு போய் இருக்குன்னு எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லவும் செய்யாது” – இது இவள்.
“எப்போ வருவாருன்னு சொல்லுங்கம்மா”.

 “அது சாயங்காலமும் வரும் சாமத்துலயும் வரும். எனக்கு தெரியாது” என்றாள்.

“ஒன்றும் இல்லை அம்மா… சாயல்குடியில் இருந்து பேசுகிறோம். நாளைக்கு எங்கள் ஊரில் பட்டிமன்றம். ஐயாவிடம் எல்லா விஷயமும் பேசி விட்டோம். சாப்பாடு தொடர்பாக எதுவும் பேசவில்லை. ஐயா எதை விரும்பி சாப்பிடுவார்கள்? என்பதைத் தெரிந்துகொண்டால் அதைத் தயார் செய்யலாம் என்பதற்காகத்தான் பேசுகிறேன்” என்றான் அவன்.

உடனடியாக இவள் “அது எதைப் போட்டாலும் மேயும் “என்றார்.

ஒரு நிமிடம் அமைதிக்குப் பிறகு, “சரி அம்மா வீட்டுக்கு வந்தா வழக்கமா கட்டி போடுற இடத்துல கட்டி போட்டு வையுங்க. நாளைக்கு சாயங்காலம் அவுத்து விடுங்க. நாங்க இங்க பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் வாங்கி நனையப்போட்டு வச்சிடுறோம். பின் தண்ணி காட்டிடுறோம். எங்கள் ஊரில் வைகோலுக்கும் பஞ்சமில்லை.” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் அவன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.